காஞ்சிபுரம் மிகப் பழைமையான ஒரு நகரமாகும். கலைகளிலும் கல்வியிலும் தலைசிறந்து விளங்கிய இந்நகரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களோடு சிறந்து விளங்கியது. இதனால் இது, ‘கோயில் நகரம்’ என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சியில் வாழ முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பது ஆன்மிக மொழி. இதிலிருந்து நாம் காஞ்சியின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
‘புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு நாரீஷீ ரம்பா நகரேஷீ காஞ்சி’ என்பது ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம். அதாவது, புஷ்பங்களில் சிறந்தது ஜாதி முல்லை, புருஷர்களில் பெரியவர் மகாவிஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது இதன் பொருள். மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை ஆகிய ஏழு நகரங்கள் புனித நகரங்கள் என்று சொல்லப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் தற்காலத்தில் பூவரசு மரம் என்றழைக்கப்படும் காஞ்சி மரங்கள் ஏராளமாகக் காணப்பட்டன. இதனால் முற்காலத்தில் இது, ‘காஞ்சியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் காஞ்சிபுரம் என்றானதாகக் கூறப்படுகிறது. ‘காஞ்சீபுர’ என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இடையில் அணியும் ஒட்டியாணம் என்று பொருளுண்டு. நிலமகளுக்கு காஞ்சிபுரம் ஒட்டியாணம் போல விளங்கியதால் இவ்வூருக்கு காஞ்சிபுரம் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. காஞ்சனம் என்றால் பொன். செல்வச்செழிப்புடன் திகழ்ந்த காஞ்சி மாநகரம் பொன்னாலான நகரம் எனும் பொருள்படும்படியாக காஞ்சனம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி காஞ்சி என்றானதாகவும் கூறுவர்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி மாநகரத்தை ஆண்டதாக பரிபாடல் மூலம் அறியப்படுகிறது. காஞ்சி மாநகரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் இந்நகரம் வில் வடிவத்தில் வேகவதி ஆற்றின் எல்லையாய் அமைய நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல்லவ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சி மாநகரத்தை, பல்லவர்கள் பல்லவேந்திரபுரி என்று அழைத்துள்ளனர். காஞ்சிபுரமானது கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சிபுரம், காஞ்சீவரம், காஞ்சி மாநகர், காஞ்சிநாடு, கச்சி, அத்தியூர், திருஅத்தியூர், கச்சிப்பேடு, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, கச்சியம்பதி, சின்னக்காஞ்சி, பெரியகாஞ்சி, காஞ்சீபுரி, காமபீடம், தபோமயம், பல்லவேந்திரபுரி, புத்தக்காஞ்சி, ஜினக்காஞ்சி, விண்டுபுரம், சிவபுரம், சருவசித்திகரம், கன்னிகாப்பு, ஆதிபடம், சத்தியவிரத க்ஷேத்ரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு தற்போது காஞ்சிபுரம் என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.
சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சிபுரமானது, ‘கச்சி மூதூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கல்வியிற் கரையிலாக் காஞ்சி மாநகர்’ என்று அப்பர் பெருமானால் போற்றப்பட்ட பெருமை உடையது காஞ்சி மாநகரம்.
முற்காலத்தில் காஞ்சியானது சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜினகாஞ்சி மற்றும் பௌத்த காஞ்சி என நான்கு முக்கியப் பகுதிகளாக அறியப்பட்டிருந்தது. சிவகாஞ்சி தற்போது பெரிய காஞ்சிபுரம் எனவும் விஷ்ணுகாஞ்சி தற்போது சின்ன காஞ்சிபுரம் எனவும் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள காமாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருந்த பகுதிகள் முற்காலத்தில் பௌத்த காஞ்சியாக இருந்துள்ளது. பெரிய காஞ்சியின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற பகுதியே முற்காலத்தில் ஜைன காஞ்சி அல்லது ஜின காஞ்சி என வழங்கப்பட்டுள்ளது. திருப்பருத்திக்குன்றம் பகுதியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சமணத் திருக்கோயிலான திரைலோக்கியநாதர் கோயிலில் தற்போதும் புகழோடு திகழ்வது குறிப்பிடத்தக்கது.
தனிப்பாடல் ஒன்று காஞ்சிபுரத்தை மயில் போல அமைந்த ஊர் என்று விவரிக்கிறது.
‘ஏரியிரண்டும் சிறகா எயில் வயிறா
காடுடைய பீலி கடிகாவா – நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு’
காஞ்சியில் ஏரி, கோட்டை, சேலை மற்றும் அத்தியூர் என்ற நான்கு பகுதிகளை இணைத்து காஞ்சியின் அமைப்பானது மயில் போல இருந்தது என புலவர் விவரிக்கிறார். காஞ்சியின் இருபுறமும் அமைந்திருந்த ஏரியானது மயிலின் சிறகைப் போலவும், கோட்டை மதிலின் சுவரானது மயிலின் வயிறு போலவும், அடர்த்தியான காடானது மயிலின் தோகையைப் போலவும், அத்தியூரான சின்ன காஞ்சியானது மயிலின் தலை போல இருந்ததாகவும் பாடி காஞ்சியை, ‘தோகை மயில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி மாநகரமானது புண்ணிய கோட்டம், ருத்ர கோட்டம், குமர கோட்டம் மற்றும் காம கோட்டம் என நான்கு கோட்டங்களாகவும் பிரித்து அறியப்படுகிறது. அருள்மிகு வரதராஜப்பெருமாள் எழுந்தருளியுள்ள கோயில் புண்ணிய கோட்டம் என்றும், அருள்மிகு ஏகாம்பரநாதர் எழுந்தருளியுள்ள கோயில் ருத்ர கோட்டம் என்றும், அருள்மிகு சுப்ரமணியர் எழுந்தருளியுள்ள கோயில் குமர கோட்டம் என்றும், அருள்மிகு காமாட்சியம்மன் எழுந்தருளியுள்ள கோயிலானது காம கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.