அன்றாட வாழ்வை மேம்படுத்தினாலே நாம் ஒரு விஷயத்தில் சாதித்து விடலாம். எதில் கவனம் செலுத்தினால் நாம் மேன்மையடைலாம் என்று முழுமையாகப் பார்த்தால் நிச்சயமாக குழப்பம் ஏற்படும். அதாவது, குடும்பத்தில் கவனம் செலுத்துவதா? குடும்ப செலவில் கவனம் செலுத்துவதா? வேலையில் கவனம் செலுத்துவதா? நமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதா? என்று ஏகப்பட்ட குழப்பம் ஏற்படும். இவை அனைத்துக்குமாய் வாழ்க்கைக்கான நிவாரணத்தை மூன்றாகப் பிரித்துக் கொண்டாலே பெரும்பாலும் குழப்பங்கள் நீங்கும். அந்த மூன்று விஷயங்கள் என்னவென்றால் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், ஆன்மிக ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியம்: தினமும் காலை, மாலை அல்லது இரண்டு நேரங்களுமே நடைப்பயணம், ஜாக்கிங், எடை தூக்குதல் மற்றும் நீச்சல் ஆகியவற்றை கட்டாயமாக செய்ய வேண்டும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல், ஒருவர் மனதளவில் பாதிக்கப்படும்போது மயக்கம், தலைவலி போன்ற உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படும். நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், எவ்வளவு அழுத்தங்களை நீங்கள் தாங்கினாலும் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
மன ஆரோக்கியம்: மனமும் மூளையும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது படிப்பது, எழுதுவது, கற்றுக்கொள்வது, புதிதாக உருவாக்குவது ஆகியவைதான். இதனை செய்வதால் உங்கள் மூளைக்கும் மனதுக்கும் சிறிது வேலைக் கொடுப்பது போல் இருக்கும். இது உங்கள் உணர்வுடனும் சம்பந்தப்பட்டது. ஆம்! இது ஒருவரின் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வோடு வைத்துக்கொள்ளும். ஆகையால், உங்கள் வேலையில் எந்தவிதமான இடையூரும் இல்லாமல் எளிதாக எதையும் செய்ய முடியும். ஆக, உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் சேர்ந்தால் எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் வேலைகளை செய்யலாம். பல இன்னல்களை ஒரே நேரத்தில் எதிர்க்கொள்ளும் ஆற்றலும் கிடைக்கும்.
ஆன்மிக ஆரோக்கியம்: ஆன்மிக ஆரோக்கியம் என்பது பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதும்தான். கடவுளுக்கான ஒவ்வொரு மந்திரத்திலும் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான பயன்களும் இருக்கும். உதாரணத்திற்கு, ‘ஓம்’ என்ற மந்திரம் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து ஒருவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல், பிரார்த்திப்பதால் நேர்மறை உணர்வுகள் வரவும் காரணமாகிறது.
மேற்கண்ட மூன்று விஷயங்களை செய்வதற்கு தினமும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அதாவது, உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம், மன ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் செய்ய ஒரு மணி நேரம் மற்றும் பிரார்த்தனை, தியானம் செய்வதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கிக்கொள்ளவும். தினமும் மூன்று மணி நேரம் உங்களுக்காக ஒதுக்கினாலே உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை உண்டாகும்.