

தமிழ் மரபில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்பு (சீமந்தம்) என்பது வெறும் சடங்கு அல்லது கொண்டாட்டம் மட்டுமல்ல. கர்ப்ப காலத்தில் தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் தேவையான உளவியல், மருத்துவ மற்றும் வளைகாப்பு அறிவியல் காரணங்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த பாதுகாப்பு நடைமுறையாகும். அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்:
ஒலி சிகிச்சை: வளைகாப்பின்போது கர்ப்பிணிப் பெண்ணின் இரு கரங்களிலும் ஏராளமான கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. அதன் அறிவியல் பின்னணி என்னவென்றால் கர்ப்பத்தின் 7-ஆம் மாதத்திற்குப் பிறகு கருவில் இருக்கும் குழந்தையின் கேட்கும் திறன் (Hearing ability) முழுமையாக வளர்ச்சி யடைகிறது.
தாய் நடக்கும்போது வளையல்கள் ஒன்றோடொன்று உரசி எழுப்பும் மெல்லிய, ரீங்கார ஒலி (Rhythmic Sound) குழந்தையின் மூளைச் செல்களைத்தூண்டி, நரம்பு மண்டல வளர்ச்சியை (Brain & Neural Development) விரைவுபடுத்துகிறது என்கிறது அறிவியல்.
தாயின் மன அழுத்தம் குறைதல்: கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் பெண்களுக்குப் பிரசவம் குறித்த பயமும் மன அழுத்தமும் (Prenatal Anxiety) இயல்பாகவே அதிகரிக்கும். அதனால் வளைகாப்பு விழாவில் உறவினர்கள், தோழிகள் ஒன்றுகூடிப் பாடல்கள் பாடி, வாழ்த்தி, மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது தாயின் மனதை அமைதிப்படுத்துகிறது.
இந்த நேர்மறைச் சூழல் தாயின் மூளையில் எண்டார்ஃபின் (Endorphins) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) போன்ற 'மகிழ்ச்சி ஹார்மோன்களை'ச் சுரக்கச் செய்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்துச் சுகப்பிரசவத்திற்கு உடலைத் தயார்படுத்துகிறது.
அக்குபிரஷர் மற்றும் ரத்த ஓட்டம்: மணிக்கட்டுப் பகுதியில் உடலின் முக்கிய நரம்புகளும், அக்குபிரஷர் புள்ளிகளும் அமைந்துள்ளன. கை நிறைய வளையல்கள் அணியும்போது, அவை மணிக்கட்டுப் பகுதியில் லேசான அழுத்தத்தை இடைவிடாமல் தருகின்றன. இந்த அழுத்தம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடற்சோர்வைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) சீராக வைக்க உதவுகிறது. மேலும், கைகளில் ரத்த ஓட்டம் தடைபடாமல் சீராகப்பாய வழிவகுக்கிறது.
சந்தனம், குங்குமம் மற்றும் மஞ்சள் தரும் குளிர்ச்சி: வளைகாப்பின் போது தாயின் கைகளுக்கும் கன்னங்களுக்கும் சந்தனம், மஞ்சள் பூசப்பட்டு, உச்சிமுடியில் குங்குமம் இடப்படுகிறது.
இதன் அறிவியல் பின்னணி: கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் தாயின் உடலில் சூடு (Body Heat) அதிகரிக்கும். இயற்கையான சந்தனமும் மஞ்சளும் உடலைக் குளிர்வித்து, கிருமி நாசினியாகச் (Anti-bacterial) செயல்பட்டுத் தொற்றுநோய்களிலிருந்து தாயைப் பாதுகாக்கின்றன.
சித்ரான்னங்கள் தரும் ஊட்டச்சத்து:
வளைகாப்பு விழாவில் கலவைச் சாதங்கள் (புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எள் சாதம் போன்ற 5 அல்லது 7 வகையான உணவுகள்) பரிமாறப்படுகின்றன. இதன் அறிவியல் பின்னணி: கர்ப்ப காலத்தில் பெண்களின் சுவை அரும்புகள் மாறுபடுவதோடு, செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். புளி மற்றும் எலுமிச்சை சாதம் கர்ப்ப கால வாந்தி மற்றும் மயக்கத்தைக் (Morning Sickness) கட்டுப்படுத்துகிறது.
தயிர் சாதம்: செரிமானப் பாதையில் நல்ல பாக்டீரியாக்களை (Probiotics) அதிகரித்து, வயிற்றுச் சூட்டைத் தணிக்கிறது.
எள் மற்றும் தேங்காய் சாதம்: தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது.
குழந்தையின் பாதுகாப்புக்கான எச்சரிக்கை மணி: (Alert System) பண்டைய காலத்தில் வீட்டிற்குள் நடமாடும் கர்ப்பிணிப் பெண் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது அவருக்கு உதவி தேவைப்பட்டாலோ, அவரது வளையல் ஒலி நிற்பதை வைத்து அருகில் இருப்பவர்கள் உடனடியாக அறிந்துகொள்ள முடிந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாத கர்ப்பிணியின் மணிக்கட்டு பகுதியை சற்று விளையாட்டுத்தனமாக யாராவது இழுத்து அந்த நரம்புகளை அழுத்தி விடக்கூடாது என்பதும் ஒரு காரணம் என்று கிராமத்தில் அடிக்கடி கூறுவது உண்டு. இதனால் வளையல்களை அந்தப் பகுதியில் அடுக்கிவிட்டால் தப்பித் தவறியும் கூட அந்த இடத்தில் யாரும் கை வைக்க முடியாது என்பதை எங்கள் சித்த வைத்தியரும் கூறி இருக்கிறார்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதால் வளைகாப்பு நடத்துவது ஏன் அவசியம்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை தெளிவாக அறிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவதன் சாத்தியத்தை புரிந்துகொள்ளலாம் . வீட்டில் ஒவ்வொரு சடங்கையும் ஏன் நடத்துகிறார்கள். அதற்குள் ஒளிந்துள்ள மருத்துவ, அறிவியல், ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நல்ல வழிகாட்டியாக இருக்கும்.