பாண்டிய நாட்டுக்கு சமண முனிவர்கள் வழங்கிய மிகப்பெரிய வரம் என்ன?

Pandiya Nadu
Pandiya Nadu
Published on

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்" என்பது தமிழ் மொழியின் தொன்மையை உணர்த்தும் ஒரு பெருமை மிகுந்த வாசகம். மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் மொழியை வளர்த்தவர்கள் நம் மன்னர்கள். அந்த மன்னர்களில் ஒருவராகிய பாண்டிய மன்னர்களுக்கு சமண முனிவர்களால் வழங்கப்பட்ட அற்புதமான வரம் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

முன்பொரு சமயம் வடநாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாம். பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காக முனிவர்கள் ஏராளமானோர் மதுரையை நோக்கி படையெடுத்தார்களாம். மதுரைக்கு வந்த முனிவர்கள் மதுரையில் பல்வேறு தொண்டுகளை செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்களாம். அவ்வாறு தொண்டு செய்து வந்தவர்கள் தமிழ் மொழியையும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு, தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கத் தொடங்கினார்களாம். இப்படியே சென்று கொண்டிருந்த கால ஓட்டத்தில் குறிப்பிட்ட காலங்களுக்கு பின் வடநாட்டில் ஏற்பட்ட பஞ்சம் விலகியதாம்.

எனவே மீண்டும் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல விரும்பிய முனிவர்கள் அரசனிடம் சென்று தங்களது சொந்த இருப்பிடத்திற்கு செல்ல விரும்புவதாக கூறினார்களாம். ஆனால் பாண்டிய மன்னனுக்கு அவர்களை அனுப்புவதற்கு மனம் வராததால் விடை கொடுப்பதற்கு காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தாராம்.  இப்படியே  அரசன் காலத்தை கடத்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் அந்த முனிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலாக ஓலைச்சுவடியில் எழுதி, அடைக்கலம் கொடுத்த அரசனுக்கும் தமிழ் மொழிக்கும் காணிக்கையாக இதை ஏற்றுக்கொள்ளுமாறு கொடுத்துவிட்டு இரவோடு இரவாக ஊரை விட்டு சென்று விட்டார்களாம்.

அந்த முனிவர்களின் பிரிவை தாங்கிக் கொள்ள இயலாத அரசன் அவர்கள் எழுதிய அந்த ஓலைச்சுவடிகளை எல்லாம் அள்ளி ஆற்றில் போட உத்தரவிட்டாராம்.  வெள்ளத்தில் போட்ட ஓலைச்சுவடிகளில் 400 ஓலைச்சுவடிகள் மட்டும் வெள்ளத்தின் திசையை எதிர்த்து கரை வந்து சேர்ந்தனவாம்.

இதையும் படியுங்கள்:
எங்கே போச்சு, மரப்பாச்சி பொம்மைகள்?
Pandiya Nadu

அப்படி கரை வந்து சேர்ந்த அந்த 400 ஓலைச்சுவடிகளில் உள்ள பாடல்கள் தான் நாலடியார் எனும் அற்புதமான படைப்பு ஆகும். மன்னனுக்கும் தமிழ் மொழிக்கும் காணிக்கையாக பாடல்களை எழுதி வைத்து விட்டு சென்ற அந்த முனிவர்கள் தான் சமண முனிவர்கள். வறுமையின் பொருட்டு ஆதரித்த மன்னனுக்கும், மக்களுக்கும் நன்றி கடனாய் சமண முனிவர்களால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய வரம் தான் தமிழ் மொழியில் திருக்குறளுக்கு அடுத்ததாக ஒப்பற்ற நூலாக போற்றப்படும் நாலடியார் எனும் அற்புதமான பொக்கிஷம். 

இதன் பெருமை கருதியே "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்ற பழமொழி உருவானது. இதில் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிக்கும். நாலடியார் பாடல்கள் அனைத்தும் நான்கு வரிகளால் பாடப்பட்டவை. திருக்குறள் பாடல்கள் அனைத்தும் இரண்டு வரிகளால் பாடப்பட்டவை. திருக்குறளில் இருப்பது போன்றே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாக மொத்தம் 400 பாடல்கள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்றால், அதையே இன்னும் விரித்து கூறி இனிமையாக விளக்குவது நாலடியார் என்று சொல்லலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக போற்றப்படும் இந்த நாலடியார் தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அறிவு கருவூலம் என்றே சொல்லலாம். 

இதையும் படியுங்கள்:
கலா சாதனாலயா நாட்டியப்பள்ளியின் 'பாவார்ப்பணம்' நிகழ்ச்சி!
Pandiya Nadu

அருமையான இந்நூலுக்கு பதுமனார் மற்றும் தருமர் போன்ற சான்றோர்கள் விளக்க உரை எழுதியுள்ளார்கள். தமிழ் கருவூலத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் நாலடியார் நாம் அனைவரும் நன்கு கற்று, வாழ்வியலை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கான ஒரு அறிவுப் பெட்டகம் ஆகும். நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வாசித்துப் பாருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com