ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இது நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும் இது.
பண்டைய கோயில்கள், கல்லறைகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் புராதன நகரங்கள் போன்ற பாரம்பரிய தளங்களை கௌரவிக்கும் நாள்.
புராதனப் பொக்கிஷங்கள் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள்.
உலக பாரம்பரியத் தளங்கள்:
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலை அமைப்பு, சுருக்கமாக யுனெஸ்கோ ( UNESCO) 1972 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியத் தளங்கள் திட்டத்தைத் துவக்கி, உலக பாரம்பரிய அமைப்பின் வழிகாட்டுதலின்படி, உலகின் சிறந்த மதிப்பீடுகள் கொண்ட தளங்களை ‘உலக பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில் சேர்க்கிறது.
“கலாச்சாரம், இயற்கைப் பின்னணி, கலாச்சாரமும் இயற்கையும் இணைந்த பின்னணி” ஆகிய மூன்றின் அடிப்படையில், ஆகச்சிறந்த மதிப்பீடுகளைக் கொண்ட தளங்கள் உலகின் சிறந்த மதிப்பீடு பெறுகின்றன.
உலக பாரம்பரிய சின்னம் என்ற அடையாளத்தால் என்ன பயன்?
உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்து உலக அளவில் நமக்குப் பெருமை தருகிறது. நமது நாட்டின் கலைப் பொக்கிஷங்களின் பெருமையை நம் நாட்டின் இளம்தலைமுறையினர் மற்றும் வெளிநாட்டினர் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. சுற்றுலா மேம்படுகிறது. சுற்றுலாத் தொழிலை உள்ளடக்கிய தொழில்களும் வர்த்தகமும் வளர்கிறது. யுனெஸ்கோ நிதியும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் கவுன்சில் (ICOMOS)
சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் கவுன்சில் (ICOMOS) 1965 ஆம் ஆண்டில் வார்சா நகரத்தில் தொடங்கப்பட்டது. பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது இந்த அமைப்பு. உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்குத் தகுதியான தளங்களை யுனெஸ்கோ நிறுவனத்துக்கு பரிந்துரை செய்வதிலும் ICOMOS முக்கியப் பொறுப்பு வகிக்கிறது.
உலக பாரம்பரிய தினம் அல்லது நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம், 1982 ஆம் ஆண்டு ICOMOS ஆல் முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 1983 ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சர்வதேச பாரம்பரிய தினம், கலாச்சார பன்முகத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் பாரம்பரிய தளங்களின் பாதிப்பு குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக இது ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும், உலக பாரம்பரிய தினம் ஒரு தனித்துவமான கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
ICOMOS அமைப்பின் அறுபது வருட முயற்சிகளையும் சாதனைகளையும் சிறப்பிக்கும் வண்ணம், இந்த ஆண்டின் கருப்பொருள் அமைந்துள்ளது.
"பேரழிவுகள் மற்றும் மோதல்களிலிருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளான பாரம்பரியம் : 60 ஆண்டுகால ICOMOS செயல்களிலிருந்து தயார்நிலை மற்றும் கற்றல்" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
இந்த ஆண்டின் கருப்பொருள் ICOMOS இன் மூன்று ஆண்டு அறிவியல் திட்டம் (TSP) 2024–2027 உடன் தொடர்புடையது, பாரம்பரியச் சின்னங்களின் மீது இயற்கைப் பேரழிவு மற்றும் மோதல் சிக்கல்கள் சூழல்களை எதிர்த்து பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
இத்திட்டம் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை உத்திகளைக் கோருகிறது:
பாரம்பரியச் சின்னங்களுக்கான ஆபத்துகளைக் குறைப்பது
ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பது
பேரிடர்களைத் திறம்பட சமாளிப்பது
பேரிடருக்குப் பிந்தைய மீட்பு
இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியத் தளங்கள்
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( UNESCO ) இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் உடைய மனித பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இடங்களை உலக பாரம்பரியத் தளங்களாக அறிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் மனித வளத்துறையின் கீழ் செயல்படும், “யுனெஸ்கோ ஒத்துழைப்புக்கான” இந்திய தேசிய ஆணையமும், இந்திய தொல்லியல்துறையும் நமது நாட்டின் புராதனச் சிறப்பு மிக்க இடங்களை, உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
உலகப் பண்பாட்டுத் தளங்களின் வரிசைப்பட்டியலில் நமது நாட்டின் தளங்கள் தற்போது கவனம் பெறுகின்றன. கடந்த ஆண்டு வரை உலக பண்பாட்டுத் தள பட்டியலில் தாஜ்மகால், சாந்திநிகேதன், பிருகதீசுவரர் கோவில் உள்ளிட்ட நாற்பத்து மூன்று தளங்களுடன் முதல் பத்து நாடுகளில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது இந்தியா.
மேலும், 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி யுனெஸ்கோவின் உத்தேசப் பட்டியலில் அறுபத்து இரண்டு தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு யுனெஸ்கோவின் “உத்தேசப் பட்டியலில்” நமது நாட்டின்
முதுமல் மெகாலிதிக் மென்ஹிர் ( முதுமல் பெருங்கற்கால பெருங்குத்துக்கற்கள் )
பண்டேலா அரண்மனைக் கோட்டைகள்
கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
அசோகரின் பிரகடனக் கல்வெட்டுகள்
சௌசத் யோகினி கோவில்கள்
குப்தர் காலக் கோவில்கள்
ஆகிய ஆறு தளங்கள் இடம் பிடித்து உள்ளன.
உலக பாரம்பரிய தினத்தை எவ்வாறு கொண்டாடலாம் ?
உலக பாரம்பரிய தினத்தின் வரலாறு,சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்வது
மற்றவர்களுக்கு இத்தினத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்வது
உலக பாரம்பரியச் சின்னங்களைப் பற்றி அறிதல்
நமது நாட்டின் உலக பாரம்பரிய சின்னங்களைப் பற்றிய சின்னங்களை அறிவது
பாரம்பரியச் சின்னங்கள் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லுதல்
இணைய வழி நிகழ்வுகளில் பங்கு கொள்ளுதல்
மாணவ மாணவியருக்கு உலக பாரம்பரியச் சின்னங்கள் பற்றிய தகவல்களை எடுத்துச் சொல்லுதல்
இன்னும் உங்களது கற்பனையில் தோன்றும் வகையிலும் இத்தினத்தைக் கொண்டாடலாமே !
பாரம்பரியம் போற்றுவோம் ! புராதனப் பொக்கிஷங்களை பாதுகாப்போம்!