

கோவாவில் இன்றும் கம்பீரமாக நிற்கும் முன்னூறு ஆண்டுகள் பழமையான போர்த்துகீசிய கட்டிடங்கள் அவர்களின் ஆதிக்கத்தை நமக்கு நினைவு படுத்துகின்றன. இவர்களின் இந்திய வருகைக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் வாஸ்கோடகாமா.
பலரும் அவர் இந்தியாவை புதிதாகக் கண்டுபிடித்தார் என நினைக்கிறார்கள், ஆனால் அவர் ஏற்கனவே இருந்த வர்த்தகத்திற்கு ஒரு புதிய கடல் வழியை மட்டுமே கண்டறிந்தார். அவர் ஒரு மாபெரும் சாதனையாளராக அறியப்பட்டாலும், அவருடைய உண்மையான குணமும் அவர் நிகழ்த்திய கொடூரங்களும் பலருக்குத் தெரிவதில்லை.
புதிய கடல் வழிக்கான காரணம்!
ஐரோப்பியர்களுக்கு மிளகு, இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிகவும் தேவையாக இருந்தன. இவற்றை அரேபியர்கள் மற்றும் வெனிஸ் நாட்டு வியாபாரிகள் மூலமே அதிக விலை கொடுத்து ஐரோப்பியர்கள் வாங்கி வந்தனர்.
கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடந்த மதப்போர்கள் மற்றும் ஓட்டோமான் பேரரசின் வளர்ச்சி காரணமாக, நிலவழியாக நடந்து வந்த வியாபாரம் தடைபட்டது. அரேபியர்களைத் தவிர்த்துவிட்டு நேரடியாக இந்தியாவிற்கு வர ஐரோப்பியர்கள் ஒரு மாற்று கடல் வழியைத் தேடினர். 1488 ஆம் ஆண்டு பார்த்தலோமியா டயஸ் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வரை வந்துவிட்டுத் திரும்பினார்.
பயணத்தின் தொடக்கம்!
போர்த்துகீசிய மன்னர் முதலாம் மேனுவேல், தைரியமும் மூர்க்கத்தனமும் கொண்ட வாஸ்கோடகாமாவை இந்தப் பயணத்திற்குத் தேர்ந்தெடுத்தார். ஜூலை 8, 1497 அன்று மூன்று கப்பல்களுடன் வாஸ்கோடகாமா பயணத்தைத் தொடங்கினார். நடுக்கடலில் புயல் வீசியதால் கப்பல் மாலுமிகள் பயந்து பின்வாங்க நினைத்தபோது, வாஸ்கோடகாமா அவர்களைக் கடுமையாக மிரட்டி பணிய வைத்தார்.
மொசாம்பிக் பகுதியில் இஸ்லாமியர்கள் போல் வேடமிட்டு அவர் ஏமாற்ற நினைத்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த ஊர் மீது பீரங்கியால் தாக்கிவிட்டுத் தப்பினார். பின்னர் மாலிந்தி என்ற இடத்தில் ஒரு அரேபிய மாலுமியின் உதவியைப் பெற்று இந்தியாவிற்கு வந்தார்.
கள்ளிக்கோட்டையில் அவமானம்!
மே 20, 1498 அன்று வாஸ்கோடகாமா கேரளாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். அப்பகுதி மன்னரான சாமூதிரி அவரை வரவேற்றார். ஆனால் வாஸ்கோடகாமா அரசருக்கு பரிசாக அளித்த சாதாரண துணிமணிகளைப் பார்த்து மன்னரின் ஆட்கள் சிரித்து அவமானப்படுத்தினர். அரேபியர்களை விரட்டிவிட்டு தங்களுக்கு மட்டுமே வர்த்தக உரிமை தரவேண்டும் என்ற காமாவின் கோரிக்கையை மன்னர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த காமா, ஊர் திரும்பும் போது சில இந்தியர்களைக் கடத்திச் சென்றார்.
கொடூரத் தாக்குதல்!
வெறுங்கையோடு போர்த்துகல் திரும்பிய காமா அங்கு மாபெரும் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டார். பின்னர் 1502 ஆம் ஆண்டு இருபது போர்க்கப்பல்கள் மற்றும் ஆயிரம் வீரர்களுடன் மீண்டும் இந்தியாவிற்கு வந்து பெருமளவில் வன்முறையை அரங்கேற்றினார். மெக்காவிலிருந்து திரும்பிய ஒரு கப்பலில் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட பயணிகளை இரக்கமின்றி உயிரோடு எரித்துக்கொன்றார். கள்ளிக்கோட்டை நகரின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி, அப்பாவி மீனவர்களைக் கொன்று தனது அதிகாரத்தை நிலைநாட்டினார்.
வன்முறை, வஞ்சகத்தின் மூலம் பிற நாடுகளைக் கைப்பற்றும் தந்திரத்தை வாஸ்கோடகாமா தான் ஐரோப்பியர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவருக்குப் பின் வந்த அத்தனை ஐரோப்பியர்களும் இந்த கொடூர வழியைத் தான் பின்பற்றினர். 1524 ஆம் ஆண்டு வைஸ்ராயாக மீண்டும் இந்தியா வந்த அவர், மலேரியா காய்ச்சலால் மரணமடைந்தார். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரும் வீரன், ஆனால் இந்தியர்களின் பார்வையில் அவர் ஒரு ஈவிரக்கமற்றவர் என்பது தான் வரலாற்று உண்மை.