

பெண்களுக்கு எதிரான உலக வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ம் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பொதுவெளியில் காட்டி அதற்கான நியாயமான, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17ம் நாள் கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ம் நாள் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 54 /134 இலக்க பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25ல் மிரபல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். 'மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள்' என்று பின்னர் உலக பெயர் பெற்றனர் இந்த மிரபல் சகோதரிகள். லத்தின் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையின் சின்னமாக இவர்கள் மாறினர்.
1980ம் ஆண்டு முதல் இந்நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூறுவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி முடிவடையும்.
இதில் ஒவ்வொரு மாதமும் 25ம் தேதி ‘ஆரஞ்சு தினம்’ என்று UNITE பிரச்சாரம் அறிவித்துள்ளது. பிரகாசமான மற்றும் நம்பிக்கையான நிறமாக ஆரஞ்சு நிறம்’ நம்பிக்கையையும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத எதிர்காலத்தையும் குறிக்கிறது.
உடல் ரீதியான வன்முறை, வாய்மொழி வன்முறை, மன ரீதியான வன்முறை, பாலியல் வன்முறை, பொருளாதார வன்முறை, பாலின அடிப்படையிலான வன்முறை, சாதி அடிப்படையிலான வன்முறை என பெண்களுக்கு எதிரான வன்முறை நிறைய உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையில் வெறுப்பு, பேச்சு, பாலியல் கொடுமை, இணைய வழி துன்புறுத்தல் என பல வகை வன்முறைகள் உள்ளன.
உடல் ரீதியான தாக்குதல்கள், உதாரணமாக திக்கு முக்காடச் செய்வது, அடிப்பது, தள்ளிவிடுவது, தீங்கு விளைவிக்கப்போவதாக மிரட்டுவது, பாலுறவு ரீதியான வன்முறை செயல்கள், கட்டாய பாலுறவு அல்லது ஒருவர் செய்ய விரும்பாத பால் ரீதியான செயல்களை செய்யுமாறு அவர்களை வற்புறுத்துவது, உணர்ச்சி ரீதியிலான துஷ்பிரயோகம் (பட்டப்பெயர் வைத்து கூப்பிடுதல் மற்றும் ஏளனம் செய்தல் / மரியாதை குறைவாக நடத்துதல், கெட்ட எண்ணத்தோடு பார்ப்பது, ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தல், இதில் இணையத்தில் சமூக ஊடக வாயிலாக ஜி.பி.எஸ். ட்ராக்கிங் சாதனங்கள் கொண்டு கெட்ட எண்ணத்தோடு பார்த்தலும் பேசுதலும் அடங்குகிறது.
பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் மரியாதையை பற்றி சிறு வயதிலிருந்து கற்பிக்க வேண்டும். அனைத்து வகையான வன்முறைகள் அதன் விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பெண்களுக்கு எதிரான வன்முறையை கடுமையாக தண்டிக்கும் சட்டங்களை உருவாக்குதல், அதனை அமல்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தகுந்த ஆதரவை வழங்கும் வகையில் நீதித்துறையை மேம்படுத்துதல், பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை கடுமையாக பின்பற்றுதல், பெண்களுக்குத் தேவையான சுய பாதுகாப்பு திறன்களை கற்றுத் தருவது அவசியம்.
அதோடு, அவசர காலங்களில் உதவி பெறும் செல் எண்களை தெரிந்து வைத்திருத்தல், சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வலம் வருவது, வன்முறைகளைப் பற்றி பேசவும் புகார் அளிக்கவும் தைரியமான சூழலை உருவாக்குதல், பெண்களை அநாகரிகமாக சித்தரிக்கும் திரைப்படம் மற்றும் விளம்பரங்களை தடை செய்தல், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம் 2013ன்படி அனைத்து அலுவலகங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.