
ஜலதோஷம் பிடித்துவிட்டால் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படுவது சகஜம். சளித் தொல்லையில் இருந்து விடுபட மூக்கை பலமாக சிந்துவதுதான் உடனடி நிவாரணம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அது சரியா? பலரும் அறியாத உண்மை என்னவென்றால், மூக்கை வேகமாக சிந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பலமாக மூக்கை சிந்துவது, மூக்கின் மென்மையான உள் தோலில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, நாம் வேகமாக மூக்கை சிந்தி வெளியேற்றும் சளியானது, காற்றோடு சேர்ந்து சைனஸ் குழிக்குள் சென்று தொற்றை அதிகமாக்கும் அபாயம் உள்ளது. மூக்கை பலமாக சிந்தி வெளியேற்றும்போது ஏற்படும் அதிக அழுத்தம், யூஸ்டாசியன் குழாய் வழியாக சளியை காதுக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும். இது காது தொற்றுக்கு முக்கிய
அப்படியானால் மூக்கை சிந்துவது எப்படி எனக் கேட்கிறீர்களா? மூக்கை சுத்தப்படுத்த வேண்டும் தான், அதே சமயம் ஆபத்தும் வரக்கூடாது என்றால் என்ன செய்வது? நிபுணர்கள் இதற்கும் ஒரு சிறந்த தீர்வு சொல்கிறார்கள். மூக்கை மென்மையாக சிந்துவதே பாதுகாப்பானது. ஒரு நாசியை விரலால் மூடிக்கொண்டு, மறு நாசியை மெதுவாக சிந்துங்கள்.
அதிக அழுத்தம் கொடுக்காமல் சளியை வெளியேற்ற வேண்டும். மூக்கு அடைப்பு அதிகமாக இருந்தால், முதலில் உப்பு நீர் கரைசலை மூக்கில் தெளித்து அல்லது ஆவி பிடித்து சளியை தளர்த்தலாம். பிறகு மென்மையாக மூக்கை சிந்தலாம். மூக்கை துடைக்க மென்மையான டிஷ்யூக்களை பயன்படுத்துவது நல்லது. கற்றாழை கலந்த டிஷ்யூ பேப்பர்கள் மூக்கைச் சுற்றி ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவும்.
மூக்கை சிந்துவதற்கு மாற்றாக வேறு வழிகளும் உள்ளன. உப்பு நீர் கொண்டு மூக்கை கழுவுவது சளி, பாக்டீரியா போன்றவற்றை வெளியேற்ற உதவும். மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூக்கடைப்பு நீக்கிகள் தற்காலிகமாக மூக்கின் பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து சுவாசத்தை எளிதாக்கும். ஆனால் இவற்றை அடிக்கடி உபயோகிக்க கூடாது. சூடான நீரில் நனைத்த துணியை கொண்டு ஒத்தடம் கொடுப்பதும், நீராவி பிடிப்பதும் சளியை தளர்த்தி, மூக்கை சிந்தாமலேயே சளியை வெளியேற்ற உதவும்.
எனவே, ஜலதோஷம் பிடிக்கும்போது மூக்கை வேகமாக சிந்துவதை தவிர்த்து, மென்மையான முறையை பின்பற்றுவது அல்லது மாற்று வழிகளை முயற்சிப்பது நல்லது.