எந்நாடே என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?

தமிழர் போற்றிய மரபுகள்!
World
World
Published on

தமிழில் சில பாடல்களின் ஒரு சில வரிகளை மட்டும் பொதுவாக எடுத்து இயம்புவோம். ஆனால் அதன் முழு பாடலையும் நன்றாக அறிந்திருக்க மாட்டோம். அதுபோல் உள்ள ஒரு சில பாடல்களையும் தமிழர்கள் போற்றி வளர்த்த மரபு பண்புகளையும் இப்பதிவில் காண்போம்!

எந்நாடே என்றாலும்,

நாம் அடிக்கடி சொல்லும் ஒரு பாடல்

யாதும் ஊரே ,யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர் தர வாரா,

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றோ;

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின் இன்னாது என்றலும் இலமே

என்பது கணியன் பூங்குன்றனார் பாட்டு .இந்த ஒரு பாடலே தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்றாலும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பதை மட்டும் அடிக்கடி பயன்படுத்தி பேசுவோம். அதற்கு கீழ் உள்ள வரிகளை எல்லோரும் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அவை கூறும் விளக்கம் இதோ:

தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றே என்று கருதினார்கள். அதனால்தான் எல்லா ஊர்களையும் என்னுடைய சொந்த ஊர்கள் என்றும் , எல்லா மக்களையும் நம்முடைய உறவினர்கள் என்றும் உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினார்கள். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.

அதேபோல் எல்லாவிதமான நம்முடைய நன்மையும் தீமையும் பிறர் தரும் துன்பத்தால் வருவது அல்ல .அது நம் செயல்களின் மூலம் விளைவதே , நாம் இன்புறுவதும் துன்புறுவதும் கூட அதேபோலத்தான்.

அதுபோல் இறப்பு என்பது ஒரு அதிசயம் அல்ல. அது இயற்கையின் ஏற்பாடு. ஆகையால் இந்த உலகத்தின் வாழ்வு இனிமையானது என்று மகிழ்வடையவும் மாட்டோம். வரும் சிரமங்களை எதிர்கொண்டு இந்த வாழ்வு துன்பம் உடையது என்று வெறுத்து ஒதுக்கவும் செய்யாமல் அதுவும் இயற்கையின் ஏற்பாடு என்று ஏற்று நடக்க ஆரம்பிப்போம் என்பதுதான் இந்தப் பாடலின் விளக்கம்.

புருஷன் வீட்டுக்கு வாழப் போகும் பெண்ணே:

இப்பொழுதும் பெண்களை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது பிறந்த இடத்து பெருமையை அங்கு சென்று பேசக்கூடாது. அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நீ உன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் . அதுதான் நீ பிறந்த வீட்டுக்குத் தேடி தரும் சிறப்பு என்று புத்திமதி கூறி அனுப்புவார்கள். பெண்மணிகள் ஆகிய நாம் இன்றும் அப்படித்தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம் .

அதேபோல் நற்றிணையில் ஒரு பாடல். அது கூறும் கருத்து என்னவென்றால் பிறந்த இடத்தில் அந்த பெண் மிகவும் செல்வ செழிப்போடு பால் சாதமும் நெய்யும் கலந்த உணவை உண்டு மகிழ்ந்தாள்.

அவள் கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அங்கு வறுமையுற்ற போதிலும் தான் செழுமையாக இருந்த நிலையை எண்ணாமல், அந்த சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு கணவனுக்கு பணிவிடை செய்து செம்மையான வாழ்க்கையை நடத்தினாள் என்ற செய்தியை ஒரு செவிலி தாயாரின் மூலம் அறியப்பெற்ற பாடலாக அமைந்திருப்பது இதோ அந்த பாடல்;

"அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்?

