
திருமண நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் அரண்மனை மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
மதுரையில் அமைந்துள்ள கட்டடம் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
இத்தாலிய கட்டடக்கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் ஐரோப்பிய கட்டடக்கலை பாணியில் கலைநயத்தில் கட்டப்பட்டது. கட்டடத்தில் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சி உள்ளதாக கருதப்படுகிறது.
பிரிட்டானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் 1872-ல் இந்த அரண்மனையைப் புதுப்பித்தார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகும்.
இதன் அமைப்பு :
இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை 82 அடி உயரம் கொண்டது.
248 பிரமாண்டமான பெரிய தூண்களை தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராண காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மஹாலின் நடுவில் உள்ள விசாலமான முற்றம் மன்னர் தனது அரசவை நிகழ்வுகள் நடத்திய இடமாகும்.
இதன் உச்சியில் உள்ள குவிமாடம் வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டது.
சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், அரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில் இசை மண்டபம், நாடகசாலை / பல்லக்கு சாலை, ஆயுத சாலை வழிபாட்டு இடம், வேறு அரச குடும்பத்தினருக்கும் பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள் தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் அடங்கி இருந்தன.
கட்டடத்தின் உறுதிக்கு சுண்ணாம்பு, தான்றிக்காய், வெல்லம், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கலவை மேல் பூச்சாக அரண்மனை எங்கும் பூசப்பட்டது.
ஒளி, ஒலி அமைப்பு :
அக்காலத்திலேயே ஒலி மற்றும் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் வகையில் மஹால் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னர் பேசுவது அரசவை முழுவதும் தெளிவாக கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு பொறியியல் அதிசயம்.
மகாலின் கட்டுமானத்தில் மரங்கள் பயன்படுத்தவில்லை என்பது இதன் மற்றொரு சிறப்பு. செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையே இதன் முக்கியமான கட்டுமான பொருள்கள் ஆகும்.
வரலாறு மற்றும் முக்கியத்துவம் :
கிபி 1636-இல் திருமலை நாயக்கர் இந்த மகாலை கட்ட தொடங்கினார் .
ஆரம்பத்தில் இது மன்னரின் அரசவை மற்றும் வசிப்பிடமாக செயல்பட்டது .
ஆனால் நாயக்கர் வம்சம் வீழ்ச்சியடைந்த பின் மகால் பொலிவை இழந்தது.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இதன் சில பகுதிகள் மீட்டெடுக்கப்பட்டு பிற்காலத்தில் தேசிய நினைவுச் சின்னமாக கருதப்பட்டது.
இன்று திருமலை நாயக்கர் மஹால் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது .
மாலையில் நடைபெறும் ஒலி - ஒளி காட்சி நாயக்க மன்னர்களின் வரலாற்றையும் மகாலின் சிறப்பையும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் மதுரையின் வரலாறு கலை பெருமையை அறிய சிறந்த வாய்ப்பை இங்கு வழங்குகிறது.
மதுரைக்கு வந்தால் தவறாமல் பார்க்க வேண்டிய வரலாற்று பெருமைமிக்க இடம் திருமலை நாயக்கர் மஹால். இது வெறும் கட்டடம் மட்டுமல்ல, காலத்தால் அழியாத கலையின் வரலாற்றின் மற்றும் கலாச்சாரத்தில் வாழும் முக்கிய சாட்சியாக திகழ்கிறது.