மணமணக்கும் ஊத்துக்குளி வெண்ணெயின் பாரம்பரியப் பெருமை!

Uthukuli butter
Uthukuli butter
Published on

வெண்ணெய் மற்றும் நெய்  என்றாலே தற்போது மக்கள் மனதில், ‘இது அசல் வெண்ணெய், நெய்தானா?’ என்ற குழப்பமும் சந்தேகமும் நிலவுகிறது. அதோடு, சுத்தமான வெண்ணை மற்றும் நெய் கிடைக்காதா என ஏங்குபவர்களும் பலர் உண்டு. ஏனென்றால், நெய், வெண்ணெய்க்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘சுத்தமான வெண்ணெய், நெய் வேண்டும். கலப்படமில்லாமல் சாப்பிட வேண்டும்’ என ஆசைப்படுபவர்கள் ஊத்துக்குளி வெண்ணெய், நெய்யை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப்பொருள் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் ஊத்துக்குளி என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வெண்ணெய்தான். ஊத்துக்குளியில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சுவை குறையாத வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் கடந்த 1945ம் ஆண்டு முதல் வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் ஊத்துக்குளி மட்டுமின்றி, அருகம்பாளையம், இரட்டைக்கிணறு, கொடியாம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு காலத்தில் குடிசைத் தொழிலாகவும் இது இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வந்த இந்தத் தொழில் காலப்போக்கில் மழையின்மை, கால்நடைகள் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சரிவைச் சந்தித்து வந்தது.

மேலும், கடந்த 1990ம் ஆண்டு முதல் எருமை வளர்ப்பு குறைவும் இந்தத் தொழில் நலிவடைந்து  வருவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. எனினும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மிக்க ஊத்துக்குளி நெய், வெண்ணெய் தயாரிக்கும் தொழிலில் தற்போது 10க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தாலும், அதன் தரமும், சுவையும் குறையவில்லை என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.

இதையும் படியுங்கள்:
பாதப் பராமரிப்பின் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?
Uthukuli butter

சபரிமலையில் ஊத்துக்குளி நெய்: ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் நெய்யானது கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலைக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு வந்தது. அதேபோல, தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, திருமண விழாக்கள், கிருஷ்ண ஜயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் டன் கணக்கில் வெண்ணெய், நெய் அனுப்பப்படுகிறது.

ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்க்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. எனினும், தற்போது கூட ஊத்துக்குளியில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று மாதந்தேறும் 10 டன் அளவுக்கு நெய், வெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் மூலமாக மாதந்தோறும் ஒரு டன் நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சந்தர்ப்பம் வாய்க்கும்போது நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தோ நீங்களும் ஊத்துக்குளி வெண்ணையை ருசிக்கலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com