சார் மணி (Tsar Bell):
இது உலகின் மிகப் பெரிய மணி ஆகும். உடைந்த நிலையில் காணப்படும் இந்த சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மாஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733 முதல் 1735 ஆம் ஆண்டளவில், ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகெயில் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு புதுப்பிப்பின் போதும், அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் எடை 445,170 பவுண்ட் (201,924 கி.கி) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர் (20.1 அடி). இதன் விட்டம் 6.6 மீட்டர் ஆகும். இந்த மணியினை இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1737 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாக இம்மணியில் ஒரு துண்டு உடைந்து போனது. அன்றிலிருந்து இம்மணி ஒலிப்பதில்லை. ஐரோப்பியக் கலைவடிவில் உருவான இம்மணியின் வெளிப்புறத்தில் இயேசு கிறிஸ்து, மேரி மாதா, திருமுழுக்கு யோவான், புனிதர்கள், அரசவை குருமார்களின் மற்றும் தேவதைகளின் உருவங்களும், அழகிய கொடிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
சார் வெடிகுண்டு (Tsar Bomba):
ஏஎன்602 என்னும் அணு வெப்பாற்றல் வெடிகுண்டின் அடைப் பெயரும், இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுகுண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்ததாகும். இது குஸ்கினாசின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் 'இதற்கு முன் காணப்படாத ஒன்று' என்பதாகும்.
சார் பீரங்கி (Tsar Cannon) :
அளவில் பெரியதும், 5.94 மீட்டர்கள் (19 அடி) நீளமுமான இந்தப் பீரங்கி கிரெம்லினில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அன்ரே சோகோவ் என்பவரால் 1586 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் உருவாக்கப்பட்டது. இது போரில் பயன்படுத்தப்படாத, ஒரு சின்னமாகவுள்ளது. இருப்பினும், இது ஒரே ஒரு முறை சுடப்பட்டது. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இப்பீரங்கியானது, உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒன்றாகவும் இருக்கிறது.
இம்மூன்றும் ரசியாவிலுள்ள கிரெம்லின் மாளிகை வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.