

மரகதம் (Emerald) என்பது பெரில் (Beryl) கனிம வகையைச் சேர்ந்த, மிகவும் விலை உயர்ந்த, அடர் பச்சை நிறமுடைய நவரத்தினக் கற்களில் ஒன்றாகும். அவற்றில் உள்ள மிகச்சிறிய அளவிலான குரோமியம் அல்லது வனேடியம் காரணமாக அவை பச்சை நிறத்தில் காணப்படுகின்றன, இதுவே அவற்றின் அழகிய மாறுபட்ட பச்சை நிறங்களுக்கும் காரணமாகும்.
இவற்றில் சில ரோஜா மலர் நிறமும் மஞ்சள் கலந்த பச்சை நிறமும் இருக்கும்.வேறு சில வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கடல் நிறத்திலும் சில மரகதக்கற்கள் இருக்கும். கடினம் மிகுந்து ஒளிக்கதிர்களுடன் குளிர்ச்சியான பச்சை நிறத்தில் இருப்பதே இதன் இயற்கை தன்மையாகும். இதன் மீது சூரிய ஒளி பட்டால் பச்சை நிறத்துடன் சுற்றுப் புறத்தைப் பிரகாசிக்கச் செய்யக்கூடிய இயல்பு கொண்டது.
மரகதக்கல் ஒன்றின் மீது பலமாக உரசினால் இயற்கையான நல்ல மரகதம் தேய்வது கிடையாது. ஆனால் போலியான செயற்கையான மரகதம் கண்ணாடிப் பொடியாக உதிர்ந்துவிடும். மரகதங்கள் வைரங்களைவிட 20 மடங்கு அரிதானவை.
இது இயல்பாகவே அவற்றை மேலும் தனித்துவமான தாகவும் விரும்பத்தக்கதாகவும் ஆக்குகிறது, மரகதம் வசந்த காலத்தின் (Spring) நிறத்தைக் குறிப்பதாகவும், மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் தருவதாகவும் நம்பப்படுகிறது.
கண் நோய் உள்ளவர்கள் மரகதம் அணிவது நல்லது. ஏனெனில் கண்களுக்குக் குளிர்ச்சியான பச்சை நிறத்தை அது அளிக்கிறது. நரம்பு சம்பந்தமான சகல நோய்களையும் குணப்படுத்தும் சக்தி மரகத்திற்கு உண்டு என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஆதிகாலத்தில் எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியிலிருந்து மரகதக்கல் கிடைத்து வந்தது. மரகதங்களின் மிகப் பழமையான மூலமாக எகிப்து அறியப்பட்டது. குறைந்தது கி.மு. 2000 முதலே அங்கு மரகதச் சுரங்கத் தொழில் நடைபெற்று வருகிறது. எகிப்தில் சிகாய்ட் மற்றும் சபாரா என இரண்டு சுரங்கப் பகுதிகள் இருந்தன. இந்த இடங்கள் இடைக்காலத்தில் மறைந்து போயின, ஆனால் 1818-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன; தற்போது அவை பயன்பாட்டில் இல்லை.
சிவப்பிந்தியர்களிடம் மரகதக்கல் இருந்து வந்ததை ஆங்கிலேயர்கள் கண்டனர்.இவற்றை ஸ்பெயின் நாட்டினர் விலைக்கு வாங்கி தம் தாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து அவை பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் நம் இந்தியாவிற்கு கூட அங்கிருந்து தான் மரகதக்கற்கள் கிடைத்து வந்தது.
மரகத உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது கொலம்பியா.உலகின் மரகத உற்பத்தியில் சுமார் 50% கொலம்பியாவிலிருந்துதான் கிடைக்கிறது.கொலம்பிய மரகதங்கள், அவற்றின் அளவு மற்றும் நிறத்தைப் பொறுத்து மிகவும் மதிப்புமிக்கவை. சர்வதேச இரத்தினக்கல் சங்கத்தின்படி , ஒரு காரட் மரகதத்தின் விலை 100,000 டாலர்கள் வரை இருந்ததாக அறியப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை, கொலம்பிய மரகதச் சுரங்கங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் தாங்கள் கண்டெடுக்கும் மரகதங்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள் . இது “பிகாண்டோ” என்று அழைக்கப்படுகிறது. தற்போது உலகில் இருக்கும் 90% வரையிலான மரகதங்கள் கொலம்பியாவில் கிடைத்தது.
கொலம்பியா நாட்டிலிருந்து கிடைத்த பெரிய மரகதக்கல் ஒன்றிலிருந்து ஒரு ஜாடியே உருவாக்கியுள்ளனர். இந்த ஜாடி 2680 காரட் எடை கொண்டதாக இருந்தது. இதேபோல் ஜஹாங்கிர் மன்னரிடம் மரகதத்தால் உருவாக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள் இருந்து வந்தன. மாவீரன் அலெக்சாண்டர் தன் உருவத்தை செதுக்கிய மரகதக்கல் பதித்த மோதிரத்தை அணிந்திருந்ததாக ஒரு செய்தி உண்டு.
உலகின் மிகப்பெரிய பெரிய மரகதம் 1350 காரட்கள் கொண்டது. இது டிவான்ஷையர் என்ற பிரிட்டிஷ் இளவரசரிடம் இருந்தது. இது பின்னர் பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டது. 'அலக்ஸாண்டிரியேட்' எனும் ஒரு வகை மரகதக்கல் மிக மதிப்புமிக்கது. இது பகலில் இலை பச்சை நிறத்திலும், இரவில் சிகப்பு நிறத்திலும் ஒளிரும். ரோமானிய மன்னன் நீரோ, தன் கண் பார்வை சிறிது குறைவாக இருந்ததால் பட்டையான மரகதத்தை வைத்து அதன் மூலம் சிறிது தூரத்தில் தன்னெதிரில் மல்லர்கள் போராடும் காட்சியைப் பார்த்து ரசிப்பதுண்டாம்.
உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என கொலம்பியா நாட்டிலுள்ள ஒரு கல் அழைக்கப்பட்டாலும், பிரேசில் நாட்டிலுள்ள பாகியா( Bahia ) என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மரகதக்கல்லும் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றுதான் அழைக்கப்படுகிறது. அதன் இன்றைய மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கல் பயணிக்கும் வழியெல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் உருவாக்கியதால் அது சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகிறது.
55 வது திருமண ஆண்டுவிழா மரகத ஆண்டுவிழா என்று அழைக்கப்படுகிறது. 55 வது திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாட , மரகதம் பதிக்கப்பட்ட நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பாரம்பரியப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.