
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே அமைந்துள்ளது திருநாதர் குன்றுகள். இம்மலையைச் சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர்.
திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்த நிலை பிராமி எழுத்து முறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்குதான் முதன் முதலில் காணப்படுகிறது. இச்சமணத் தலத்தைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
இம்மலைக்கு ‘தமிழுக்கு எழுத்தைத் தந்த மலை’ என்ற சிறப்பு உண்டு. அதாவது, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது. ஆம், இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், “ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர் நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான 'ஐ' இடம் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5 முதல் 6ஆம் நூற்றாண்டாகும்.