சிறந்த கலைஞனை, அந்தக் கலைஞனின் மாறுபட்ட சிந்தனை, கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற திறன்களின் அடிப்படையோடு சேர்ந்து அவன் கருவிகளை கையாளும் விதத்திலும் அடையாளம் காண முடியும். அந்த வகையில், பண்டைய கால இந்தியாவில், கலைஞர்கள் அவர்களைச் சுற்றியுள்ள பொருள்களை தூரிகைகளாகவோ பேனாவாகவோ மாற்றியமைத்து தங்கள் படைப்புகளை உருவாக்கினார்கள். இந்தியாவில் பயன்படுத்திய வித்தியாசமான பாரம்பரிய கலைக் கருவிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கலம்காரி- இதில் 'கலாம்' என்றால் 'பேனா' மற்றும் 'கரி' என்றால் 'கைவினைத்திறன்' என்று பொருள்படும். கலம்காரி கருவியை இரண்டு விதமான பாணிகளில் பயன்படுத்துவார்கள். ஒன்று, மச்சிலிப்பட்டினம் பிளாக் பிரிண்டிங் ஓவியம். மற்றொன்று ஸ்ரீகாளஹஸ்தியில் கலம்காரியைப் பயன்படுத்தி முற்றிலும் கையால் உருவாக்கப்படும் ஓவியம். மெல்லிய மூங்கில் குச்சியின் ஒரு முனையைக் கூர்மையாக்கி, அதன் அருகில் தூய்மையான பருத்தி துணி உருட்டப்படு கலம்காரி உருவாக்கப்படுகிறது. இதில், பருத்து துணி மையை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்கிறது. குச்சியின் கூர்மைப்பகுதி ஓவியத்தின் நேர்த்தியை தீர்மானிக்கிறது.
பாடிக் என்பது மெழுகு-எதிர்ப்பு சாயமிடும் நுட்பமாகும். இந்தக் கலையை உருவாக்குவதற்கு பயன்படும் கருவி டிஜான்டிங்ஸ். ஒரு குச்சியில் உலோக கிண்ணம்போல் இருக்கும் டிஜான்டிங்ஸ் கருவியுடன் ஸ்பவுட் (பேனாவின் முனை போன்ற பகுதி) இணைக்கப்பட்டிருக்கும். டிஜான்டிங்ஸ் என்ற கருவியில் உருகிய மெழுகு நிரப்பப்பட்டிருக்கும். ஸ்பவுட் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக அதிலிருந்து மெழுகு வெளியேறும். இதன் உதவியுடன் துணிகளில் டிசைன்களை உருவாக்கிய பிறகு துணி சாயமிடப்பட்டு அந்த மெழுகு உரிக்கப்பட்டு எதிர்மறையான அழகான வடிவமைப்பு உருவாக்கப்படுகிறது.
'கலாம்' என்றால் 'பேனா' எனப் பொருள்படும். நீண்டகாலமாக இந்தியாவில் இருக்கும் கலை வடிவங்களில் மதுபானி ஒன்றாகும். பழங்கால மதுபானி ஓவியத்தில் பயன்படுத்தப்படும் மூங்கில் நாணல் கலாம் தற்போது நாம் பயன்படுத்தும் மைப் பேனாவின் முனை வடிவத்தையும், செயல்படும் விதத்தையும் ஓரளவு ஒத்துள்ளது. இன்றும் பல மதுபானி கலைஞர்கள் மதுபானி ஓவியங்களில் நேர்த்தியை அடைய மூங்கில் நாணல் பேனாவைப் பயன்படுத்துகின்றனர்.
ரோகன் என்பது குஜராத்தின் கட்ச்சில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள ஒரு பிரபலமான கலை வடிவமாகும். ரோகன் கலைக் கலைஞர்கள் மெட்டல் ஸ்டைலஸ் எனப்படும் உலோகப் பேனாவைப் பயன்படுத்தி ஜெல் போன்ற வண்ணப்பூச்சுகளை எடுத்து, தங்கள் கையில் வைத்து உருட்டி மெல்லிய குச்சி போல் வந்தபின் ரோகன் கலையை வரையத் தொடங்குகிறார்கள்.
பழங்காலத்தில் பௌத்த துறவிகள் சாக்-பூர், சிறிய குழாய்கள், செப்புப் புனல்கள் மற்றும் ஸ்கிராப்பர்களைப் பயன்படுத்தி வண்ண மணல் துகள்களை விரும்பிய வடிவத்திற்கு மாற்றி மணல் மண்டேலாவை உருவாக்குகின்றனர்.