
மூடநம்பிக்கைகளில் பலவிதங்கள் உள்ளன. பொதுவாக ஐரோப்பியர்கள் அனைவரும் இந்தியர்கள் மூட நம்பிக்கைகளை கொண்டிருப்பதாக உலகம் முழுக்க கதை பரப்புவார்கள். ஆனால், உண்மையில் அதிக மூட நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான். அவர்களின் சில முட நம்பிக்கைகள் நகைச்சுவையின் உச்சமாக இருக்கும். சில எண்கள், சில நிறங்கள், சில நாட்கள் ஆகியவற்றிற்கு மிகவும் அவர்கள் பயப்படுவார்கள். ஐரோப்பியர்களின் அதீத மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் 13 ஆம் எண் மீதான பயம்.
நீங்கள் சில விமானத்தில் பயணம் செய்யும்போது அதில் உள்ள இருக்கைகளின் எண்களை கவனித்திருந்தால் 13 ஆம் நம்பர் எங்கே? என்று உங்களுக்குள் கேள்வி எழுந்திருக்கும். நீங்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதும் 13வது எண் இல்லாததை கண்டறியலாம். சில நாட்டு விமானங்களில் 12 ஆம் எண் இருக்கைக்கு பின்னர் அடுத்ததாக 14 ஆம் எண் இருக்கைதான் இருக்கும். இடையில் 13 ஆம் நம்பர் இருக்கை இருக்காது. அந்த இருக்கையை வெள்ளையர்களின் மூடநம்பிக்கை என்னும் காக்கா தூக்கிக்கொண்டு போயிருக்கும்.
உலகில் 13 வது எண் மீது ஏராளமான அவநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அந்த மூடநம்பிக்கைகள் ஏற்பட உறுதியான காரணங்கள் இல்லை. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் 13ஆம் நம்பர் கருப்பு எண்ணாக பார்க்கப்படுகிறது. இந்த எண் அதிர்ஷ்டம் இல்லாதது மற்றும் துரததிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்பப்படுகிறது.
வெள்ளையர்கள் 13ம் எண்ணை தங்கள் வீட்டிற்கு வாங்க மாட்டார்கள். அவர்களின் ஹோட்டல்களிலும் 13 வது எண் கொண்ட அறைகள் இருக்காது. சில நாடுகளில் அந்த அரசாங்கமே வீடுகளுக்கு 13 வது எண்ணை கொடுப்பதில்லை. அதுபோல 13 ஆவது குறுக்கு சாலைகளும் இருப்பது இல்லை. இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒரு சில விமான நிறுவனங்களும் நம்புகின்றன.
13 என்ற எண்ணின் மீதான உளவியல் பயத்திற்கு "ட்ரிஸ்கைடேகா ஃபோபியா" என்று பெயர். இந்த எண்ணின் மீதான பயத்தை 1911 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க உளவியல் இதழ் குறிப்பிட்டுள்ளது. இது மத ரீதியாக சில கதைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதில் ஒன்றாக இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், கடைசி இரவு உணவில் 13 வது விருந்தினராக கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பியர்கள் இந்த கருப்பு எண்ணை, தங்களது பூர்வகுடி மதமான நார்ஸ் புராணங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். 12 மாதங்கள் ஒரு முழுமையான அடையாளமாக பார்க்கப்படுகின்றது. 13 என்பது முழுமை இல்லாததும், துரததிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பல விமான நிறுவனங்கள் 13 என்ற எண்ணைத் தவிர்த்துள்ளன.
ஒருவேளை அந்த எண்ணை தவிர்க்காவிட்டால், அந்த இருக்கையில் உள்ள பயணி மூடநம்பிக்கையால், பயத்துடன் பதட்டத்துடன் அந்த பயணத்தை கழிக்கவேண்டும். அது தேவையற்ற மன உளைச்சலையும் பயணிக்கு அளிக்கும் என்பதால் அந்த எண்ணை தவிர்த்து விடுகின்றனர்.
இந்த மூடநம்பிக்கைகள் 13 வது என்னுடன் மட்டும் முடியவில்லை , இத்தாலி, பிரேசில் போன்ற சில நாடுகள், தங்கள் பங்கிற்கு 17வது எண்ணையும் துரததிர்ஷ்மாக கருதுகின்றன. ரோமானிய எண் 17 -XVII என்று எழுதப்படுகிறது. அதை மாற்றினால் VIXI என்று வருகிறது. இது இலத்தீன் மொழியில் "நான் வாழ்ந்து முடித்து விட்டேன்" என்று அர்த்தமாம். இதனால் ஜெர்மனைச் சேர்ந்த லுஃப்தான்சா நிறுவன விமானங்களில் 13 மற்றும் 17 வது எண் கொண்ட இருக்கைகள் இருக்காது.
லுஃப்தான்சா, ரியானேர், ஐபீரியா, ஐடிஏ, கேஎல்எம், ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக், தாய் ஏர்வேஸ், ஹாங்காங் ஏர்வேஸ், வெர்ஜின் அட்லாண்டிக், ஆகிய விமான நிறுவனங்கள் 13 ஆம் எண்ணை பயன்படுத்துவது இல்லை. சீன விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு வரிசைகளையும் தவிர்க்கிறது. அட சீனாவுமா?
இருக்கைகள் மட்டுமல்ல, 13 ஆம் தேதியில் பயணம் செய்வதைக் கூட ஐரோப்பியர்கள் தவிர்க்கின்றனர். அன்றைய தேதிக்கு புக்கிங் குறைவாக இருப்பதால் டிக்கட் விலை 39% வரை மலிவாக இருக்கிறது. 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால், அது இன்னும் மோசமான நாளாகப் பார்க்கப்படுகிறது.