வியப்பில் விழிகளை விரியவைக்கும் மைசூர் அரண்மனை!

மைசூர் அரண்மனை
மைசூர் அரண்மனை
Published on

தென்னிந்தியக் கட்டடக்கலைகள் உலக அளவில் புகழ் பெற்றவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மைசூர் அரண்மனை. அந்த அரண்மனையின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மைசூர் அரண்மனை கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிகவும் அற்புதமானதும், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றும் ஆகும். இதற்கு, ‘அம்பா விலாஸ்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. 1399ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை மைசூரை ஆண்டவர்கள் உடையார் வம்சத்தினர். இவர்களின் வசிப்பிடமாக மைசூர் அரண்மனை இருந்துள்ளது.

மைசூர் அரண்மனை மண்டபம்
மைசூர் அரண்மனை மண்டபம்

இந்த அரண்மனையின் அடித்தளம் 14ம் நூற்றாண்டில் மைசூர் அரச குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது. மைசூர் ராஜ்ஜியத்தின் முதல் ஆட்சியாளரான யதுராய உடையார்தான் பழைய அரண்மனையைக் கட்டியதாக நம்பப்படுகிறது. தற்போதைய அரண்மனைக்கு முன்னோடியாக இருந்த பழைய அரண்மனை ஆறு நூற்றாண்டுகளாக பல முறை இடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

மைசூர் அரண்மனையின் கட்டடக்கலையை பார்க்கும்போது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு பிரமிக்கவைக்கும் பேரழகாக இருக்கும். நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர் ஹென்றி இர்வின் என்பவர் வடிவமைத்து, தற்போது நாம் காணும் தோற்றத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எடுத்து கட்டி முடித்தனர். மைசூர் அரண்மனை இந்து, முகலாயர், ராஜ்புட் மற்றும் கோதிக் ஆகியவை கலந்த பாணியில் இந்தோ- சர்செனிக் முறையில் கட்டப்பட்டுள்ளது.

மைசூர் அரண்மனை வெளித்தோற்றம்
மைசூர் அரண்மனை வெளித்தோற்றம்

மூன்று மாடிகள் கொண்ட அரண்மனையின் சிறு தூண்களில் கூட வேலைப்பாடுகள் இருக்கும். குவிமாடங்கள் அரிய வகை பிங்க் மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அரண்மனையின் வெளிப்புறத்தில் இரண்டு தர்பார் மண்டபங்கள், வளைவுகள், விதானங்கள், விரிகுடா ஜன்னல்கள் மற்றும் அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இவை காட்சி தருகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆழியாறு அணையின் அற்புத வரலாறு!
மைசூர் அரண்மனை

தற்போது, இந்த மைசூர் அரண்மனை கர்நாடக அரசின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரண்மனையின் உள்ளே உடையார் மகாராஜா வம்சத்தினரின் நினைவு பொருட்கள், நகைகள், ராஜ அலங்கார ஆடைகள் மற்றும் ஓவியங்கள் சுற்றுலா வரும் பயணிகள் பார்வையிட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த தசரா திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். அந்த நேரத்தில் மைசூர் அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். இதைக் காண வருடம்தோறும் ஆறு மில்லியன் மக்கள் இங்கு கூடுவர். தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக போற்றப்படுவது இந்த வரலாற்று சிறப்புமிக்க மைசூர் அரண்மனை என்றால் அது மிகையாகாது.நம் நாட்டின் கலாசார பொக்கிஷம் இந்த மைசூர் அரண்மனை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com