மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட இந்தியா, பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நாட்டில், வெவ்வேறு மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை கொண்டது. இந்நிலையில், இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலம் கோவாதான்; அங்கு வெறும் 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.
இந்தியா நாட்டின் சுற்றுலாத் தலங்களில் அழகிய கடல் கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற கோவாவும் முக்கியமான ஒன்று. கோவா, வடக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு, மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம். குறைவான பரப்பளவையும் குறைவான மக்கள் தொகையையும் கொண்டு இந்தியாவின் மிகச்சிறிய நான்காவது மாநிலமாக கோவா விளங்குகிறது.
இங்கு, கொங்கனி, மராத்தி, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இந்துக்களும், அதற்கடுத்தாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், கணிசமாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். பனாஜி இம்மாநிலத் தலைநகரம். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகவும் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னாலும், போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரம்தான் கோவா. 1961 டிசம்பர் 19-ம் தேதி, ராணுவ நடவடிக்கையின் வாயிலாக இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கு முன்புவரை கிட்டத்தட்ட, 450 ஆண்டுக்காலம் போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பொது வாக்கெடுப்பு மூலம் யூனியன் பிரதேசமாக இருந்த கோவா 1987 ம் ஆண்டு மே 30 ம் தேதி இந்தியாவின் 25 மாநிலமாக மாற்றப்பட்டது.
கோவா மாநிலத்தின் மொத்த பரப்பளவு 3702 சதுர கிலோமீட்டர் மட்டுமே. கோவாவில் மொத்தமே இரண்டு மாவட்டங்கள் தான். ஒன்று வடக்கு கோவா மற்றொன்று தெற்கு கோவா. கோவாவில், ஒரு முனையில் உள்ள பத்ராதேவியிலிருந்து மறுமுனையில் உள்ள போலேம் கடற்கரைக்கு சுமார் 123 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல வெறும் 2.30 மணி நேரம் தான் ஆகும். இது பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாக உள்ளது.
கோவாவுக்கெனப் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. போர்த்துகீசிய ஆட்சியின் போது, இந்தியாவின் முதல் அச்சகம் மற்றும் மருத்துவப் பள்ளி இந்த மாநிலத்தில் நிறுவப்பட்டன. இந்த அச்சகம் 1956 இல் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அச்சகமாகும்.
தனிநபர் வருமானத்தில் மற்ற மாநிலங்களை விட கோவாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் சுற்றுலாத் தலைநகராகவும் அதிக கனிம வளங்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா திகழ்கிறது. மற்ற பெருநகரங்களில் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே 'டூவிலர் டாக்சி' போன்ற விஷயங்கள் அறிமுகமானதும் கோவாவில்தான். இந்தியாவிலேயே பொது சிவில் சட்டம் அமலில் இருப்பதும் ஆசியாவில் உள்ள ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் இருப்பதும் கோவாவில் மட்டும்தான்.
கோவா அதன் வெள்ளை மணல் கடற்கரைகள், உலக பாரம்பரிய பட்டியலிடப்பட்ட கட்டிடக்கலை, வழிபாட்டுத் தலங்கள், வடமேற்கு தொடர்ச்சி மலைகள் மழைக்காடுகள் மற்றும் சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஜுவாரி நதியின் முகத்துவாரத்தில், மர்மகோவா துறைமுகம் உள்ளது. இது தெற்காசியாவின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற பாம் ஜீசஸ் பசிலிக்கா தேவாலயம். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னம் 1605 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரோக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட ஒரு கட்டிடக்கலை அற்புதமாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக 400 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் புனித பிரான்சிஸ் சேவியரின் கல்லறையைக் கொண்டுள்ளது.
கோவா இரண்டு சுதந்திர தினங்களைக் கொண்டாடுகிறது. ஒன்று 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக மாறிய நாள், மற்றொன்று போர்த்துகீசிய கோவா இந்தியாவிடம் சரணடைந்த டிசம்பர் 19.
கோவா கார்னிவல் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படும் உலகப் பிரசித்திப் பெற்ற பண்டிகையாகும். பல ஆண்டுகளாக, இந்த விழா கோவாவின் கலாச்சாரம், நையாண்டி, இசை மற்றும் விரிவான நிகழ்ச்சிகளை கொண்டது. இப்பண்டிகை ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.