அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு?

Akshathai
Akshathai
Published on

நாம் பூஜையின் போது பயன்படுத்துகின்ற மங்கல 'அக்ஷதை'யைப் (அட்சதை) பற்றியும் அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது?

இதன் 'தாத்பர்யம்' (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம். 'க்ஷதம்' என்ற வார்த்தைக்கு 'குத்துவது' அல்லது 'இடிப்பது' என்று பொருள்.

'அக்ஷதம்' என்றால் இடிக்கப்படாதது என்று பொருள்.

உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி 'அக்ஷதை' எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு 'அக்ஷதை' தயாரிப்பது உசிதமல்ல என்பது பெரியோர்களின் வழக்காகும். இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம். எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?

சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது.

அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி, 'உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்' என்ற பொருளிலேயே அக்ஷதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு. திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களை விட, அக்ஷதைக்கே ஏன் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது?

சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர்.

வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழவிழைபவர்கள். அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 10 நினைவுச் சின்னங்கள்!
Akshathai

ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் அக்ஷதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம்.

திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும். அக்ஷதையைப் போல முழுமை எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அக்ஷதையின் குறியீடு.

இப்படிப்பட்ட அக்ஷதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும். அதே போன்று புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அக்ஷதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.

இதையும் படியுங்கள்:
மல்லாரி இசை எப்போது இசைக்கப்படும்?
Akshathai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com