
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரிலிருந்து இராஜபாளையம் செல்லும் வழியில் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி கோயில் விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம்.
இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றன. வைத்தியநாத சுவாமியை வழிபட்டால் தீராத வயிற்றுவலி தீர்ந்து போகும். அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதப் பிறப்பு அன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடக்கும் அதிசயம் நிகழும் தலம். அம்பாள் திருநாமம் சிவகாமி அம்பாள்.
முன்னொரு காலத்தில், சிவபக்தையான ஏழை கர்ப்பிணி பெண் ஒருத்தி, தன்னை பிரசவத்திற்கு வந்து அழைத்துச் செல்ல தாயை வரச்சொல்லுமாறு, வழிப்போக்கர்களிடம் தகவல் சொல்லியனுப்பினாள். ஆனால், நிறை மாதம் எட்டியும் அப்பெண்ணின் பிரசவம் பார்க்க தாய் வந்து சேரவில்லை. உடனே தன் கணவரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணிப் பெண் தன் சொந்த ஊருக்கு தனியாகவே புறப்பட்டாள்.
சிறிது தொலைவில் இருந்த சுயம்பு வன்னி வனநாதர் கோயில் அருகே சென்றபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிவபெருமான் அப்பெண்ணின் தாயின் வடிவில் வந்து, பிரசவம் பார்த்து விட்டு, அப்பெண்ணின் தாகம் தீர்க்க நிலத்தைக் கீறி, மருத்துவ குணம் வாய்ந்த நீரினைத் தந்தாராம். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் - வைத்தியநாத சுவாமி என உருமாறியதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்தக் கோயிலில் ஐந்து நிலை கோபுரம் எந்த விதமான சிற்பங்களும் இல்லாமல் இருப்பது சிறப்பு மற்றும் பெரிய வளாகம் உள்ளது. மையக் கோயில், உட்புறக் கருவறையில் லிங்கமாக இருக்கும் வைத்தியநாதர் சன்னதி ஆகும். மூலவர் சன்னதி மேற்கூரையில், வாஸ்து புருஷரும், 27 நட்சத்திரங்களும் இருப்பது சிறப்பு. கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தரின் உலோக சிலை மற்றும் நடராஜர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி மற்றும் சூரியனின் கற்சிற்பங்கள் உள்ளன. கருவறைக்கு வலதுபுறத்தில் சுவாமிக்கு இணையான சன்னதியில் சிவகாமியின் சன்னதி அமைந்துள்ளது. கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன, ஒவ்வொன்றும் சிவன் மற்றும் சிவகாமி சன்னதிகளுக்குச் செல்கின்றன. அம்மன் சன்னதி மேற்கூரையில் சக்கரமும்,12 ராசிகளும் இருப்பது சிறப்பு. கோயிலின் கொடி மரத்தின் முன்னால் ஆமைக்கல் 7 அடி உயரத்தில் இருப்பது மற்றொரு சிறப்பு.
சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை விளக்கும் வடிவம் மவேன்மணி. இவள் வைத்தியநாத சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சிவனை நோக்கி உள்ளார். இவள் சதாசர்வ காலமும் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் மனோன்மணிக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள். அத்துடன் பசு நெய்யில் தாமரை தண்டு விளக்கேற்றினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வைத்திய நாதர் கோயிலில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார். இவருக்கு இங்கு நாய் வாகனம் இல்லை.
கோயிலில் 48 நாட்கள் தங்கி இருந்த மன்னர் திருமலை நாயக்கரின் தீராத வயிற்று வலியைத் இத்தல ஈசன் தீர்த்தமையால், தான் வந்த தந்தத்தால் செய்த பல்லக்கை சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டு நடைபயணமாகவே மதுரை வந்தாராம் திருமலை நாயக்கர். இன்றும் வைகாசி விசாகம் திருவிழாவில் இந்த தந்தப்பல்லக்கில் தான் சுவாமி உலா வருகிறார். மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்துவாராம் திருமலை மன்னர். ஆலய மணிகளின் ஒலி கேட்ட உடனே தொடர் முரசு ஒலி எழுப்பி தெரிவிக்க, சாலை நெடுகிலும் முரசு மண்டபங்கள் எழுப்பினார். கோவிலின் ஸ்தல வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சில பழைய மண்டபங்களை சிதிலமடைந்த நிலையில் இன்றும் காணலாம். இக்கோயில் வளாகத்தில் மன்னர் திருமலை நாயக்கருக்கு சிலை உள்ளது.
வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கர்ப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்தில் அருளும் சிவனையும் சக்தியையும் வணங்கிட சுகப்பிரசவம் நிச்சயமாக நடக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று நடக்கும் அன்னதானத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலைமீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது. வைத்தியநாதசுவாமி கோயிலில் மகா அஷ்டமி, பொதுவாக நவராத்திரி திருவிழாவின் எட்டாம் நாளாக கொண்டாடப்படும்.