
காகத்திய மன்னர்களின் அரிய கலை படைப்பு. சிவன், விஷ்ணு மற்றும் சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த ஆலயம் இது. சிற்பங்களுக்காக புகழ்பெற்ற ஆலயமும் கூட. இசை எழுப்பும் தூண்கள் கொண்ட இந்த ஆலயம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. சுற்றுலா தலங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது இந்நகரம்.
சாளுக்கிய பாணியில் கட்டப்பட்ட காகத்திய கட்டடக்கலை:
தெலுங்கானாவின் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் வாரங்கல் ஆயிரம் தூண்கள் கோவில் கிபி 1163ல் காகத்திய மன்னர் ருத்ர தேவரால் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது. துளையிடப்பட்ட கல் திரைகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள், அழகாக செதுக்கப்பட்ட சின்னங்கள், காகத்திய கட்டடக்கலையின் சிறப்பை பிரதிபலிக்கும் பாறையில் செதுக்கப்பட்ட அழகான யானைகள் போன்றவற்றைக் கொண்டது. இக்கோவில் வாரங்கலில் மிகவும் பிரபலமான கோவிலாகும். இதன் கட்டுமானம் அனைவரையும் வியக்க வைக்கின்றது.
திரிகூடாலயம்:
ஆயிரம் தூண்கள் கோவில் அல்லது ருத்ரேஸ்வர ஸ்வாமி கோவில் என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹனமகொண்டா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். ஹனம்கொண்டா மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். சிவன், விஷ்ணு மற்றும் சூரியன் ஆகிய மூன்று தெய்வங்களும் வழிபடப்படுகின்றன.
இது 'திரிகூடாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது ருத்ர தேவரால் கட்டப்பட்டது என்றும் அவரது நினைவாக ஈசனுக்கு 'ஸ்ரீ ருத்ரேஸ்வரர் சுவாமி' கோவில் என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிற்கால மன்னர்களும் இக்கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்குள்ள தூண்களை உலோகப் பொருள் கொண்டு தட்டும் பொழுது ஏழு ஸ்வரங்களின் மெல்லிசையை கேட்க முடியும்.
சிற்பங்களின் நுணுக்கம்:
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிற்பம் கருப்பு பசால்ட் கல்லால் ஆனது. இது இக்கோவிலினுடைய பெரிய ஈர்ப்பாகும். இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ள இக்கோவில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களுக்கு பெயர் பெற்றது.
இக்கோவில் நட்சத்திர வடிவ கட்டடக்கலையை கொண்டுள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட யானைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. கோவிலைச் சுற்றி அழகான தோட்டமும் அமைந்துள்ளது. தோட்டத்தில் பல சிறிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.
கட்டடக்கலையின் சிறப்பு:
ஆயிரம் தூண்கள் இருந்தாலும் ஆலயத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் நடுவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை தூண்கள் எதுவும் மறைக்காமல் இருக்கும் விதத்தில் கட்டியிருப்பது தனிச்சிறப்பாகும். ஒற்றைக் கல்லால் ஆன நந்தி உயிரோட்டத்துடன் காணப்படுவது சிறப்பு. ஆலயத்திற்கு அருகே செவ்வக வடிவ திருக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. பல்வேறு படையெடுப்பு காரணமாக இக்கோவில் சிதலமடைந்தது என்றாலும் 2004இல் இந்திய தொல்லியல் துறையினரால் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
அருகில் உள்ள ரயில் நிலையம் வாரங்கல் ரயில் நிலையமாகும். இது கோவிலிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமாகும். ஹனம்கொண்டா பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.