
உலகத்தில் பல இடங்கள் இன்றும் தனி சிறப்புடன் திகழ்கின்றன. காலம் கடந்தாலும், தங்களது அழகையும், ஆற்றலையும் அப்படியே காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம் செல்லும் போது, மனம் தானாகவே அமைதியை உணர்கிறது. இயற்கையின் அழகு மற்றும் ஆன்மீகத்தின் ஆழம் சேர்ந்தால், அந்த அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிடும். அப்படியான, மர்மமும், மாயையும் இணைந்த ஒரு புனித இடத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக நிழல் தந்த ஆலமரத்தின் கீழ், 18 சித்தர்களில் ஒருவரான தன்னாசியப்பர் சித்தர் இன்று வரை ஜீவசமாதியாக இருந்து அருள் பொழிகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மலைகளும், தென்னந்தோப்புகளும் சூழ்ந்த பசுமை நிலத்தில், ஓர் அகண்ட ஆலமரத்தின் அடியில், ஒரு சிலர் மட்டுமே உணரக் கூடிய அதிசய அனுபவங்கள் இங்கு நிகழ்கின்றன. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இங்கே நமது விருப்பங்களை மனதார வேண்டி ஆலமரத்தடியில் கைகளை வைத்தால் நம் இரு கைகளும் தானாகவே சேர்ந்து கொள்ளும்.
அப்படிச் சேர்ந்தால், உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய கனவுகள் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இந்த ஆலமரம் பார்ப்பதற்கு சாதாரணமாக இல்லாமல், மற்றொரு மரத்துடன் பிணைந்திருக்கிறது. இவ்வாறு இரண்டு மரங்கள் இணைந்து உருவாக்கும் இயற்கையின் சிற்பம் பார்ப்போருக்கு வியப்பையும் பக்தியையும் ஒன்றாக ஏற்படுத்துகிறது.
முன்னர் காலத்தில் வனவிலங்குகளால் சூழப்பட்டிருந்த அந்த இடம், இன்று பக்தர்களின் அர்ப்பணிப்பினால் பிரம்மாண்ட கோவிலாக மாறி, ஏராளமான பக்தர்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சமாக திகழ்கிறது.
இங்கு பிரதான தெய்வமாக தன்னாசியப்பர் வீற்றிருக்கிறார். மேலும் பாவாத்தம்மன், ஆஞ்சநேயர், முருகன், விநாயகர், நவகிரகங்கள், கால பைரவர் ஆகியோரும், 18 சித்தர்களும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சிவலிங்கமும் நந்தியும் ஆலமரத்தின் அடியில் வீற்றிருப்பது மேலும் அழகு.
தீராத நோய்கள், மனக் கவலைகள், தொழிலின் பிரச்னைகள் ஆகிய அனைத்தையும் தீர்க்கும் சக்திவாய்ந்த தலமாக பல அதிசயங்கள் இக்கோவிலில் நிறைந்துள்ளன. இத்தகைய சிறப்புமிக்க கோவில், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், பெரியநாயக்கன்பாளையம் அடுத்துவரும் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து இடதுபுறம் (மேற்கே) செல்லும் சாலையில் உள்ள செல்வபுரம் எனும் ஊரின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
தன்னாசியப்பரை காலை 7 மணி முதல் மாலை 7 வரை வழிபடலாம். நீங்களும் அந்த மர்மம் நிறைந்த ஆலமரத்தின் கீழ் உங்கள் வாழ்வை மாற்றும் அந்த அதிசயத்தை விரைவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.