கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், கல்பெட்டா எனுமிடத்திலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் அம்புகுட்டி மலை இருக்கிறது. இம்மலையில் எடக்கல் (இடையில் உள்ள கல்) குகைகள் (Edakkal Caves) அமைந்திருக்கின்றன. இக்குகைகள் கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலமாக உள்ளது.
அம்புகுட்டி மலை குறித்துப் பல கதைகள் இருக்கின்றன. ஸ்ரீ ராமனின் குமாரர்களான லவா குசா இரட்டையர்கள் எய்த அம்பில் இந்த மலை உருவானதாக ஒரு கதை உண்டு. இன்னுமொரு கதையில் இராமன் சூர்ப்பனகையைக் கொன்றது இம்மலையில்தான் என்று இருக்கிறது. இந்த மலையில்தான் எடக்கல் குகைகள் அமைந்திருக்கின்றன.
இந்தியாவின் கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில், கிமு 4,000 ஆயிரமாண்டுகளுக்கு முன் அமைந்த இரண்டு இயற்கையான குகைகள் எடக்கல் குகைகள். இக்குகைப் பகுதிகளில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்துள்ளன. தென்னிந்தியாவின் கற்காலத்திய ஒரே பாறை ஓவியம் எடக்கல்லில் கண்டெடுக்கப்பட்டதாகும்.
தொழில்நுட்ப வரையறையின்படி எடக்கல்லில் இருப்பன குகைகள் அல்ல எனினும், பாறைப் பிளவுகளால் ஆன இரண்டடுக்கு கொண்ட இக்குகையின் கீழடுக்கு 18 நீளம், 12 அடி அகலம், 18 உயரம் கொண்டது. மேலடுக்கு 96 அடி நீளம், 22 அடி அகலம், 18 அடி உயரம் கொண்டது. இக்குகைச் சுவர்களில் கி.மு 10,000 முதல் கி.மு 5,000 வரையான காலப்பகுதிகளில் வரையப்பட்ட மனிதர்கள், விலங்குகள் மற்றும் வேட்டைக் கருவிகளின் பாறைச் செதுக்கல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதக் குடியிருப்புகள் இருந்தன என்பதையும் அறிய முடிகிறது.
இந்தக் குகையின் கீழ்ப்பாகத்தில் பாறைச் செதுக்கல்களும் (Petroglyphs), மேற்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்களும் உள்ளன. இந்தக் குகைகளின் சுவர்களில் பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பாறைச் செதுக்கல்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாறைச் செதுக்கல்களின் காலம் நியோலிதிக் மனிதன் வாழ்ந்த காலம் (கி.மு. 6000 ஆண்டு) என்று கருதுகிறார்கள். இந்தக் குகையில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதன், இங்கு இருந்ததற்கான அடையாளமாகவும் கருதுகிறார்கள். எடக்கல் பாறைச் செதுக்கல்கள் அபூர்வமானது மட்டுமின்றித் தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே உதாரணம் எனலாம்.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் முந்தைய மலபார் மாநிலத்தின் (Erstwhile Malabar State) காவல் துறையில் காவல்துறைக் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த ஃபிரெட் ஃபேசட் (Fred Fawcett) என்பவர் 1890 ஆம் ஆண்டு இந்த குகைகளைக் கண்டறிந்து, உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதே அலுவலர் 1894 ஆம் ஆண்டில் இக்குகையில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நான்கு தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டறிந்துளார். தமிழ் பிராமி கல்வெட்டுகள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றால் நம்புவது சற்றுக் கடினம். ஒரு பிராமி கல்வெட்டில் 'சேர' ('கடுமி புதசேர') என்ற சொல் காணப்படுகிறது. இத்தொடரில் சேர என்ற சொல்லை அடுத்து மரம் ஒன்று ப்ரைட் கீறலாக கீறப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டிலும், 1996 ஆம் ஆண்டிலும் ஐராவதம் மகாதேவன், அப்பகுதிக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் கிறுக்கல்களால் பழுதுபட்டுப் போயிருந்த அக்கல்வெட்டைப் பார்வையிட்டதுடன், அதை வாசித்து வெளிப்படுத்தினார். 'சேர'என்ற சொல்லுக்கான மிக முற்காலத்திய கல்வெட்டு ஆதாரம் என்பதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
‘ஓ பழமி’ என்று எழுதியிருந்ததை, மலையாள கல்வெட்டறிஞர்கள் ‘இ பழம’ என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாகக் கூறி எவ்வளவோ திரிக்க முயன்றனர். ஐராவதம் மகாதேவனும் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டார். நல்லவேளையாக நடன காசிநாதன் என்பவர் அது தமிழே என்றும், அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் இங்கு கண்டறிந்துள்ளனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு சமஸ்கிருதக் கல்வெட்டும் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐந்தாவது பிராமி கல்வெட்டு ஒன்றைக் கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த கல்வெட்டறிஞர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
எடக்கல் குகைகளுக்குச் செல்ல காலை 9:30 முதல் மாலை 4:30 வரை அனுமதிக்கப்படுகிறது. இங்கு நுழைவுக் கட்டணமாகப் பெரியவர்கள்-ரூ.20/-, சிறுவர்கள்-ரூ.10/-, வெளிநாட்டினர்- ரூ.40/-என்று இருக்கிறது. ஒளிப்படக் கருவிகள், நிகழ்படக்கருவிகள் போன்றவைகளுக்குத் தனிக்கட்டணம் செலுத்திட வேண்டும்.