
இந்தியாவை அழகாக்கும் நகரங்கள் பல! பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை ஒவ்வொரு நகரமும், அதன் தனித்துவத்தால் பெயர் பெற்று சிறந்து விளங்கும் நகரங்களின் புகழ் திசை எட்டுத் திக்கும் மணம் கமழ்ந்து வருவது கண்கூடு!
மக்களின் நன் மதிப்பால், போக்குவரத்தின் சீரான ஒழுங்கமைப்பால் தனித்துவம் கொண்ட இந்தியாவின் ஒரே 'அமைதி நகரம்' (Silent City) பற்றி அறிவோமா?
மிசோரம் மாநிலத்தின் தலை நகரம் ஐஸ்வால் (Aizawl) நகரம் தான் இந்தியாவின் ஒரே அமைதி நகரம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
ஐஸ்வால், மிசோரம் மாநிலத்தின் பெரிய நகரம். இம்மாநிலத்தில் உள்ள ஒரே மாநகராட்சியும் இதுவே ஆகும்.
அமைதி நகரம்... காரணம் என்ன?
ஐஸ்வால் நகரம் தனித்துவமானது. இந்நகரமும், இங்கு வாழும் மக்களும் அனைவரையும் ஈர்க்கும்படி சிறப்புடன் உள்ளது.
அமைதி நகரம் என்பது, ஒரு சமூகத்தில் வன்முறை, மோதல், பகைமை இல்லாமல், நல்லிணக்கம், சமாதானம், நட்பு ஆகியவற்றுடன் வாழும் நிலையைக் குறிப்பிடுகிறது.
தனிப்பட்ட மனிதர்களின் நலன், சமூகத்தின் முன்னேற்றம், உலக அமைதி போன்றவற்றை முன்னிலைப் படுத்துவது, முழுமையான வாழ்வை நோக்கிச் செல்வது. மேலும், நகரத்தின் வளர்ச்சி, மக்கள் தொகை, பொருளாதார நிலைமைகளை மட்டுமே பார்க்காமல், அங்கு வாழும் மக்களின் மனநிலை, சமூக உறவுகள், பண்பாடு, நம்பிக்கை போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்வை உருவாக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அன்றாட போக்குவரத்து
இந்தியாவிலேயே போக்குவரத்துக்கு ஐஸ்வால் ஒரு முன் மாதிரி நகரம் என்று சொன்னால், அது மிகை அல்ல!
இடைவிடாமல் வேக வேகமாக மற்ற வாகனங்களை முந்திச் செல்வது ஒரு அநாகரிகச் செயல் என்று, ஒவ்வொருவரும் நாகரிகமற்றவராக மாற ஒரு போதும் விரும்புவதில்லை!
ஐஸ்வால் நகரத்தை பொறுத்தமட்டில் அமைதி என்பது வெறும் சத்தம் இல்லாதது மட்டுமல்ல, நகரத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறைகளின் பிரதிபலிப்பாகும். மக்களின் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு அவ்வளவும் சிறப்பு!
இடதுபுற பாதை
பெங்களூரு, மும்பை, டெல்லி நகர மக்கள் வாழ்நாளில் பாதியை நகர போக்குவரத்தை சமாளிப்பதிலேயே செலவிடுவதாக சொல்லப்படுகிறது.
ஐஸ்வாலில் உள்ளவர்கள் இடதுபுற பாதைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். அது பார்க்கவே ரம்மியமாகவும். வசீகரமாகவும் இருக்கிறது.
இடதுபுற பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனிப் பாதைகள் உள்ளன. சாலைகளில் இடது மற்றும் வலது பாதைகளை பிரிக்க பெரிய பிரிப்பான்கள் (பேரிகாட், தடுப்புச்சுவர் ) அறவே இல்லை.
பெரும்பாலும், வெள்ளை நிற கோடுகள் மட்டும் இருக்கும். அப்படியிருந்தும், இடது பாதையில் உள்ளவர்கள் எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் எந்த வாகனங்களுக்கும் வலது பாதையை பயன்படுத்தும்படி வைத்திருக்கிறார்கள்.
சாலை நெறிமுறைகள், சாலைப் பாதுகாப்பு விதிகள் அர்ப்பணிப்புச் சிந்தனையோடு தீவிரமாக பின்பற்றி வருகிறார்கள்.
அன்பான சைகை
தவிர்க்க முடியாத காரணங்களால் அவசரத்தில் இருக்கும் ஒருவர், முன்னால் செல்லும் வாகனத்திற்குத் தெரியப்படுத்த, லேசான பீப்பீப் ஒலி எழுப்புவது வழக்கம். முடிந்தால், அவர்கள் கடந்து செல்ல அனுமதிப்பார்கள். இந்த அன்பான சைகைக்கு ஈடாக, ஓட்டுநர் வழக்கமாக ஒரு மென்மையான பீப் ஒலி எழுப்புவார். இது இரு தரப்பிலும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதின் வெளிப்பாடு.
மனதை கொள்ளையடிக்கும் காட்சி
மக்கள் தங்கள் வாகனங்களுடன் சாலைகளில் செல்வதை பார்க்கும் போது மனதை கொள்ளையடிக்கும் காட்சிகளாக அனுபவிக்க முடிகிறது.
தங்கள் பாதையை பராமரித்தல், ஒருவரையொருவர் முந்திச் செல்லாமல், ஹாரன் அடிக்காமல், சாலைச் சீற்றம் இல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக சாலைகளில் செல்வோர்கள், வாகனங்களில் செல்வோர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையாக நடந்து கொள்வது என அத்தனையும் வியப்பாக பார்க்கும்படி இருக்கிறது. இது சாதாரண நேரங்களில் மட்டுமல்ல, உச்ச நேரங்களிலும் (Peak Hours) கடைப்பிடிக்கப்படுகிறது.
நம் நாட்டிலா? இப்படி ஒரு ஒழுங்கா? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?