இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் வீட்டின் தரை மற்றும் சுவர் போன்ற இடங்களில் மந்தனா ஓவியங்கள் (Mandana Paintings) வரையப்படுகின்றன. இந்த ஓவியங்கள் வெறும் அழகுக்காக மட்டும் வரையப்படாமல் ஒரு வழிபாட்டுச் சடங்காக, வீட்டின் பாதுகாப்புக்காகவும், உடல் நலத்திற்காகவும், விழாக்காலங்களில் வீட்டிற்கு இறைவனை வரவேற்பதற்காகவும் வரையப்படுவதாக அமைந்திருக்கின்றன.
இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் பகுதிகளின் சிற்றூர்களில் இவ்வகைச் சுவரோவியங்கள் சிறப்பாக வரையப்படுகின்றன.
பெரும்பாலும் இக்கலை நாட்டுப்புறப் பெண்களால் சமச்சீராகவும், துல்லியமாகவும் வடிவமைத்து வரையப்பட்டு வருகிறது. மாட்டுச் சாணம், ரதி என்னும் ஒரு உள்ளூர் களிமண், சுண்ணாம்புத் தூள் ஆகியவைகளைக் கொண்டு வண்ணக் கலவைகள் உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். பருத்தித் துணிகள், பறவைகளின் முடிக்கற்றைகள் ஆகியவற்றை எழுதுகோலாக அல்லது தூரிகையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த ஓவியங்களில் விநாயகர், மயில்கள், பலவகை வேலை செய்யும் பெண்கள், புலிகள், மலர்கள் முதலியன இடம் பெறுகின்றன.
'மந்தனா' என்பது சித்ரா மந்தனா என்ற பொருளில் 'வரைதல்' அல்லது உள்ளூர் மொழியில் ’ஒரு படத்தை வரைய முயற்சிப்பது' என்பதாகும். மரபு வழியில் நடைபெறும் பிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்களின் போது, வீடுகளில் மந்தனா ஓவியங்கள் மீனா சமூகத்துப் பெண்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வரையப்படுகின்றன.
இந்த மரபு வழியிலான நிகழ்வுகள் அனைத்தும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், இந்த ஓவியங்கள் அனைத்தும் விழாக்களின் முதன்மைக் கடவுள்களைச் சித்தரிப்பதாகவே அமைகின்றன. கடவுள்களுக்கு அடுத்ததாக வேத யாகப் பீடங்கள், மரங்கள், உயிரினங்கள், பறவைகள் போன்றவைகளும் இடம் பெறுகின்றன. பறவை ஓவியங்களில் மயில்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. தற்போது மந்தனா ஓவியங்களில், பண்ணைக் கருவிகள், மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் நவீன வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்களும் இடம் பெறத் தொடங்கியிருக்கின்றன.
இந்த வகை ஓவியங்கள் ஒரு வரைபடத்தை சரியாகப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட முறையில் பல புள்ளிகளைப் பயன்படுத்துகிறது. இவை சதுரங்கள், சாய்சதுரங்கள், செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்கள் போன்ற இரட்டைப் பரிமாண வடிவியல் வடிவங்களாக அமைகின்றன. வீடுகளின் தரை மற்றும் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களின் வழியாக தெய்வங்களை வீட்டிற்குள் அழைப்பது மற்றும் தீய சக்திகளை வெளியேற்றுவது என்பதாக இருக்கிறது.
இராஜஸ்தானில் சுவர்கள் மற்றும் தரை இரண்டிலும் இவ்வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஆனால், மத்தியப்பிரதேசத்தில் இந்த ஓவியங்கள் தரையில் மட்டும் வரையப்படுகின்றன.
இந்த ஓவியங்கள் வரைவதற்கு பண்டைய மண் சுவர்கள் ஏற்றதாக இருந்தன. தற்போது மண் சுவர்கள் கொண்ட வீடுகளெல்லாம் சிமெண்ட் வீடுகளாக மாற்றம் பெற்று விட்டன. சிமெண்ட் சுவர்களுக்கு இந்த ஓவியங்கள் ஏற்றதாக அமையவில்லை. மண் சுவர்கள்நம்பிக்கையுடையவர்கள், சிமெண்ட் சுவர் கொண்ட தங்கள் வீடுகளில் இந்த ஓவியங்களை மரபு வழியில், சிறிய அளவில் வரைந்து கொள்கின்றனர். பல வீடுகளில் இந்த ஓவியங்கள் வரைவது குறைந்து கொண்டேப் போகிறது.
மேற்கத்திய விழுமியங்களின் தாக்கத்திலிருக்கும் மக்களிடம் மந்தனா ஓவியங்கள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டேயிருக்கின்றன. மந்தனா ஓவியக் கலையினை மீட்டெடுத்திட வேண்டுமென்ற நிலையில் இக்கலையில் ஈடுபட்டுள்ள பலரும் போராடி வருகின்றனர்.
இராஜஸ்தானைச் சேர்ந்த வித்யா சோனி என்ற மந்தனா ஓவியக் கலைஞர் அவ்வப்போது நாட்டு நடப்புகளை மந்தனா ஓவியங்களாக்கி, பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
இராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மற்றும் டோங்க் ஆகிய இரண்டு கிராமங்கள் மந்தனா ஓவியக் கலையினை இன்னும் சிறப்பாக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள பழங்குடியினரின் வீடுகளில் பல புதிய மந்தனா ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.