

கிறிஸ்துமஸ், நியூ இயர் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். விதம்விதமான கேக்குகளை வீட்டிலேயே தயாரிக்க, கடையில் விற்கப்படும் கேக்குகளிலும் பல வெரைட்டிகள், வண்ணங்கள், வடிவங்கள், சுவைகள் நம்மை கவரும்.
இதில் ஸ்பெஷலான 'ப்ளம் கேக்' தயாரிப்பு பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் சமயங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. கேக்கில் சேர்க்கப்படும் உலர் பழங்களை மதுபானத்தில் கலக்கும் நாள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இங்கிலாந்தில் இடைக்காலத்தில் இந்த ப்ளம் கேக்(Plum cake) தயாரிப்பு ஆரம்பமானதாக அறிகிறோம். மக்கள் ஓட்ஸ், தேன் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்துக் பிளம் கஞ்சியாகச் சாப்பிட்டனர். 16 ஆம் நூற்றாண்டில் ஓட்ஸிற்குப் பதிலாக மாவு, வெண்ணெய் சேர்க்கப்பட்டு இது ஒரு கேக் வடிவம் பெற்றது.
கிறிஸ்துமஸ் விழாவை சில வாரங்களுக்கு முன்பாகவே கொண்டாட ஆரம்பிப்பர். அப்போது இந்த கேக் தயாரிப்பானது ஆரம்பித்திருக்கிறது.
இதில் சேர்க்கப்படும் உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் காரணமாக, பிளம் கேக் பல வாரங்கள் கெடாமல் இருக்கும். ப்ளம் கேக் செய்து சில நாட்கள் கழித்துச் சாப்பிடும் போதுதான் அதன் சுவை கூடும்.
மாவு, வெண்ணெய், உலர் பழ வகைகள் கொண்ட இந்த தயாரிப்பில் வைன் போன்ற மது வகைகளும் சேர்க்கப்பட்டன. இதில் சேர்க்கப்படும் உலர் பழங்கள் சில வாரங்களுக்கு முன்பே ஊற வைக்கப்படுகின்றன. ஒரு பெரிய டிரேடயில் எல்லா உலர் பழ வகைகள், மது பானம் ஊற்றி கலக்கப்படும். இந்த தினத்தை, 'ஸ்டிர் ஆஃப் சண்டே' என அழைக்கின்றனர்.
சில வாரங்களுக்கு பின் ஊற வைத்த உலர் பழ கலவையில் மாவு, வெண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது தான் ப்ளம் கேக். கேரளாவில் உள்ள ராயல் பிஸ்கெட் பேக்கரியில் தான் இதை முதன் முதலில் தயாரித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் இந்தியாவில் பல்வேறு இடங்களில், பல்வேறு செயல்முறைகளில் ப்ளம் கேக் தயாரிக்கப்படுகிறது.
இப்போதும் இந்த பேக்கரி கேரளாவில் பிரபலமாக உள்ளது. கேக் தயாரிக்கும் போது பயன்படுத்தப்பட்ட உலர் திராட்சை வகைகளை 'ப்ளம்' என்ற பெயரைக் கொண்டு அழைத்திருக்கின்றனர். எனவே, இதற்கு ப்ளம் கேக் என்று பெயர் வந்திருக்கிறது. பிளம் கேக்குகளில் 'பிளம்' பழங்கள் இருப்பதில்லை.
கறுப்பு உலர் திராட்சை, பேரீச்சம்பழம், செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி, பாதாம், வால்நட், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கேக்கிற்கு அடர் பழுப்பு நிறத்தையும், வாசனையையும் கொடுக்க கேரமல் சிரப் சேர்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலான ப்ளம் கேக் அனைவரின் ஃபேவரிட் என்பதை மறுப்பதற்கில்லை.