கிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்?

wells...
wells...
Published on

-ம. வசந்தி                                

மது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு டெக்னாலஜி வளராத அந்தக் காலத்திலேயே மிகவும் அருமையாக இருந்திருக்கிறது. கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது, வீட்டில் விசேஷம் ஏற்பாடு செய்வது, எந்தக் கடவுளுக்கு எந்த மாதத்தில் என்ன பிரசாதம் படைப்பது, மூன்று வேளையும் என்ன சாப்பிடுவது, எந்த நோய்க்கு எது மாதிரியான விரதம் இருப்பது என்பது வரை அனைத்துமே விஞ்ஞானத்துடன் ஆன்மீகமும் இயற்கையும் கலந்த கலவையாகத்தான் வாழ்வியலை அமைத்திருக்கின்றனர் .

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ஊருக்கு நடுவில் குளத்தை வெட்டி வைத்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குளத்தை உண்டாக்கி தண்ணீர் சேமித்து வைத்தனர். இதுதான் தண்ணீர் சேமிப்பதன் அடுத்தகட்டமாக அணைகள் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அதேபோல் ஒவ்வொருவர் வயலிலும் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கிணறு தோண்டினர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். அதேபோல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .

ஆனால், இவற்றையெல்லாம் மனதில் கொண்டு மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்று கணித்தனர்.

அதன்பிறகு நல்ல நீரூற்றைக் கண்டறிவதற்காக நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விட்டனர். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள். அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய, சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

தூய நீரைக் கண்டறிந்த நம் முன்னோர்கள் வற்றாத நீரூற்று எந்த இடத்தில் இருக்கிறது என்பதனை அறிய கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்துவிட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேயவிட்டனர். பின்னர் அந்த பசுக்களைக் கவனித்தால் மேய்ந்தபின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து, அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்று கிடைக்குமாம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்கிறீர்களா?
wells...

அதைத்தவிர கிணறுகளை சதுரமாகவோ செவ்வகமாகவோ வேறு வடிவங்களோ இல்லாமல் வட்ட கிணறுகள் வடிவமைத்ததற்கு பின்னும் அறிவியல் காரணம் இருக்கிறது. வட்ட வடிவ கிணறுகள் மிகவும் வலிமையான அடித்தளத்தை கொண்டதாகவும் அவற்றிற்கு மூலைகள் இல்லாததால் இது கிணற்றை சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும். அப்படி இல்லாமல் சதுரமாக இருந்தால் நான்கு மூலைகளிலும் தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு சரிவு அபாயமும் நீண்ட காலம் நீடிக்காமலும் இருந்திருக்கும். அதைத் தவிர தோண்டித்தான் கிணறு அமைக்க வேண்டி இருந்ததால் வட்ட வடிவம்தான் அதற்கு எளிதாக இருந்தது. ஆகையால்தான் நம் முன்னோர்கள் வட்ட வடிவ கிணற்றை வடிவமைத்து இருக்கின்றனர். 

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமாம். அதில் இந்தக் கிணறும் ஒன்றாக இருந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com