
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆட்சிக் கவிழ்ப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. தற்போது நேபாளில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் பங்களாதேஷில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. இலங்கையிலும் வன்முறை வெடித்து ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே ஓடினர். சிறிய நாடான மாலத்தீவில் கூட ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தது. ஆனால், அங்கு மட்டும் வன்முறை இல்லாமல் நடந்தது.
நேபாள் ஆட்சிக் கவிழ்ப்பு (Nepal Coup)
தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் ஆட்சி கவிழ்க்கப் பட்டுள்ளது. முழுவதும் இமயமலையில் அமைந்த நாடான நேபாளில் 2006 ஆம் ஆண்டு மன்னரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் வந்த மக்களாட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நேபாளம் பின்தங்கியே சென்றது. நீண்ட காலம் இந்தியாவின் ஆதரவைப் பெற்ற நேபாளம் ஏராளமான சலுகைகளையும் பெற்றது. இந்தியா நேபாள் இடையே பரஸ்பர எதிர்ப்பு இல்லாததால் இரு நாடுகளுக்கு இடையில் பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை. அது போல நேபாளிகள் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் அளவுக்கு நம்பிக்கையும் பெற்றிருந்தது.
சமீப காலமாக நேபாள் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எதிராக இருந்தனர். தங்கள் நாட்டில் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்க்க மக்கள் கொந்தளித்தனர். அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததும் புதிய தலைமுறையினர் பொங்கி எழுந்தனர். GenZ தலைமுறை என்றால் சும்மா வா? அவர்கள் 90ஸ் கிட்ஸ் போல சாப்ட் கிடையாதே! GenZ தலைமுறையினர் பொங்கலில் நேபாள அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி விலக, இறுதியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஓட வேண்டி இருந்தது.
முதல் ஆட்சிக் கவிழ்ப்பு
உலகில் பல நாடுகளில் ஆட்சி கவிழ்ப்புகள் மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மன்னரின் ஆட்சியை இன்னொரு அரச குடும்பத்தினர் அல்லது செல்வாக்கு பெற்றவர்கள் கவிழ்த்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் ஏராளம். கிமு 1115 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் பாரோ மன்னன் மூன்றாம் ராமேசேஸை அவரது ராணிகளில் ஒருத்தியானடையே கொலை செய்து ஆட்சியை கவிழ்த்து தன் மகன் பென்டாவரை அரியணையில் அமர்த்தினாள். வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட முதல் ஆட்சிக் கவிழ்ப்பு இது தான்.
ஜனநாயக ஆட்சி முறையில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்புகளை இங்கு காண்போம். உலகில் அதிக முறையாக ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துள்ளன. உலகின் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு ஆப்பிரிக்காவின் டோகோவில் ஜனவரி 13, 1963 அன்று நடந்தது.
அப்போதைய ஜனாதிபதி சில்வானஸ் ஒலிம்பியோ கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு சூடான், புர்கினா பாசோ மற்றும் நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சிகள் கிளர்ச்சியால் கவிழ்ந்துள்ளன.
இந்தியாவை சுற்றி ஆட்சிக் கவிழ்ப்புகள்
இந்தியாவின் அண்டை நாடுகளில் அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவங்கள் நடைபெறுவது சகஜமான விஷயம். பாகிஸ்தானில் 1958, 1977 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இறுதியாக 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷாரப் , ஜனநாயக முறையில் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 1973 , 1978 ,1979, 2002, 2021 ஆகிய ஆண்டுகளில் பலமுறை ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தானுக்கு கடும் போட்டி வேற. அடுத்ததாக இலங்கையில், 2022 இல் பெரும் வன்முறை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றது.
காரணங்கள்:
ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு மக்கள் மீதான அடக்குமுறை ஒரு காரணமாக இருந்தாலும், அதை விட முக்கிய காரணம் ஒரு நாட்டின் பொருளாதாரம். அடக்குமுறை கொண்ட சில நாடுகளில் இதுவரை பெரிதாக மக்களின் கிளர்ச்சிகள் நடந்தது இல்லை. ஆனால், பொருளாதார நெருக்கடி கொண்ட நாடுகளில் புரட்சி வெடிக்கிறது.
அது போல இராணுவ தளபதிகளுக்கு ஏற்படும் நாட்டை ஆளும் பதவி ஆசைகள், ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் புரட்சிகள் வெடிப்பது இல்லை. தன்னை சுற்றியுள்ள அத்தனை நாடுகளிலும் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தாலும், இந்தியாவில் எப்போதும் கிளர்ச்சி மற்றும் சதியில் மூலம் ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் எவரும் ஆட்சியை கைப்பற்றியது இல்லை என்பது பெருமையாக விஷயம்.