அதிசயத்தில் வியக்கவைக்கும் விளாப்பாக்கம் குடைவரை கோயில்!

Vilapakkam Pancha Pandava Hill
Vilapakkam Pancha Pandava Hill
Published on

மிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது அதிசயங்கள் நிறைந்த குடைவரைக் கோயில். ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர் மலை.

இந்த மலைப் பகுதி 8 மற்றும் 11ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு முழுமையான சமண மையமாகத் திகழ்ந்துள்ளது. இந்த சமணக் குடைவரைக் கோயில், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் கூடியதாக இயற்கைக் குகைகளாக மலை மேல் அமைந்துள்ளது.

Vilapakkam Kudaivarai temple
Vilapakkam Kudaivarai temple

இக்குடைவரையின் மண்டபம் மிகவும் பெரியது. மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு முழுத்தூண்கள் உள்ளன. சுவரோடு ஒட்டியபடி அரைத் தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப் பட்டைகள் போன்ற பகுதிகள் எதுவும் காணப்படவில்லை. இது முழுமையாகச் செதுக்கி முடிக்கப்படாத குடைவரையாகவே காணப்படுகின்றது.

இது மகேந்திர பல்லவ மன்னனின் இறுதிக் காலத்தில் தொடங்கப்பட்டு பணி முழுதும் நிறைவேறாமல் பாதியில் விடப்பட்டதாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் இந்தக் குடைவரையைச் சமண முனிவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. குடைவரை முகப்புப் பகுதிகளில், சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள வேறு கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டில் இக்குடைவரையில் சமணர்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.

Jain Tirthankar
Jain Tirthankar

பல்லவப் பாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குடைவரைக் கோயில். கிழக்கு முகம் பார்த்த இந்த குகை ஒரு பெரிய மலை அடிவாரத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இந்தக் குகைக்கோபுரங்கள் வரிசையாகப் பன்னிரண்டு தூண்களால் அமைக்கப்பட் டுள்ளன. இந்தத் தூண்கள் மேல்மட்டத்தில் ஒரே சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் விமானங்கள் மேலே வளைந்த கோள்களும் உள்ளன. பக்கச்சுவர்கள் சதுர வடிவில் செதுக்கப்பட்ட தொகுதிகள் கொண்டவை. இங்கே உள்ள கல்வெட்டுப்படி, இந்த மலையை திருப்பான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘முகமூடிக் கொள்ளையர்கள்’ என அழைக்கப்படும் விலங்குகள் எவை தெரியுமா?
Vilapakkam Pancha Pandava Hill

கல்வெட்டுகளில் யக்ஷி, நாகநதி மற்றும் ஜைன தீர்த்தங்கரர் ஆதிநாதர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யக்ஷியின் உருவம் ஒரு பெரிய பாறையில் நீர் உள்ளடக்கிய குளம் அருகில் உள்ளது. குகையில் சமணப் படுக்கைகள் வெட்டப்பட்டடுள்ளன. யக்ஷி ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பார். யக்ஷியைச் சுற்றி நான்கு பேர் உள்ளனர். யோக நிலையில் அமர்ந்த ஒரே பாறையில் தெற்கு முகத்தில் செதுக்கப்பட்ட இரண்டு புடைப்புச் சிற்பங்கள், ஆடையற்ற சமணர் உருவம் மற்றும் ஒரு விலங்கு, 17ம் நூற்றாண்டில் இங்கே மலை மீது தங்கிய முஸ்லிம் துறவி குடும்பக் கல்லறைகளும் அமைந்துள்ளன. பெரிய பாறையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னன் நந்திவர்மன் மற்றும் முதலாம் ராஜராஜசோழன் ஆகிய மன்னர்கள் இங்கே வசித்த சமணத் துறவிகளுக்குக் கொடையளித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com