
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு உணர்வு கலந்த மகிழ்ச்சியான தருணம். அதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பலரும் ஆசைப்படுவார்கள். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது பிரபலமாகி வரும் புதுமையான முறைதான் ‘டெஸ்டினேஷன் வெடிங். (Destination Wedding).
'டெஸ்டினேஷன் வெடிங்' என்றால் என்ன?
'டெஸ்டினேஷன் வெடிங்' என்பது வழக்கமாக திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு மாறாக, மணமக்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்று அங்கு திருமண விழாவையும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் நடத்துவர். இது திருமணத்தை மேலும் மகிழ்ச்சியாகவும், தனித்துவமானதாகவும் மாற்றுகிறது.
சமீபகாலமாக, பல திரைப்பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் 'டெஸ்டினேஷன் வெடிங்'களை தேர்ந்தெடுத்து தங்கள் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவே 'டெஸ்டினேஷன் வெடிங்' என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் எங்கு 'டெஸ்டினேஷன் வெடிங்' நடத்தலாம்?
தமிழகத்திலும் இயற்கை அழகு, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கடற்கரைகள் மற்றும் மலைப்பிரதேசங்களுடன் 'டெஸ்டினேஷன் வெடிங்'கிற்கு ஏற்ற பல அற்புதமான இடங்களை கொண்டுள்ளது.
அவற்றில் மகாபலிபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்று சொல்லலாம். வங்காள விரிகுடாவின் அழகிய கடற்கரையில் அமைந்துள்ள மகாபலிபுரம், அதன் பல்லவர் கால சிற்பங்கள் மற்றும் கோயில் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு இடமும் திருமணத்திற்கு ஒரு அற்புதமான பின்னணியை வழங்கும். இங்கு ஆடம்பர ரிசார்ட்டுகள் முதல் ஹோட்டல்கள் வரை பல்வேறு தங்கும் வசதிகள் உள்ளன.
அடுத்தப்படியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான சூழலில் அமைந்துள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதி குளுமையான காலநிலை மற்றும் இயற்கை அழகால் நிறைந்தவை. தேயிலைத் தோட்டங்கள், மூடுபனியால் சூழ்ந்த மலைகளும் தெளிவான நீரோடைகளும் இங்கு திருமணத்திற்கு ஒரு அற்புதமான உணர்வை உருவாக்கும். இங்கும் பல ரிசார்ட்டுகள் வசதிகள் உள்ளன.
மேலும், பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை சிறப்புகள் கூடிய புதுச்சேரி, ஒரு தனித்துவமான 'டெஸ்டினேஷன் வெடிங்' அனுபவத்தை வழங்குகிறது. அழகிய கடற்கரைகள், வண்ணமயமான தெருக்கள், நெருங்கிய கடற்கரை வழிப்பாதைகள், பழைமையான தேவாலயங்கள் ஆகியவை இங்குள்ள திருமண புகைப்படங்களுக்கு ஒரு அழகை சேர்க்கும்.
பட்ஜெட்டுக்கு பொருத்தமாக கொண்டாடுவது எப்படி?
'டெஸ்டினேஷன் வெடிங்' என்றாலே அதிக செலவாகும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால், சரியான திட்டமிடலுடன் பட்ஜெட்டுக்குள் ஒரு அற்புதமான திருமணத்தை கொண்டாட முடியும். திருமணத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளை கணிசமாகக் குறைக்கலாம். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைப்பது பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க உதவும்.
மேலும், திருமண சீசன் அல்லாத மாதங்களில் (off-season) திருமணம் நடத்துவது தங்கும் வசதிகள் மற்றும் பயணச் செலவுகளில் கணிசமான தள்ளுபடியைப் பெற உதவும். விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் வசதிகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வது சிறந்த சலுகைகளைப் பெற உதவும்.
எனவே, டெஸ்டினேஷன் வெடிங் என்பது பிரபலங்களுக்கே உரியது என்று நினைப்பது தவறு. நல்ல திட்டமிடல் இருந்தால், யார் வேண்டுமானாலும் தங்கள் கனவுத் திருமணத்தை அழகான இடத்தில் கொண்டாடலாம். வழக்கமான மண்டபங்களில் திருமணம் நடத்தும் பழக்கத்திலிருந்து சற்றே விலகி, ஒரு புதிய அனுபவத்தை தேடினால் 'டெஸ்டினேஷன் வெடிங்' சிறந்த தேர்வாக இருக்கலாம்.
உங்கள் செலவுத் திட்டத்துக்கு ஏற்றவாறு திட்டமிட்டு, உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நாளை ஒரு மறக்கமுடியாத நினைவாக மாற்ற முடியும்.