நம் உடலின் மொத்த எடையைத் தாங்கி இயக்கத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது நமது கால்கள்தான். அவை தினமும் நம்மை சுமந்து செல்கின்றன. நிற்கவும் நடக்கவும் உதவுகின்றன. கால் ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும்.
பாத ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்:
இயக்கத்தின் அடித்தளம்: மனிதனின் பாதங்கள் 26 எலும்புகள், 33 மூட்டுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தசைகள், தசைநாண்கள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உடலின் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான பாதங்கள் நடக்கவும் ஓடவும் குதிக்கவும் உடற்பயிற்சி செய்யவும் என பல்வேறு செயல்களில் ஈடுபட உதவுகிறது.
ஆரோக்கியத்தின் குறிகாட்டிகள்: நமது பாதங்களின் நிலை உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளை குறிக்கும். மோசமான சுழற்சி, நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை கால் பிரச்னைகளின் மூலம் வெளிப்படும். எனவே பாதங்களையும் கால்களையும் சரியாக பராமரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான பராமரிப்பு: கால்களில் காயம், பாதங்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்றவை இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். எனவே அவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும், பாதங்களில் ஏற்படும் அசௌகரியம் வலி போன்றவை தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும். எனவே, அவற்றை மிக ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
பாதங்களைப் பராமரிப்பது எப்படி?
கால்களுக்கு சரியான அளவில் காலணிகள் அணிவது மிகவும் முக்கியம். அவை மென்மையானவையாக இருப்பது அவசியம். ஓடுவதற்கும் நடப்பதற்கும் வேறு வேறு வகையான ஷூக்களை உபயோகிக்க வேண்டும். சாக்ஸ்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். தொற்று நோய்களைத் தடுக்க கால் விரல் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகங்களை ஒட்ட வெட்டாமல் சரியான அளவில் வெட்டுவது அவசியம். காலில் ஏதாவது சுளுக்கு அல்லது காயம் ஏற்பட்டால் அவற்றுக்கு உடனடியாக சிகிச்சை தரப்பட வேண்டும்.
தினசரி சுத்தம்: தினமும் கால்களை மென்மையான சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். அவற்றை நன்றாக உலர வைக்க வேண்டும். ஈரத்தோடு இருக்கும்போது கால் விரல்களில் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். கால் விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் உள்ள ஈரத்தை நன்றாக ஒற்றி எடுக்க வேண்டும்.
பயிற்சிகள்: கால்களுக்கு போதுமான அளவு பயிற்சிகள் தர வேண்டும். வலுவூட்டும் பயிற்சி மற்றும் நீட்டுதல் பயிற்சிகள் கால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பாதங்களுக்கு அடியில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து உருட்டும்போது கால்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் சுழற்சி அதிகரிக்கும். யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்யும்போது கால் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சீரான இயக்கம்: சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான நீரேற்றம் ஆகியவற்றோடு வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கால் மற்றும் பாத ஆரோக்கியத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை சரியாகக் கடைபிடிப்பதன் மூலம் நமது உடலின் சீரான இயக்கம் மேம்படுவது மட்டுமல்லாமல், உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.