
நம் வீட்டின் முன்பு அழகுக்காகவும், கண்ணுக்கு குளிர்ச்சி தரவும் சில வகை செடிகள் மற்றும் மரங்கள் வைத்து வளர்க்க விரும்புவோம். வீட்டின் நுழைவு வாயில் வழியாகவே நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. எதிர்மறை சக்தியை தரக்கூடிய மரம் செடிகளை வீட்டின் முன்புறத்தில் வைத்து வளர்ப்பது, செய்யும் செயல்களில் தடைகளை உண்டுபண்ணி வெற்றியடையும் வாய்ப்புகளை தடுத்துக்கொண்டே இருக்கும். அப்படியான தாவரங்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
காக்டஸ் (Cactus): காக்டஸ் போன்ற முட்கள் நிறைந்த செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவற்றின் கூர்மையான முட்கள் மன உழைச்சல், உடன்பாடின்மை போன்ற அசௌகரியங்களை வீட்டிற்குள் உண்டு பண்ணும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
போன்சாய் (Bonsai) பிளான்ட்ஸ்: போன்சாய் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் தரும். இருந்தாலும், உயரம் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய குழந்தை போலவும் இது காணப்படுவதால், இதை வளர்ப்பது குடும்ப வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் தடைபடவும், குறையவும் வாய்ப்புள்ளது என்பதை மறைமுகமாக இது உணர்த்துகிறது எனலாம்.
காய்ந்து சருகான உயிரற்ற செடி: இது வீட்டின் முன்புறம் இருப்பது, வீட்டிற்குள் சோர்வுற்ற வளர்ச்சியில்லாத சக்தி நிலவச்செய்யும். இதனால் சுற்றுச் சூழல் இருண்ட தோற்றம் பெறும். இதை உடனடியாக மாற்றிவிட்டு பசுமை நிறைந்த புதிய செடிகளை வைப்பது வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டுவர உதவும்.
புளிய மரம் மற்றும் காட்டன் பிளான்ட்: புளிய மரம் எதிர்மறை சக்தியுடன் தொடர்புடையதாகவும் மென்டல் ஸ்ட்ரெஸ் உண்டுபண்ணக் கூடியது எனவும் கூறப்படுகிறது. காட்டன் பிளான்ட் அதிகளவில் தேவையில்லாத செலவு வைக்கவும், ஆயுள் குறையவும் செய்யும் என கூறப்படுகிறது.
எருக்கஞ் செடி (Milk Grass): இது விஷத்தன்மையுடைய பாலை தன்னுள் கொண்டுள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவு மற்றும் குழப்பத்தை உண்டாக்க வல்லது. எனவே வீட்டருகே இதை வளர்ப்பதை தவிர்ப்பது நலம்.
பழம் தரும் மரங்கள்: மா, சப்போட்டா போன்ற பழ மரங்களை வீட்டின் முன்புறம் வைத்து வளர்க்கும்போது, அவற்றிலிருந்து உதிரும் இலைகள், பூக்கள், அணில் கடித்துப்போடும் கனிகள் என அனைத்தும் சேர்ந்து வீட்டின் முன்பு குப்பை நிறைந்த தோற்றத்தையே தரும். இது குடும்ப வளர்ச்சியை தடுக்கவும், நிம்மதியை கெடுக்கவும் செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
மேலே விவரிக்கப்பட்ட செடி மரங்களை நம் வீட்டின் முன்புற வாயில் அருகே வளர்ப்பதை அறவே தவிர்த்து, வாழ்வில் நிம்மதியும் செழிப்பும் தரக்கூடிய நேர்மறை சக்திகளை ஈர்க்கும் மரம் செடிகளை தேர்ந்தெடுத்து முன்புற வாசல் அருகே வளர்ப்போம். வளம் பெருக வாழ்வோம்.