கேட்டுக்கோடி உறுமி மேளம்... ஆடிக்கோடி உறுமியாட்டம்!

பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் ஒன்றான உறுமியாட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா?
Urumi aattam
Urumi aattam
Published on

உறுமியாட்டம் (Urumi aattam) என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும். கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் மற்றும் பிற நாட்டுப்புற நடனங்களுடன் சேர்ந்து, உறுமியாட்டம் தஞ்சாவூரின் நடன வகைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இது முக்கியமாக உறுமி மேளம் எனப்படும் தோல் இசைக்கருவியின் பின்னணி இசைக்கு ஏற்ப ஆடப்படும் ஒரு தனித்துவமான நடன வடிவமாகும்.

இந்த ஆட்டத்தின் மையமாக உறுமி அல்லது தேவதுந்துபி என்ற இடை சுருங்கிய, இரு முகங்கள் கொண்ட தோல் இசைக்கருவி விளங்குகிறது. ஆட்டின் தோலால் செய்யப்படும் இதன் ஒரு பக்கத்தை வளைந்த குச்சியால் தேய்த்தும், மறுபக்கத்தை நேரான குச்சியால் தட்டியும் ஒலி எழுப்பப்படும். இந்த ஆட்டம் பொதுவாக ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. சில சமயங்களில் ஒன்றோ இரண்டோ கோமாளிகள் நகைச்சுவை பாத்திரங்களாக ஆடுவதுண்டு. இது 'உறுமி கோமாளியாட்டம்' அல்லது 'உருமியம்' என்றும் அழைக்கப்படுகிறது.

உறுமி கோமாளியாட்டம் என்பது கோமாளி போல் வேடமணிந்த கலைஞர்கள், இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேலே சட்டையும் அணிந்து, தலையில் ஜரிகை போட்ட 'உருமா' கட்டிக்கொண்டு ஆடுவார்கள். இந்த ஆட்டத்தின் முக்கிய நோக்கம் பார்வையாளர்களை மகிழ்விப்பதாகும். இந்தக் கோமாளிகள் பாடல்களுக்கு ஏற்ப வேடிக்கையான அசைவுகளுடன் ஆடுவார்கள். இந்த ஆட்டத்திற்கு உறுமி, புல்லாங்குழல், கஞ்சிரா, ஒருமுகப் பேரிகை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும். இது மாரியம்மன், அய்யனார், கருப்புசாமி போன்ற தெய்வ வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த இசைக் கருவி விலங்கு உறுமும் சத்தத்தை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இது நையாண்டி மேளம், தேவராட்டம், கரகாட்டம், கழைக்கூத்து போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கொட்டு இசைக்கருவி. பலாமரம் அல்லது ஆட்டுத் தோலால் ஆனது. இந்தக் கருவியை ஒரு துணி கொண்டு கட்டி தோள்பட்டைக்கு குறுக்கே தொங்கவிட்டு நடந்தும் நின்று கொண்டும் இசைப்பார்கள்.

தேவராட்டக் கலைஞர்கள் இந்தக் கருவியை தேவதுந்துபி என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால் உருவாக்கப்பட்டது என்றும், தேவர் உலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் நம்புகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிலம்பம் (Silambam) - தமிழ் மரபு கலை (Martial Art) - வரலாறும் வடிவங்களும்!
Urumi aattam

வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களின் கிராமப்புறங்களில் இக்கலை மிகவும் பிரபலமானது. தை மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் இக்கலை நிகழ்த்தப்படும். இது பெரும்பாலும் திருவிழாக்கள், சாமியாட்டம் (தெய்வங்களை வரவழைத்தல்), காவடியாட்டம் போன்ற சமய மற்றும் ஆன்மீக நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com