

கங்காருவை இன்றும் வினோதமாக பார்க்கும் நாம் அதனைப் பற்றிய சிறப்பு பண்புகளை இப்பதிவில் காண்போம். இந்தத் பதிப்பை வாசிப்பதன் மூலம், இயற்கையின் படைப்பில் ஒரு வினோத மிருகமான கங்காருவின் பரிணாம வளர்ச்சி மற்றும் அவை உயிர்வாழப் பின்பற்றும் நுணுக்கமான அறிவியல் உத்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம்.
உடலமைப்பு:
பெரிய வகை மிருகங்களில் இந்த கங்காரு ஒன்றுதான் தாவி குதித்து ஓடும் ஆற்றல் பெற்றது. அப்படி தாவுவதற்கு ஏற்றவாறு மிகவும் உறுதி வாய்ந்த நீண்ட பின்னங்கால்களும், குட்டையான முன்னங்கால்களும் அமைந்து உடலை சமநிலையாகக் காத்துக் கொள்ள தசை பிடிப்பான நீண்ட வாலும், சிறிய தலையும் கொண்டிருக்கிறது.
இவற்றால் மிக எளிதாக 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் தாவி ஓட முடியும். மூன்று மீட்டர் உயரத்துக்குக் தாவும் கங்காருகள் ஒரே தாவில் எட்டு மீட்டர் தூரத்தை கடந்து விடுகின்றன என்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் ஒரு குறுகிய தூரத்தை இவற்றால் 70 கிலோமீட்டர் வேகத்தில் கூட தாவி கடக்க இயலுமாம்.
பொதுவாக கங்காருகள் வாழும் ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா போன்ற தீவுகளில் மற்ற கண்டங்களில் வாழும் மிருகங்களுக்கு இருப்பதைப் போல கொலைகார கொடிய மிருகங்கள் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், இந்த செழிப்பற்ற வறண்ட நிலப் பகுதியில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் இவை தினமும் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.
அப்படி விரைந்து நகர்வதற்கு இந்த வேகத்தாவுதல் பெரிதும் உதவுகிறது.
கிட்டத்தட்ட அறுபது வகையான கங்காருகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வல்லபிஸ் எனப்படும் சிறிய வகை கங்காரு முதல் உருவிலும், வடிவிலும் பல வகையாக இவை வேறுபட்டு காணப்படும். வகைக்கு வகை உண்ணும் உணவும் மாறுபடுகிறது.
சாட்பல் வகை கங்காருகள் அதிகமாக புற்களையே மேய்கின்றன. சிவப்பு நிற வகை குத்துச்செடிகளையும் சிறிய மரங்களின் கிளைகளையும் பிடித்து உண்ணும். சில வகை பாசிகளையும் கூட உண்பது உண்டு. கால்நடைகளை போல ஓய்வாக படுத்தவாறு, உண்டதை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து அசைபோடும் இந்த மிருகங்கள் பகல் பொழுது முழுவதையும் இவ்வாறு ஓய்வெடுப்பதிலேயே கழிக்கும்.
குளிர்ச்சியான மாலை நேரம், இரவு மற்றும் அதிகாலையிலேயே உணவு தேடிச் செல்லும். மரத்தடியில் குழிதோண்டி குளிர்ந்த மணலில் படுத்துக்கொண்டு நாவால் முன்னங்கால்களை அடிக்கடி நக்கி உடல் வெப்பத்தை தணித்துக் கொள்ளும்.
உணவு மண்டலம்:
பொதுவாக அசைபோடும் தாவர உண்ணிகள் ஆன கால்நடைகள் அதிகப்படியான மீத்தேன் வாயுவை தாங்கள் வெளியிடும் மூச்சிலும் ஏப்பம் ஆகவும் வெளியேற்றுகின்றன. ஆனால் கங்காருகளின் ஜீரண மண்டலத்தில் இருந்து எந்த வாயுவும் வெளியேறுவதில்லை.
காரணம் உணவு ஜீரண நொதிகளோடு சேர்ந்து கிரியையாற்றும் போது வெளிப்படும் ஹைட்ரஜன் வாயு அசிட்டேட்டாக மாற்றப்பட்டு மீண்டும் அதிக சக்தியை தரும்படி கிரகிக்கப்பட்டு விடுகிறது.
