
பாசங்களும் பந்தங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. உலகத்தில் இவை இரண்டிற்கும் குறைவே இல்லை. பாசங்களும் பந்தங்களும் பிரியாதது. இரத்தத்தின் இரத்த தொடர்பு உடன்பிறப்பென்னும் உணர்வு என்று நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் இந்த பந்தத்திலியே சிறந்த பந்தம் எது தெரியுமா? சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயுள்ள பந்தம் தான். இந்த ரக்ஷாபந்தன் என்பது ஒரே ஒரு நாள் மட்டும் கொண்டாடப்பட வேண்டிய திருநாள் அல்ல..
ரக்ஷா என்றால் என்ன தெரியுமா? பாதுகாத்தல் என்று பொருள். பந்தன் என்றால் உறவு, பெண்களை கடைசிவரை பாதுகாத்து காக்க கூடிய உறவு எது என்றால் அது சகோதர உறவு மட்டும் தான்.
ஒரு சகோதரன் தன்னுடைய தங்கைக்கோ அல்லது அக்காவிற்கோ ஏதாவது நேர்ந்து விட்டால் துடித்து விடுவான். ஒரு பெண்ணிற்கு கடைசி வரை எது நேர்ந்தாலும் விலகாமல் கூடவே இருப்பவர் இந்த சகோதரர்கள் மட்டும் தான். ஆகவே தான் நம் குழந்தைகளுடைய எல்லா சடங்கிலும் முன்னதாக நிற்பது இந்த சகோதரர்களாகிய மாமாக்கள் தான். இந்த சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளின் கண்ணில் நீர் வடிந்தால் தாங்கி கொள்ள மாட்டார்கள். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இந்த உறவுக்கு ஈடிணை ஆக முடியாது.
சிறு வயதில் அக்காவும், தம்பியுமோ அல்லது அண்ணனும், தங்கையுமோ போட்டுக் கொள்ளும் சண்டை இருக்கிறதே, அப்பப்பா..ஆனந்தம்..சகோதரிகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டால் விரைவில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டார்கள், ஈகோவோடு இருப்பார்கள். ஆனால் சகோதர சகோதரிக்குள் சண்டை நடந்தால் நம் ஆண் சிங்களாகிய சகோதரர்கள் தான் தானே வந்து பேசி காம்ப்ரமைஸ் ஆகி சகோதரியை மகிழ்விப்பார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. சகோதரன் என்கிற உறவு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். பெண்களை பாதுகாப்பதற்காகவும் மகிழ்விப்பதற்காகவும் கடவுளால் அனுப்பப்பட்ட பந்தங்கள்.
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?... என்ற பாடலை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். என்னை கேட்டால் சிறிதளவும் ஐயமே இல்லாமல், கடைசி வரை வருபவர் சகோதரன் தான் என்று சொல்லுவேன். தன்னுடன் பிறக்காத பெண்கள் யாராவது அண்ணன் என்று அழைத்து விட்டால் போதும், அவர்களுக்கு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இந்த ரக்ஷாபந்தன் என்கிற உறவை பற்றி... எல்லா நாளுமே போற்றப் பட வேண்டிய உறவு இந்த உறவு... எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் தன் சகோதரிகளை காத்து மகிழ வைக்கும் எல்லா சகோதரர்களுக்கு ஒரு பெரிய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்வோம்!