'விசாக் பகு' - 'மோட்சு மோங்' - 'டிசேச்சூ' - 'பாய் சிக்கி' - இவை என்ன?

Summer Festivals
Summer Festivals
Published on

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்ட நாடு. இவை ஆண்டு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. இதில் கோடைக்காலமும் விதிவிலக்கல்ல.

நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் கோடை விழாக்களில் சில...

இந்திய மற்றும் போர்த்துகீசிய கலாச்சாரங்களின் கலவையுடன் கூடிய கோவா, இந்தியாவில் மிகவும் உற்சாகமான கோடை விழாக்களில் சிலவற்றை நடத்துகிறது. கோவாவில் மார்ச் ஏப்ரல் மாதங்களில்தான் புகழ்பெற்ற கார்னிவல் திருவிழா நடைபெறும். இது ஒரு வாரம் முழுவதும் நடக்கும் திருவிழா. விதவிதமான அலங்காரங்களுடன் பேரணி நடக்கும். இது ரோமன் கத்தோலிக்க நாடுகளில் இருந்து வந்த பழக்கம். பேரணிகளில் விதவிதமான முகமூடிகள் அணிந்து வருவார்கள்.

'பாய் சிக்கி' எனும் கோடை விழா பஞ்சாப் பகுதியில் ஏப்ரல் 13 ம் தேதி நடக்கிறது. இதை ராபி பயிர் அறுவடை திருநாளாக கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பஞ்சாப் பகுதியில் கிராமப்புறங்களில் கண்காட்சி, நாடகங்கள் நடைபெறும். படகு போட்டி, குத்துச்சண்டை போட்டிகளும் நடைபெறுகின்றன. புகழ் பெற்ற 'பங்கரா' நடனம் ஆண்கள் ஆடி மகிழ்வார்கள்.

வட கொல்கத்தா பகுதிகளில் ஏப்ரல் மாதங்களில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் மரத்தால் செய்யப்பட்ட முகமுடிகள் அணிந்து கொண்டு அந்த வருடம் நல்ல மழை வேண்டி நடனம் ஆடுவார்கள். அந்த நடனத்திற்கு பெயர் 'கேம்பகிரா'.

பீகார், பெங்கால், ஒரிசா, அஸ்ஸாம் பகுதிகளில் 'விசாக் பகு' எனும் பெயரில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. விதவிதமான நடனங்கள் நடக்கும் விழா இது. இவ்விழாவில் பார்சிய முறை விருந்தோம்பல் கடைப்பிடிக்கப்படுகிறது.

'மோட்சு மோங்' என்பது நாகாலாந்தின் ஆவோ பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழாவாகும். மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் இந்த விழா, விதைப்பு முடிவைக் கொண்டாடுவதோடு, புதிய விவசாய ஆண்டைத் தொடங்குகிறது. இது பாரம்பரிய பாடல்கள், நடனங்கள் மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகிறது. சாங்பங்டு சடங்கை உள்ளடக்கியது. அங்கு ஒரு பெரிய நெருப்பு மூட்டப்படுகிறது, மக்கள் அதைச் சுற்றி வந்து பாடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
கோகினூர் வைரத்தை ஆண்கள் அணிந்தால் பேரழிவு வரும் என்பது உண்மையா?
Summer Festivals

வைகாசி மாதத்தில் மணிப்பூர் பகுதியில் கோடைக்கால விழா நடைபெறும். சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் போன்று அங்கே சிவனுக்கும் பார்வதிக்கும் திருக்கல்யாணம் செய்து வழிபடுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரே மலை வாசஸ்தலமான மவுண்ட் அபு பகுதியில் கோடை விழா, ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கொண்டாடுகிறது. புத்த பூர்ணிமாவின் புனிதமான பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இரண்டு நாள் திருவிழாவில் , நடனம், இசை, வாணவேடிக்கை களைகட்டும். விழா நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து நக்கி ஏரியில் படகுப் போட்டி நடைபெறும்.

கூமர் எனும் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி ஆடும் ராஜஸ்தான் சிறப்பு நடனமும் நடக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் ஸ்கேட்டிங் பந்தயங்கள் முதல் இழுவை போர் வரை பல்வேறு வேடிக்கையான போட்டிகள் நடைபெறும்.

இமயமலை - திபெத் மலைப்பகுதியில் உள்ள லடாக் பகுதியில் கோடைவிழா 'டிசேச்சூ' எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. ஆடல் பாடல்களுடன் நடைபெறும் இவ்விழா ஜூன் மாதம் அதாவது 5 வது புத்த மாதத்தில் நடைபெறும். கெட்ட ஆவிகளை விரட்ட முகமுடிகள் அணிந்து நடனம் ஆடுகின்றனர்.

சிக்கிம் கோடைக்கால திருவிழா மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் மலர் கண்காட்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளை ருசித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கூடுதலாக, ரிவர் ராஃப்டிங், பாராகிளைடிங் மற்றும் மலையேற்றம் போன்ற சாகச நடவடிக்கைகளும் திருவிழாவின் ஒரு பகுதியாகும். திருவிழாவின் ஈர்ப்பு ஒன்று துறவிகளால் நிகழ்த்தப்படும் பாரம்பரிய சாம் நடனம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஹெட்செட் யூஸ் பண்றீங்களா?ஹெட்செட் கலாச்சாரத்தை முதன்முதலில் தொடங்கியவர்கள் யார் தெரியுமா?
Summer Festivals

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com