இந்த அற்புத செயலுக்கு காரணமாக இருக்கும் நுண்ணியிரிகளை பிற கால்நடைகளின் வயிற்றுக்கு மாற்ற முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில் இன்று பூமியை கலவரப்படுத்திக் கொண்டிருக்கும் புவிமண்டல வெப்ப அதிகரிப்பில் மீத்தேன் வாயுவே முக்கிய பங்காற்றுகிறது. கரியமில வாயுவை விட இந்த மீத்தேனின் பங்கு 23 மடங்கு அதிகம்.
வேட்டை:
கங்காருகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் எதிரிகளும் இருக்கின்றனர். இன்று மரபழிந்து போய்விட்ட தைலாசின் என்ற ஓநாய்கள் ஒரு காலத்தில் இவற்றின் பிரதான எதிரிகளாக இருந்ததாக புதை படிவாய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிங்கங்களும் இதன் எதிரிகளாக இருந்திருக்கின்றன என்ற போதிலும் 5000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் குடியேறிய போது இறைச்சிக்காக கங்காருகளை வேட்டையாட ஆரம்பித்தனர்.
இன்று வரை ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதி கங்காரு மாமிசம்தான். வேட்டைக்காக மனிதர்கள் தங்களுடன் கொண்டு சென்ற டிங்கு என்ற நாய் இவற்றிற்கு பெரும் சிம்ம சொப்பனமாக வாய்த்தது.
இந்த நாயின் சாதாரண குரைப்பொலி கூட நன்கு வளர்ச்சி அடைந்த ஆண் கங்காருவையே கட்டுக்கு அடங்காத மூர்க்கவெறி கொள்ள வைத்துவிடும்.
தினமும் உண்ணும் கழுகுகள் மற்றும் கொடிய பறவைகளுக்கு கங்காருவின் அழுகிய மாமிசம் என்றால் கொளுத்த வேட்டை. வல்லாபிஸ் போன்ற சிறுவகை கங்காருகளை நரிகளும், காட்டுப் பூனைகளும் கூட கூட்டமாக சேர்ந்து மடக்கி விடுகின்றன.
தற்காப்பு கலைகள்:
கங்காருகள் நன்கு நீந்தும் ஆற்றல் பெற்றவை. ஆயினும் இவை சாதாரணமாக நீருக்குள் இறங்காது.
எதிரிகளால் துரத்தப்படும் போது அதிலும் தப்புவதற்கு வேறு வழியே இல்லாத பட்சத்தில் சட்டென்று தண்ணீரில் பாய்ந்து நீந்தி தப்ப முயலும். அங்கும் ஒரு பகை மிருகம் துரத்தி வந்தால் அதைப்பற்றி தண்ணீருக்குள் அழுத்தி பிடித்து செயலிழக்க செய்து கொன்றுவிடும்.
தரையில் இருக்கும் போது பின்னங்கால்களை தனித்தனியே நகர்த்த முடியாத இம்மிருகங்களுக்கு நீரில் இருக்கும் போது மட்டும் தனித்தனியே அசைத்து தண்ணீரை உதைத்து நீந்த முடிவது இயற்கையின் மகா வினோதங்களில் ஒன்றுதான்.
மற்றொரு பாதுகாப்பு கணையாக இவை பயன்படுத்துவது பின்னால்களில் இருக்கும் உறுதியான கூறிய நகங்களை. தன்னை தாக்க வரும் நாய் போன்ற மிருகங்களை முன்னங்கால் பாதங்களால் இறுக பிடித்துக்கொண்டு பின்னங்கால்களில் உள்ள கூறிய நகங்களால் அதன் வயிற்றை கிழித்து குடலை உருவி வெளியே எடுத்துக் கொல்லும். தன் எதிரிகளை இனம் கண்டுகொள்ளும் வகையில் இவற்றிற்கு கூறிய பார்வைத் திறனும், நுண்ணிய செவிப்புலனும் அமைந்திருப்பது இயற்கை வழங்கிய கொடை.
இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், இயற்கையின் படைப்பில் ஒரு வினோத மிருகமான கங்காருவின் பரிணாம வளர்ச்சி மற்றும் அவை உயிர்வாழப் பின்பற்றும் நுணுக்கமான அறிவியல் உத்திகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்.