

புல்லாங்குழலின் தெய்வீக கானத்தை, விசில் இசையாக கொண்டு வர முடியுமா? அப்படி மிக ஒரு அபூர்வமான இசை தரும் “Whistle Wizard “கலைஞர்தான் டாக்டர் சிவபிரசாத் அவர்கள்.
பொதுவாக மூச்சை வெளியிடும்போது மட்டும் வெளிவரும் விசில் ஒலி, மூச்சை உள்ளிழுக்கும் போதும் கானமாக வரும் ஆன்மசக்தியை இளம் வயதிலேயே பெற்ற Prodigy டாக்டர் சிவபிரசாத்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, பக்திப் பாடல்கள், அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் மற்றும் திரைப்படப் பாடல்களை விசில் மூலமாகத் துல்லியமாக இசைப்பதில் வல்லவர்.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாபட்லாவில் பிறந்தவர்.
தற்போது 71 வயதாகும் இவர் தன் 12வது வயதில் முதல் விசில் கச்சேரியை நிகழ்த்தியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை விசிலில் நிகழ்த்தியிருக்கிறார்.
விசில் இசைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவ்ர்.
காஞ்சி காமகோடி பீடம் மற்றும் மைசூர் தத்த பீடத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதி சங்கராச்சார்யா, நீராஜனம் போன்ற திரைப் படங்க்ளிலும் இவரது இசை உண்டு.
1988-89 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியாவின் திருவிழாவில் (Festival of India) இந்திய அரசு சார்பில் பங்கேற்றார்.
உலகின் முதல் விசில் இசை எல்.பி (LP) பதிவை வெளியிட்டவர் என்ற பெருமைக்குரியவர்..
ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும், பாபனாசம் சிவன் மற்றும் பாரதியார் பாடல்கள் போன்ற தமிழிசைப் பாடல்களையும் விசில் இசையில் கொண்டு வரும் அபூர்வக் கலைஞர்.
இவரது மற்றொரு சிறப்பு, இரண்டு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களிடம் இசை நுட்பங்கள் கற்றிருக்கிறார்.
வர்ணங்கள், சாஹித்யம், கிருதிகள், பாவங்கள் போன்றவற்றை பாலமுரளி கிருஷ்ணா, இவரை பிரத்யேக மாணவராக ஏற்று கற்றுக்கொடுத்திருக்கிறார்.
ஹிந்துஸ்தானி இசையின் நுட்பங்களை உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் கற்றுக்கொண்டவர்.
Human Flute, Andra Nightingale, கலா சரஸ்வதி, சங்கீத கலா சாகரா, உட்பட ஏராளமான பட்டங்களும், ஆந்திர அரசின் கலாரத்னா , உகாதி புரஸ்கார், அமெரிக்காவின் விசிட்டா ஆசிய சங்கம் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் போன்ற எண்ணற்ற விருதுகளும் பெற்றவர்.
அண்மையில் ஆடிட்டர் ஜே. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சேம்பர் ம்யூசிக்கில் அவரது marvellous விசில் கச்சேரி நடைபெற்றது.
நாகை முரளிதரன் வயலின், மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கம், மடிப்பாக்கம் முரளி கடம், ஹரிபிரசாத் கஞ்சிரா என்று legend களின் பக்கவாத்தியம்.
வாதாபி கணபதியுடன் கச்சேரி ஆரம்பித்து களைகட்டியது. எந்தரோ மகானுபாவுலு, அதன் சங்கதிகள், பாபனாசம் சிவனின் பராத்பரா பரமேஸ்வரா ஆபேரியில் நகுமோமு கனலோனி என எல்லாப் பாடல்களிலும் வெளிப்பட்ட கல்பனா ஸ்வரங்கள், சங்கதிகள் கமகங்கள் விசில் இசையில் அருவியாகப் பொழிந்தது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும், பாரதியார், பாபனாசம் சிவன் போன்றோரின் தமிழ்ப் பாடல்களும் இவருக்கு அத்துபடி.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நல்லி குப்புசாமி அவர்கள், சிவபிரசாதின் கச்சேரியை வியந்து பாராட்டினார்.
தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்து வரும் சிவபிரசாத் அவர்கள், பல நாட்டு மாணவர்களுக்கும் ஆன்லைனில் இசைப் பயிற்சி அளித்து வருகிறார்.
புல்லாங்குழல் இசை கேட்பது போலவே விசில் இசை தரும் இவர், உலகப் புகழ் பெற்ற அபூர்வமான இசைக்கலைஞர்.