

ஜப்பான் ஹோட்டல்களில் டிப்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. டிப்ஸ் கொடுத்தால் அதை தங்கள் சுயகவுரவத்துக்கு எதிராக ஜப்பானியர்கள் நினைப்பார்கள். ஜப்பானில் நாம் சாப்பிடும் பொருளின் விலையிலேயே சர்வீஸ் கட்டணத்தை உட்படுத்தி விடுகிறார்கள்.
ஜப்பானியர்கள் பொது இடங்களில் போன் பேசுவது கிடையாது. ரயிலிலும், பஸ்களிலும் பயணிக்கும் போது நிசப்தத்தை கடை பிடிக்கிறார்கள். இங்கு நடப்பதை நினைத்து பாருங்கள். பொது இடங்களில் மொபைலை வைத்து கொண்டு டம்பமாக பேசுவதும் மிரட்டுவதும் சர்வசாதாரணம்.
ஜப்பானில் தெருக்களில் குப்பை தொட்டிகள் கிடையாது. இருந்தும் சாலைகளும் தெருக்களும் படு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் ஜப்பானியர்கள் தங்கள் தனிப்பட்ட குப்பைகளை தங்களுடன் எடுத்து சென்று எங்கு போட வேண்டுமோ அங்கு போட்டு விட்டு போவார்கள். இந்த விஷயத்தில் நமக்கும் அவர்களுக்கும் என்ன ஒரு வித்யாசம்?
ஜப்பானில் செய்யக்கூடாத இன்னொன்று தெருவில் சாப்பிடுவதோ கொறித்தவாறு நடப்பதோ கூடாது. அப்படி நடந்து சென்றால், 'ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக தின்று விட்டு பிறகு நடக்கலாமே' என்று நறுக்கென்று அறிவுரை கூறுவார்கள். நாம் இங்கு என்ன செய்கிறோம் கடலை போட்டுக்கொண்டு நடக்கிறோம். வாழை பழத் தோலை உரித்து நடுரோட்டில் எரிந்து பொறுப்பில்லாமல் போகவும் செய்கிறோம்.
அடுத்து ஒரு மிக ஆச்சரியமான விஷயம். ஜப்பானியர்கள் பொது இடங்களில் கட்டி பிடிப்பதையும், முத்தம் இட்டு கொள்வதையும் செய்வதேயில்லை. பொது இடங்களில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடக்கிறார்கள்.
இன்னொரு நம்ப முடியாத கட்டுப்பாடு எது தெரியுமா?
லிப்ட்டில் பயணிக்கையில் யாரும் பேச மாட்டார்கள். அவர் அவர் மாடி வரும் வரையில் நண்பர்கள் கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள்.
மேலே சொன்னவை வெறும் சாம்பிள் தான். ஜப்பானியர்களின் பிரத்யேக பழக்க வழக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஜப்பானுக்கு போகும் மற்ற நாட்டினர் குறைந்த பட்சம் மேல் சொன்ன கட்டுப்பாடுகளை கடை பிடித்தே ஆக வேண்டும். தவறினால் நம்மை காட்டு மிராண்டிகளை பார்ப்பது போல தான் பார்ப்பார்கள்.
வெறும் பொருட்களை மட்டும் இறக்குமதி செய்து குண்டு சட்டியில் குதிரை ஒட்டாமல், நல்ல விஷயங்களையும் இறக்குமதி செய்து பயனடையலாமே!