ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் பதினெட்டாம் தேதி உலக பாரம்பரிய தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புமிக்க தினத்தன்று நம் கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பதிவின் வாயிலாக உலக பாரம்பரிய தினத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்டு, அவற்றைப் பாதுகாப்பதில் நமது பொறுப்பு என்னவென்பதைப் புரிந்து கொள்வோம்.
World Heritage என்றால் என்ன?
உலக பாரம்பரியம் என்பது மனித குலத்திற்கு சிறந்த மதிப்பை வழங்கும் இயற்கை மற்றும் கலாச்சார தளங்களைக் குறிக்கிறது. இத்தகைய இடங்கள் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த அமைப்பு இத்தகைய குறிப்பிட்ட இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு இத்தகைய இடங்களைப் பாதுகாத்து தெரியப்படுத்துவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது.
கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்: கலாச்சார பாரம்பரிய தளங்கள் மனிதர்களின் வரலாறு, மரபுகள் மற்றும் அவர்களின் படைப்பாற்றல் ஆகியவற்றின் விலை மதிப்பற்ற சான்றுகளாகும். தொல்பொருள் தளங்கள், வரலாற்று நகரங்கள், கலாச்சார நிலப்பரப்புகள் மற்றும் நமது உலகத்தை வடிவமைத்த பல்வேறு நாகரிகங்களுக்கு சாட்சியாக இருக்கும் நினைவுச் சின்னங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.
நகரமயமாக்கல், போர், காலநிலை மாற்றம் மற்றும் புறக்கணித்தல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து, இத்தகைய தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த உலக பாரம்பரிய தினம் எடுத்துரைக்கிறது. நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலம் நமது முன்னோர்களுடன் ஆழமான தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த தளங்கள் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளூர் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன. உதாரணத்திற்கு சென்னை மகாபலிபுரத்தை எடுத்துக் கொண்டால், அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட கோவில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்: இயற்கை பாரம்பரியம் என்பது பூமியின் அசாதாரண பல்லுயிர் மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் இடங்களாகும். இவற்றில் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகள், கடல் வாழ் உயிரின சரணாலயங்கள் மற்றும் நமது பூமியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு அத்தியாவசியமாக இருக்கும் தனித்துவமான நிலப்பரப்புகள் ஆகியவை அடங்கும். உலகப் பாரம்பரிய தினம், இதுபோன்ற சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு தெரியப்படுத்துகிறது. இதன் மூலமாக அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கலாம்.
இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்த சிறப்பு வாய்ந்த நாளில், நமது கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தங்களால் முடிந்த விஷயங்களைச் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற இடங்களுக்குச் செல்லும்போது அவற்றை சேதப்படுத்தாமல் பொறுப்புடன் நடந்து கொண்டாலே, நாம் நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், இயற்கைக்கும் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். இன்று முதல் இதைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.