

சிவன் கோவில்களில் வழிபாட்டின் போதும், சுவாமி வீதியுலாவின் போதும் இசைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவிகள் திருக்கயிலாய வாத்தியங்கள் (Thirukailaya Vathiyangal) அல்லது சிவபூதகண வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தவை என்று கருதப்படுகின்றது. சிவன் கோயில்களில் வாசிக்கப்படும் சிவபூதகண திருக்கயிலாய வாத்தியங்கள் என்பவை கொக்கரை, ஏகளம், தமுருகம், தவில், நாதஸ்வரம், பிரம்மதாளம், தவண்டை, திருச்சின்னம், கொடுகொட்டி, நகரா, சேமக்கலம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் தொகுப்பாகும். இவை சிவனின் விருப்பமான இசையாக கருதப்படுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன், தொண்டு மனப்பான்மையுடன் இசைக்கின்றனர். மேலும் இவை பழங்கால தெய்வீக அதிர்வுகளைக் கொண்ட கருவிகளாகும்.
திருக்கயிலாய வாத்தியக் கருவிகள்:
திருச்சின்னம் - பித்தளையாலான இரண்டு குழல்களைக் கொண்ட கருவி.
கொக்கரை - இது ஒரு வகையான தாள வாத்தியமாகும்.
ஏகளம் - கொம்பினால் செய்யப்பட்ட ஊதும் வாத்தியம்.
பிரம்ம தாளம் எனப்படும் பெரிய தாளங்கள்.
கொம்புத்தாரை - விலங்குகளின் கொம்புகளால் செய்யப்பட்ட ஊதும் வாத்தியம்.
குடமுழா எனப்படும் ஐந்து முகங்கள் கொண்ட தாள வாத்தியம்
தமருகம் - இருபுறமும் தோல் கட்டப்பட்ட சிறு தவில் போன்ற வாத்தியம்.
பஞ்ச வாத்தியங்கள் - திமிலை, மத்தளம், இடைக்கா, உடுக்கை மற்றும் கொம்பு ஆகிய ஐந்தும் சேர்ந்த தொகுப்பு. இவை தொழில்முறை இசைக்கலைஞர்களால் அல்லாமல், பக்தியுடனும், தொண்டின் அடிப்படையிலும் இசைக்கப்படுகின்றன. இவற்றை சிவனின் பூதகணங்கள் வாசிப்பதாக நம்பப்படுகிறது. இது இறைவனின் திருநடனத்திற்கு பொருத்தமானது. பாடல்கள் இல்லாமல் கருவிகளின் அதிர்வுகளே பக்தர்களை சிவனோடு ஒன்றச் செய்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கருவிகள் இவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்திற்கும், கோயில்களின் உற்சவங்கள், பிரதோஷம், சிவராத்திரி மற்றும் விசேஷ நாட்களில் நடைபெறும் பூஜைகளுக்கும் இசைக்கப்படும் இவை தெய்வீக உணர்வைத் தருகின்றன.
தமிழகத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக சிவாலயங்களில் இந்த வாத்தியங்கள் இசைக்கப்பட்டுள்ளன. பின்பு நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதால் சிவ பூதகண வாத்தியங்கள் இசைப்பது குறைந்து போனது. இப்பொழுது மீண்டும் இந்த இசைக் கருவிகளை இசைக்க இளைஞர்கள் பெருமளவில் ஆர்வமுடன் முன் வருகிறார்கள். தற்போது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது.