

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரம் ஜன்னல் வீடு (Thousand Windows House Karaikudi)!
'காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு ' என்பது செட்டிநாடு கட்டட கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் . இது 1941 - இல் கட்டப்பட்டது. சுண்ணாம்பு, கற்களால் கட்டப்பட்டு எண்ணற்ற ஜன்னல்கள் மற்றும் பெரிய அறைகளுடன் பிரம்மாண்டமாக திகழ்கிறது. இது காரைக்குடியின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
இந்த வீடு நாராயண செட்டியார் மற்றும் விசாலாட்சி அம்மையாருக்காக அவர்களின் தாயார் சீதனமாக கட்டித் தந்த வீடு. இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான இடமாகும்.
கட்டடக்கலை தனித்துவம்
இக்கட்டடம் சிமெண்ட் கலவை இல்லாமல் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டது. செட்டிநாடு கட்டடக் கலையின் தனித்துவத்தை காட்டுகிறது.
இது சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில் 25 பெரிய அறைகள், 5 கூடங்கள், 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல் கதவுகளுடன் கண்களை கவரும் விதத்தில் இவ்வீடு கட்டப்பட்டுள்ளது.
வீட்டின் பிரதான வாசலுக்கான சாவியே கிட்டத்தட்ட ஒரு அடி நீளம் கொண்டுள்ளது.
இந்த வீட்டின் மரவேலைப்பாடுகள் பர்மா தேக்கு மரங்களைக் கொண்டும், ஆத்தங்குடி மற்றும் இத்தாலிய சலவை கற்களை கொண்டு தரை வேலைபாடுகளும் அமைந்துள்ளன.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வண்ண பூச்சுக்களும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விளக்குகள் வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இது 1941 வருடம், சுமார் 1,25,000 இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
காரைக்குடி ஆயிரம் ஜன்னல் வீடு அதன் தனித்துவமான வடிவமைப்பு பிரம்மாண்டம் மற்றும் செட்டிநாட்டு பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
இது போல பல மாளிகைகள் இங்குள்ளன. ஒவ்வொன்றும் செட்டிநாட்டு பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றில் சில மாளிகைகளுக்கு சென்று பார்க்க அனுமதி உண்டு. காலை முதல் மாலை வரை இந்த மாளிகை சென்று சுற்றி பார்க்கலாம். அதற்கு கட்டணமாக சிறுதொகையை வசூலிக்கின்றனர்.
இதில் சில பாரம்பரிய விழாக்களையும் கொண்டாடுகின்றனர். 100 வருடத்தை தாண்டிய சில மாளிகைகளில் அதன் தலைமுறை வாரிசுகள் இன்றும் அனைவரும் கொண்டாடி அன்பு இல்லமாக வாழ்ந்த அந்த வீட்டில் சந்தித்து மகிழ்கின்றனர்.
நீங்களும் காரைக்குடி சென்றால் இந்த பிரம்மாண்டமான கட்டடக்கலை மாளிகையை சென்று பாருங்கள்.