நீர்நிலைகள் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய ஆதாரமாகும். நீர் என்பது அளவாக இருக்க வேண்டும். அதுவே மிகையானால் வெள்ளமாக மாறி நமக்கு பல இன்னல்களை ஏற்படுத்தும். நம் அன்றாட வாழ்வை பாதிக்கும். நமது முன்னோர்கள் தாங்கள் பயன்படுத்திய பல நீர்நிலைகளை வகைப்படுத்தி உரிய பெயர் சூட்டி பயன்படுத்தியுள்ளார்கள். நமக்குத் தெரிந்த நீர்நிலைகள் கிணறு, குளம், ஏரி முதலானவை மட்டுமே. ஆனால், இவற்றைத் தவிர பல வகையான நீர்நிலைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
‘ஊருணி’ என்பது மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள பிரத்யேக நீர் நிலையாகும். பாசிக்கொடி மண்டிய ஒரு குளமானது ‘சேங்கை’ என்று அழைக்கப்பட்டது. ‘பொய்கை’ என்பது தாமரைக் கொடிகள் அமைந்த ஓர் நீர் நிலையாகும்.
‘இலஞ்சி’ என்பது குடிக்க மற்றும் பல வகையான தேவைகளுக்குப் பயன்பட்ட ஒரு நீர் தேக்கமாகும். ‘அகழி’ என்பது மன்னர்களின் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த ஒரு நீர்நிலையாகும். ‘அருவி’ என்பது மலையின் மீதிருந்து கீழ்நோக்கி விழும் ஒரு நீர்நிலையாகும்.
‘ஆழிக்கிணறு’ என்பது கடலுக்கு அருகில் அமைந்த கிணறு. ‘உறை கிணறு’ என்பது மணற்பாங்கான இடத்தில் தோண்டி சிமெண்ட் உறைகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு நீர் ஆதாரமாகும். ‘கேணி’ என்பது அகலமாக, ஆழமான பெரிய கிணறு. ‘தொடு கிணறு’ என்பது ஆற்றில் உள்ள மணலைத் தோண்டி நீரைப் பெறும் இடமாகும். ‘பிள்ளைக்கிணறு’ என்பது குளத்தின் நடுவில் அமைந்த ஒரு கிணறு ஆகும். இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள் அமைந்த ஒரு பெரிய கிணறு ‘நடை கேணி’ என்றழைக்கப்படும்.
பூமிக்கடியிலிருந்து உருவாகும் நீர் ‘ஊற்று’ என்று அழைக்கப்படும். பூமியிலிருந்து உருவாகும் ஊற்று நீர் வாய்க்கால் வழி ஓடினால் அது ‘ஓடை’ என்று அழைக்கப்படும்.
மழைக்காலங்களில் பாசனம் மற்றும் பிற தேவைகளுக்காக தேக்கப்படும் ஒரு பெரிய நீர்நிலை ‘ஏரி’ என அழைக்கப்படும். ‘கால்வாய்’ என்பது ஏரி, குளம், ஊருணி இவற்றிக்கு நீர் செல்லும் ஆதார வழியாகும்.
‘குட்டை’ என்பது மாடு முதலான கால்நடைகளைக் குளிப்பாட்டும் ஒரு நீர்த் தேக்கமாகும். ‘குமிழி’ என்பது பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த ஒரு கிணறாகும். ‘குளம்’ என்பது மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் ஒரு நீர் ஆதாரம்.
மழை நீரை பெரிய அளவில் தேக்கி பயன்படுத்தும் அமைப்பிற்கு ‘அணை’ என்று பெயர். ‘சுனை’ என்பது மலையிலிருந்து இயற்கையாக சுரக்கும் நீர் ஆதாரம். ‘திருக்குளம்’ என்பது கோயில்களில் காணப்படும் ஒரு நீர்நிலையாகும். ‘வலயம்’ என்பது வட்ட வடிவத்தில் அமைந்த குளம்.
படிகளில் நீர் மட்டம் வரை இறங்கிச் சென்று கிணற்றிலிருந்து நீரை எடுக்கும்படியாக இருந்தால் அது ‘நடவாவிக் கிணறு’ என்று அழைக்கப்படும். கோயில்களை ஒட்டி இத்தகைய கிணறுகள் அமைந்திருக்கும்.
நீரானது அது தேங்கும் அல்லது செல்லும் இடத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் தங்கித் தேங்கி நமக்கு உதவுகிறது. நமது முன்னோர்கள் ஒவ்வொன்றையும் அவற்றின் பயன்பாட்டிற்கேற்ற வகையில் பகுத்து அறிந்து அவற்றிற்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியுள்ளார்கள்.