போகி பண்டிகை என்பது, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’தான். அதாவது பழையனவற்றை வெளியேற்றி. புதியனவற்றை ஏற்கக்கூடிய நாளாக கருதப்படுகின்றது. இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் நம் குழந்தைகளுக்கு இன்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பழையன கழிதல்: அதாவது, பழையன கழிதல் என்பது நம் வீட்டில் பழைய அல்லது பயன்பாட்டில் இல்லாத பொருள் ஒன்றை வீட்டில் வைத்திருப்பது பயனற்றது. பயனற்ற பொருட்கள் அதிகம் வீட்டில் சேர்வதால் வீட்டின் அதிக இடங்களை அடைத்து கொள்ளும். எனவே, அப்படிப்பட்ட பொருட்களை யாருக்காவது பயன்படுமானால் அதை அவர்களிடம் கொடுத்துவிடுவது நல்லது. பலர் போகி அன்று பழையனவற்றை எரிப்பது நல்லது என்று எரித்து விடுவார்கள். ஆனால், ஒரு பொருளை எரிப்பதை விட, அதை உபயோகப்படுவோருக்குக் கொடுப்பது நல்லது என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
புதியன புகுதல்: புதியன புகுதல் என்றால் நாம் வெளியேற்றிய பழைய பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி சேர்பது கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை புதியது போல தூய்மை செய்து வைப்பதுதான் புதியன புகுதல் ஆகும். இப்படி தூய்மை செய்யும் பணியை நாம் அன்றாடம் செய்யாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
போகியும் புதிதாய் நாமும்: போகி என்பது, மார்கழி மாத முடிவிலும், தை மாத தொடக்கத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இதற்கு முன் நம்முடைய மனதில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் மறந்து சிந்தனையில் புத்துயிர் பெற்று, ‘புதிதாய் இன்று பிறந்தோம்’ என்ற சிந்தனையுடன், புதிய உத்வேகத்துடன், புதிய ஆற்றலுடன், உறுதியான மன வலிமையுடன் செயல்பட வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பண்பாடும் கலாசாரமும்: நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த பண்பாடு, கலாசாரம் பற்றிய சரியான தகவல்கள் தெரியாமல் நாம் பல விழாக்களை மறந்து விட்டோம். அந்த வகையில் தமிழர்களுக்கே உரித்தான உழவுத் திருநாளை போற்றும் விதமாக போகியை அடுத்து கொண்டாடப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் தை பொங்கலும், உழவுக்கு பெரும் உதவி புரிந்த மாட்டிற்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கல் அன்று உறவினர்களை சந்தித்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது என்றும் இந்த விழாக்களை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இது நம்முடைய மூதாதையர்கள் வழிவழியாகப் பின்பற்றிய ஒன்று என்று கூறுவதோடு, குழந்தைகளுக்கு நமது பண்பாடு, கலாசாரத்தை எடுத்துக் கூறி, இதை நீங்கள் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- நிதிஷ்குமார் யாழ்