கொண்ட கொழுநன் குடிவறன் உந்னெ,

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உன்னாள்

ஒழுகு நீர் நுணங்கு -அறல் போல

பொழுது மறுத்து உண்ணும் சிறு மது கையிலே! " என்பதுதான் அந்தப் பாடல்.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்:

அதே போல் விருந்தோம்பலுக்கு தமிழர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை பல்வேறு பாடல்கள் மூலம் நன்றாக அறிய முடிகிறது. அப்படி தமிழர்களின் பண்பாட்டை விருந்தோம்பலில் சிறப்பித்துக் கூறுவதன் காரணம் என்னவென்றால் ,அவ்வையார் பாடிய நான்கு கோடி பாடலில் வரும் ஒரு பாட்டு உணர்த்துவது தான் அது.

"உண்ணீர் உண்ணீர் என்று உட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடியுறும்" என்கிறார். சாப்பிடு சாப்பிடு என்று அருகில் இருந்து குறிப்பறிந்து பரிமாறி பக்குவமாக ஒவ்வொன்றாக பரிமாறி விருந்தோம்பலை சிறப்பிக்கும் பொழுது எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோசம் நிலவும். அப்படி சாப்பிடு சாப்பிடு என்று கூறுவோர் இல்லத்தில் தான் சாப்பிட வேண்டும் .அப்படி கூறவில்லை என்றால் அங்கு கை நனைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

அப்படி வருவிருந்து காத்து நல் விருந்து ஓம்புவாரின் வீட்டில் செல்வத்திருமகள் குடியிருப்பாள். நிலத்தில் விதை விதைக்க வேண்டியது இல்லை .விதைத்த நெல் அதிக உற்பத்தியை கொடுக்கும்.

இல்லறம் மாட்சிமைப் பெறும். தேவர் உலகம் வரவேற்கும். இறந்தார்க்கு செய்யும் திதியின் கேள்வியினால் பயன்கள் கிடைக்கும் .அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தில் உள்ள உறவுகளில் மேன்மை ஏற்படும் என்று விருந்தோம்பலின் சிறப்பினை சிறப்பித்து கூறுகிறது தமிழர்களின் கலாச்சார பண்பாடு.

எல்லோரும் ஒவ்வொரு மாநிலத்திலும் சமையலை சமைத்து அப்படியே டைனிங் டேபிளில் வைத்து விடுவார்கள். அவர் அவரும் அவர்களின் தேவைக்கு ஏற்ப எடுத்து பரிமாறி சாப்பிட வேண்டும். அப்படித்தான் இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டது .அப்படி இல்லாமல் பரிமாறி சாப்பிட வைக்க வேண்டும் என்பதுதான் இது கூறும் கருத்து. அதை தமிழர்கள் வழி வழியாக பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைப்பு நிதியாக கல்வி:

அதனை சிறப்பித்து கூறும்பொழுது ,

இம்மைப்பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால், தாம்உளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாம் காணேம்; கல்வி போல்

மம்மர் அறுக்கும் மருந்து என்கிறது நாலடியார்.

செல்வத்தைப் போல் அல்லாமல் கல்வியானது பிறருக்கு எந்த அளவு கொடுக்கின்றோமோ அந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும் சிறப்பினை உடையது. ஒருவரை உலகில் புகழ்பெற்று விளங்க செய்வது கல்வி மட்டுமே. ஆதலால் இப்படிப்பட்ட கல்வியைப் போன்ற அறியாமை மயக்கத்தைப் போக்கும் மருந்து உலகில் எதுவும் இல்லை என்று கல்வியின் மாண்பினை இப்பாடல் உணர்த்துகின்றது. ஆதலால் எந்த ஒரு மனிதனும் தன் குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்றால் இந்த கல்வியை அப்படி பயன்படுத்திக் கொள்வது சிறப்புடைய செயல் ஆகும். ஆதலால் கற்போம் ,கற்பிப்போம்; அதன் வழி நடப்போம்!

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இது போன்ற நூல்களை படித்து பயன் பெற்று நம் கலாச்சார பண்பாட்டை அறிந்து கொள்வோம். இளைய தலைமுறை மக்களுக்கும் அதை போதித்து புத்துணர்ச்சி பெற வைப்போம் ஆக!

இதையும் படியுங்கள்:
புத்திசாலிகள் மற்றவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்வார்கள்!
World

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com