எங்கே போச்சு, மரப்பாச்சி பொம்மைகள்?

Marapachi Dolls
Marapachi DollsImg Credit: Pinterest
Published on

இன்றும் கூட நவராத்திரி விழா, இந்தியாவெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் வேறுவேறு வகையாக அனுசரிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்து நாளும் (நவராத்திரி + விஜயதசமி) பொம்மை கொலு வைத்து அம்பாளை பத்துவகை ரூபங்களில் வணங்கி அருள் பெறும் வழக்கம் மட்டும் மாறவேயில்லை.

இந்த பொம்மை கொலு சம்பிரதாயத்தை விடாமல் கடைபிடிக்கும் குடும்பத்தார், வருடந்தோறும் தத்தமது புதுப்புது கற்பனைகளுக்கேற்ப வித்தியாசமான அலங்காரங்களுடன், இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றங்களைச் சிறப்பிக்கும் வகையில்கூட நவீன பொம்மைகளுடன் கொண்டாடுகிறார்கள்.

இந்த கொலுவில் கட்டாயமாக இடம் பெறுபவை மரப்பாச்சி பொம்மைகள். ஆண் – பெண் ஜோடியாக ஒவ்வொருவர் வீட்டு பொம்மைகள் அணிவகுப்பிலும் இந்த ஜோடியைக் காண முடிகிறது.

இவ்வாறு மரப்பாச்சி பொம்மைகளை வைக்கும் வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனாலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், திருமணத்திற்குப் பிறகு மணப்பெண், தன் சீர்வரிசைகளுடன் ஒரு ஜோடி மரப்பாச்சி பொம்மைகளையும் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். அதாவது அந்தத் திருமணத்தை புகைப்பட பதிவோ வேறு எழுத்து மூல ஆவணமோ செய்துகொள்ளும் வசதி இல்லாத அந்த காலத்தில் தங்களுக்குத் திருமணமானதை உறுதிப்படுத்த, இந்த ஜோடி பொம்மைகளை, வீட்டின் பூஜையறையிலோ அல்லது கூடத்து சுவர் பிறையிலோ வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. புகுந்த வீட்டில் நவராத்திரி கொண்டாடும்போது, இந்த ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை முதலில் ஏதேனும் ஒரு படியில் வைத்து, அதன் பின்பே பிற பொம்மைகளை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

மரப்பாச்சி பொம்மைகள் செஞ்சந்தனம், முள்ளிலவு, ஊசியிலை போன்ற மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக ஆண் மற்றும் பெண் நிர்வாண வடிவ பொம்மைகளாக அவை இருக்கும். பிறகு அவரவர் விருப்பப்படி சிறிய அளவில் வண்ணத் துணிகளால் ஆடை மாதிரி தைத்தோ அல்லது சுற்றி மூடினாற்போலவோ அலங்கரம் செய்து வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.

இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஆந்திர மாநிலம் திருப்பதி குறிப்பிடத்தக்கது. இங்கே இந்த பொம்மைகளை ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் குறிப்பிடும் வகையில் உருவாக்கப்படுகின்றன. கொண்டபள்ளி மாவட்டத்தில் ராஜா-ராணி பொம்மைகளாகவும் தயாரிக்கப்படுகின்றன. அரை அடி முதல் அதிகபட்சமாக ஒரு அடி உயரம் வரை இந்த பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பொம்மை கலாசாரம்!
Marapachi Dolls

அந்த நாளில் தவழும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாக வெவ்வேறு வடிவில் மரப்பாச்சி பொம்மைகளைத் தருவார்கள். குறிப்பாக செஞ்சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் மருத்துவ குணம் மிக்கவை. ஆகவே அவற்றை வாயில் வைத்து சப்புவதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக உடலுக்கு நன்மை செய்வதாகவே இருந்தன. பொம்மைக்குக் கை, கால் என்று இருந்தாலும், அதன் முனைகள் மழுங்கலாக இருப்பதால், குழந்தைக்கு வாயில் குத்திவிடக் கூடிய அபாயமும் இல்லை.

ஆரம்பத்தில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் பிரபலமாக இருந்த இந்த பொம்மைகள் கர்நாடகா, மகாரஷ்டிரா, குஜராத், ஒடிசா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு அங்கே இறை அம்சமாக அவை கொண்டாடப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய நம்பிக்கைபடி வீட்டின் வளத்துக்கும், குழந்தைகளின் உடல்நலத்துக்கும் உகந்ததாக தென்னிந்திய குடும்பங்களில் மரப்பாச்சி பொம்மைகள் பராமரிக்கப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து செலுலாய்ட் - துணி – ரப்பர் – பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மைகள் அறிமுகமாகி குழந்தைகளின் வரவேற்பைப் பெற ஆரம்பித்தன. ஆகவே பொம்மைக் கடைகளில்கூட இப்போது மரப்பாச்சி பொம்மைகள் காணக் கிடைப்பதில்லை ஆனால், ஆன்மிக பொருட்கள் விற்கும் சில கடைகளில் வாங்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
கலா சாதனாலயா நாட்டியப்பள்ளியின் 'பாவார்ப்பணம்' நிகழ்ச்சி!
Marapachi Dolls

குறிப்பாக யாருக்கேனும் சூடு காரணமாக கிரிக்கட்டி என்ற கண் இமையில் வீக்கம், சிவத்தல், வலி இருக்குமானால் இந்த மரப்பாச்சி பொம்மையை லேசாக உறைத்து, அந்த விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி குணப்படுத்தும் பாட்டி வைத்தியத்துக்கும் இந்த பொம்மைகள் பயன்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com