பாலைவனத்தில் நீர் பற்றாக்குறை இருக்கிறது என்றாலும், அந்த சூழலுக்கு ஏற்ப மக்கள் (Desert people) தங்களை எப்படி மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும், அப்படி என்ன ரகசியம் இருக்கிறது என்றும் பார்ப்போமா?
தற்போது பெரும்பாலானோர் தண்ணீர் அருந்தாமல், உடலில் நீர்ச்சத்து இல்லாமல் நோய்வாய்ப் படுகிறார்கள். மேலும் உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் போர் காரணமாக உணவும் நீரும் இன்றி நோய் தாக்கப்பட்டு மக்கள் இறக்கிறார்கள். அப்படியிருக்க, என்றேனும் சிந்தித்ததுண்டா? வறண்ட பாலைவனத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கு நீர்ச்சத்து இன்றி நோய் ஏற்படாதா? இவையனைத்தையும் விளக்கும் கட்டுரைதான் இது.
சஹாரா, தார் போன்ற கடுமையான பாலைவனப் பகுதிகளில் வாழும் துவாரெக் (Tuareg) மற்றும் பில் (Bhil) போன்ற பழங்குடி சமூகங்கள், வெப்பம் மற்றும் மிகக் குறைந்த நீர்வளத்தில் தங்கள் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்வது எப்படி என்று நினைக்கும்போது ஆச்சர்யம்தான். இது வெறும் தற்செயலான பழக்கம் அல்ல; இது பல நூற்றாண்டுகளாகப உடலாலும், சூழ்நிலைகளாலும் பரிணாமம் அடைந்த ஒரு வியத்தகு மாற்றமாகும்.
ஆடைகளின் பங்கு:
துவாரெக் மற்றும் பில் மக்கள் அணியும் பாரம்பரிய உடைகள், வெப்பமான சூழலில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.
இந்தச் சமூகத்தினர் தலையில் இருந்து கால் வரை உடலை முழுமையாக மூடும், தளர்வான மற்றும் அடர்ந்த வண்ண ஆடைகளை (துவாரெக் மக்கள் பெரும்பாலும் இண்டிகோ நீலம்) அணிகின்றனர். இது சருமம் நேரடியாகக் கடுமையான சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. நேரடி சூரிய ஒளி உடலில் படும்போது, வெப்பம் அதிகரிக்கிறது மற்றும் வியர்வை மூலம் அதிக நீர் வீணாகிறது.
தளர்வான ஆடைகளுக்கும் உடலின் சருமத்துக்கும் இடையில் ஒரு தற்காப்பு படலம் போன்ற அடுக்கு இருக்கிறது. வெளிச்சூட்டின் வெப்பம் இந்த காற்று அடுக்கு வழியாக ஊடுருவதை தடுக்கிறது.
பாலைவனத்தில் உள்ள உலர் காற்று, வியர்வையை மிக வேகமாக ஆவியாக்கிவிடும். இதனால், உடல் குளிர்ச்சி அடைவதற்கு முன்பே நீர் வீணாகிவிடும்.
மூடிய ஆடைகள், வியர்வை ஆவியாதலை மெதுவாக்குவதன் மூலம், உடல் நீண்ட நேரத்திற்குக் குளிர்ச்சி அடைய உதவுகிறது. ஆடை, ஆவியாகும் நீரைத் தக்கவைத்துக்கொண்டு, சருமத்துக்கு அருகிலுள்ள ஈரப்பதத்தை அதிகரித்து, உடலின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது.
துவாரெக் மக்கள் அணியும் அடர்த்தியான தலைப்பாகைகள், தலையையும் முகத்தையும் மூடி, மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியாகும் நீராவியை குறைக்கிறது. இது, சுவாசம் மூலம் வெளியேறும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
உணவுப் பழக்கத்தின் பங்களிப்பு:
இந்தச் சமூகங்களின் உணவுப் பழக்கங்கள் நீர்ப் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
துவாரெக் மக்கள் மாமிச உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கின்றனர். ஏனெனில், புரதச் செரிமானத்திற்கு அதிக நீர் தேவைப்படுகிறது. இந்தச் செயல்முறை சிறுநீர் உற்பத்திக்கு வழிவகுக்கும், இது நீரிழப்பை அதிகரிக்கும். புரதத்தைக் குறைத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை உண்பது நீர் வீணாவதைக் குறைக்கும்.
பார்லி, தினை போன்ற தானியங்களை அடிப்படையாகக் கொண்ட உலர் உணவுகளையும், பேரீச்சம்பழம் போன்ற இனிப்புப் பழங்களையும் அவர்கள் உண்கின்றனர். இந்த உணவுகள் ஆற்றலை வழங்குவதோடு, சமைப்பதற்கும் குறைந்த நீரைப் பயன்படுத்துகின்றன.
இந்த மக்கள் பெரும்பாலும் சூடான தேநீர் அல்லது பிற சூடான பானங்களை அருந்துகின்றனர். சூடான பானங்கள் உடலின் வெப்பநிலையை தற்காலிகமாக உயர்த்தி, அது வியர்வையைத் தூண்டுகிறது. இந்த வியர்வை ஆவியாகும்போது, அது அதிக குளிர்ச்சியை அளிக்கிறது.
வாழ்க்கைமுறை:
பாலைவனத்தின் உச்ச வெப்ப நேரங்களில், இவர்கள் நிழலில் ஓய்வெடுப்பதன் மூலமும், அத்தியாவசியமற்ற செயல்பாடுகளைக் குறைப்பதன் மூலமும், உடலின் வெப்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் உடலியல் மெதுவாகப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வியர்க்கும்போது, இழக்கப்படும் உப்பின் அளவைக் குறைத்து, நீரை மட்டுமே அதிகமாக இழக்கும் வகையில் வியர்வைச் சுரப்பிகள் செயல்படுகின்றன. இது அத்தியாவசிய தாதுக்களை உடலில் தக்கவைக்க உதவுகிறது.
குறிப்பிட்ட உணவுப் பழக்கம் மற்றும் நிதானமான வாழ்க்கை முறை ஆகியவை ஒன்று சேர்ந்து, துவாரெக் மற்றும் பில் மக்கள் குறைந்த நீரைக்கொண்டு, உடல் வெப்பம் மற்றும் நீரிழப்பைக் கட்டுப்படுத்தி, பாலைவனத்தில் சிறப்பாக வாழ அனுமதிக்கிறது.