குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலையாகும். குழந்தைகளாய் இருக்கும்போது அவர்கள் பேசும் மழலைகளை ரசிக்கும் நாம், குழந்தைகள் வளர்ந்து பேசும்போது பெருமிதம் கொள்கிறோம். அதுவே நம் குழந்தைகள் திடீரென பொய் சொல்ல ஆரம்பிக்கும்போது நமக்குள் ஒரு பதற்றம் ஏற்படுகிறது. எங்கே இவர்கள் தடம் மாறிப் போய் விடுவார்களோ என்ற பயத்தில் கண்டிக்க ஆரம்பிக்கிறோம்.
சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும். எவ்வளவுதான் அதட்டினாலும், மிரட்டினாலும், அன்பாய் கேட்டாலும் பொய் சொல்வதை நிறுத்தாது. குழந்தைகள் ஏன் இப்படிப் பொய் சொல்கிறார்கள்? அவர்களை எப்படி நாம் எதிர்கொள்வது என்ற பயம் பெற்றோராகிய நம்மிடம் நிச்சயம் ஏற்படும்.
குழந்தைகள் பொய் சொல்வதற்குக் காரணம் பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவோ, தள்ளிப்போடவோ அல்லது முற்றுப்புள்ளி வைக்கவோதான் பொய் சொல்கிறார்கள். இப்படி அவர்கள் பொய் சொல்வது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகள் ஏதேனும் குறும்பு செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் பொழுது, ‘நீதான் இதை செய்தாயா’ என்று கேட்கும்போது அவசரமாக அவர்கள், ‘இல்லை’ என்று மறுப்பார்கள். காரணம், பயம். எங்கே நம் அம்மா கோபத்தில் நம்மை அடித்து விடுவார்களோ என்ற பயம்தான் அவர்களை பொய் சொல்லத் தூண்டுகிறது.
குழந்தைகளிடம் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட பெரிய உரையாடல்கள் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லி புரிய வைத்தாலே போதும். குழந்தைகளிடம் அதிக அளவில் கேள்விகள் கேட்டு குடைவதும், அச்சுறுத்தும் வகையில் மிரட்டுவதையும் தவிர்த்து, நேர்மையான எண்ணங்களை வளர்த்தெடுக்கும் சூழலை உருவாக்க வேண்டும். கண்டிப்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிகம் பொய் பேசுகிறார்கள். தவறு செய்யும்போது தண்டிப்பதும், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதுமாக இருக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தண்டனைக்கு பயந்து குழந்தைகள் பொய் சொல்கிறார்கள். எனவே, அதிகக் கண்டிப்பு பொய் பேசத் தூண்டுகிறது.
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அவர்களை நல்வழிப்படுத்துகிறேன் பேர்வழி என்று நினைத்து அதிக கண்டிப்பு காட்டினால் வேறு வழியே இல்லாமல் தண்டனையிலிருந்து தப்பிக்க குழந்தைகள் பொய் சொல்கிறார்கள். இதை அடாப்டிக் பிஹேவியர் (Adaptive behaviour) என்று கூறுவார்கள். குழந்தைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லித் தந்து ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வைப்பது அவசியம்தான். அதற்காக அவர்களிடம் அளவுக்கு மீறி கண்டிப்பு, பயமுறுத்துதல், எடுத்ததற்கெல்லாம் தண்டனை கொடுப்பது என்று இல்லாமல் அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களிடம் தோழமையுடன் பழகி, அவர்கள் செய்யும் தவறுகளை நிதானமாக சுட்டிக்காட்டுவது நல்லது.
குழந்தைகள் உண்மை பேசும்போது, நேர்மையாக நடந்து கொள்ளும்போது பாராட்டுவதும், சிறு சிறு பரிசுகள் கொடுத்து உண்மை பேச ஊக்கப்படுத்துவதும் நல்ல பலனைக் கொடுக்கும்.