
முகாலய அரசர்களுக்கே அநியாய வட்டிக்கு கடன் கொடுத்த பணக்கார வியாபாரி... யார் தெரியுமா?
இந்தியாவை ஆண்ட வம்சங்களில் முகலாயர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில் இந்தியாவின் ஆட்சி முறையிலும், கலாச்சாரத்திலும், கட்டிடத்துறையிலும் முகலாயர்கள் காலத்தில்தான் புரட்சி ஏற்பட்டது. இத்தகைய முகலாயர்களுக்கே பணத்தை கடனாக கொடுத்த வியாபாரி குறித்து இப்பதிவில் காண்போம்.
முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த குஜராத்தி அதிபர் விர்ஜி வோரா 1619 முதல் 1670 வரையிலான காலகட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தொழிலதிபராக இருந்தார்.
மிகப்பெரிய பணக்கார வணிகராகக் கருதப்பட்ட இவர் ரூ. 80 லட்சம் சொத்து மதிப்புடையவராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இது நம்ப முடியாத தொகையாகும். அவரது மகத்தான செல்வம் மற்றும் செல்வாக்கு காரணமாக கிழக்கிந்திய நிறுவனம் அவரை 'வணிக இளவரசர்' என்று அழைத்தது.
ஒரு வர்த்தகராக, விர்ஜி வோரா, அபின், தங்கம், பருத்தி, தந்தம், மிளகு மற்றும் பவளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வர்த்தகம் செய்தார். இந்தியா முழுவதும் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட வெளிநாடுகளில் உள்ள முக்கிய வணிக மையங்களில் முகவர்களை நியமித்து, இந்த தயாரிப்புகள் பலவற்றின் வர்த்தகத்தில் அவர் ஆதிக்கம் செலுத்தினார்.
அவரது வணிக சாம்ராஜ்ஜியம் சூரத்திலிருந்து அகமதாபாத், ஆக்ரா மற்றும் பரோடா போன்ற நகரங்கள் வரை பரவியது. அவரது வாக்குறுதி பத்திரங்கள் இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்கப்பட்டன. மேலும் அவரது முகவர்கள் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி (DEIC) இரண்டிற்கும் வர்த்தகத்தை எளிதாக்குவதிலும் நிதி நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.
விர்ஜி ஒரு திறமையான வங்கியாளராக இருந்தார். கிழக்கிந்திய கம்பெனி உட்பட பல்வேறு வணிகங்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கினார். மேலும் படையெடுப்புகளின் போது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிற்கும் கூட அவர் கடன் கொடுத்தார். வட்டி அதிகமாக இருந்தபோதிலும், ஆங்கில வர்த்தகர்கள் அவரிடமிருந்து கடன்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தனர். ஏனெனில் அவர் மட்டுமே பெரிய தொகைகளைக் கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வமும், அதிகாரமும் கொண்டவராக இருந்தார்.
விர்ஜியின் முக்கிய உத்திகளில் ஒன்று மிளகு வர்த்தகத்தின் மீதான அவரது கட்டுப்பாடு. அவர் நாட்டில் உள்ள அனைத்து மிளகையும் வாங்கி ஆங்கிலேயர்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றார். இது அவரை மசாலா வர்த்தகத்தில் ராஜாவாக மாற்றியது.
கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாளராக இருந்தபோதிலும், விர்ஜி அந்த நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் முகலாய ஆளுநர்களுடன் நல்ல உறவைப் பேணி வந்தார். இருப்பினும், அவர் சில சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. 1635-ல் சூரத்தின் ஆளுநரால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பின்னர் பேரரசர் ஷாஜஹானால் விடுவிக்கப்பட்டார்.
1660-களில், விர்ஜி குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்தார். குறிப்பாக, மராட்டியத் தலைவர் சிவாஜி சோதனைகளின் போது அவரது கடைகளில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துச் சென்றார். இருப்பினும், அவரது நிதி புத்திசாலித்தனம் மற்றும் வணிக தொடர்புகள் அவரை விரைவாக அதிலிருந்து வெளிவர உதவின.
1670-களில் விர்ஜி வணிகத்திலிருந்து ஓய்வு பெற்று, வியாபார சாம்ராஜ்ஜியத்தை அவரது பேரனுக்கு வழங்கினார். 1675 ஆம் ஆண்டில் காலமானார்.
அவரது காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக யாராலும் அசைக்க முடியாத நபராக அவர் அதிகாரம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களிடமே வணிகம் செய்து தன் தொழிலை வளர்ச்சி அடைய செய்த தொழிலதிபர் விரிஜி வோரா என்றென்றும் நினைவுகூறகத்தக்கவர்.