மனித வரலாற்றை மாற்றியெழுதும் குகை ஓவியங்கள்: ஐரோப்பாவை முந்திய ஆசியா!

oldest narrative art - குகை ஓவியங்கள்
oldest narrative art - குகை ஓவியங்கள்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

இந்தோனேசியாவில் உள்ள முனா மற்றும் 'சுலாவேசி' தீவுகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களே உலகின் மிகப் பழமையான பாறை மற்றும் குகை ஓவியங்களாகக் கருதப்படுகின்றன. ஐரோப்பாவை விட ஆசியாவில் தான் மனிதக் கலை மற்றும் கதை சொல்லும் மரபு மிகவும் முந்தைய காலகட்டத்தில் தோன்றியுள்ளது என்பதை இவை நிரூபிக்கின்றன. இவை மனித குலத்தின் பழமையான கதைகள் மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன.

கை அச்சு ஓவியங்கள்:

குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மற்ற ஓவியங்களில் பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளுடைய அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன.

இந்தோனேசியாவின் முனா (Muna) தீவில் உள்ள சுண்ணாம்புக் குகையில் கண்டறியப்பட்ட இந்த கை அச்சு ஓவியங்கள் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானவை.

சுலாவேசி தீவில்(Sulawesi) உள்ள குகைகளில் காணப்படும் கை அச்சு ஓவியங்களின் விரல் நுனிகள் விலங்குகளின் நகங்களைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளன. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய வரலாற்றை முறியடித்த ஆசியாவின் குகை ஓவியங்கள்:

இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானவை என்றும், இது ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானது என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

oldest narrative art - குகை ஓவியங்கள்
oldest narrative art - குகை ஓவியங்கள்AI Image

தெற்கு சுலாவேசியில் உள்ள மரோஸ்- பாங்கெப் (Maros-Pangkep) பகுதியில் லியாங் கரம்புவாங் (Leang Karampuang) குகையில் ஒரு பெரிய காட்டுப் பன்றியும், அதனைச் சுற்றி மூன்று மனித உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இது வெறும் விலங்குகளின் சித்திரம் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு கதை போல இந்த ஓவியம் விவரிக்கிறது. இது உலகின் மிகப் பழமையான உருவப்படம் மற்றும் கதை சொல்லும் (Narrative Art) குகை ஓவியமாகும். இந்த ஓவியம் 51,200 ஆண்டுகள் பழமையானது.

மனித வரலாற்றில் கதை சொல்லும் கலைக்கு இதுவே உலகின் மிகப் பழமையான சான்றாகும். இந்த ஓவியங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, கலை மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. இதற்கு முன் சுலாவேசியில், பறவைத் தலையுடன் கூடிய மனித உருவங்கள் போன்ற 48,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்னதாக, மனிதர்களின் கலை மற்றும் படைப்பாற்றல் ஐரோப்பாவில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் குகைகளில்தான் முதலில் தோன்றியதாக கருதப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் காணப்படும் குகை ஓவியங்களைவிட இவை பல நூற்றாண்டுகள் பழமையானவை.

இதையும் படியுங்கள்:
மைசூர் யோகா: ஏன் இது உலகம் முழுவதையும் ஈர்க்கிறது?
oldest narrative art - குகை ஓவியங்கள்

இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகியவற்றை உள்ளடக்கிய பழங்கால சஹுல் கண்டத்திற்கு மனிதர்கள் 65,000 ஆண்டுகளுக்கு முன் கடல் பயணம் செய்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படிச் சென்றவர்களே இந்த கை அச்சுகளை உருவாக்கியவர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொகுப்பின் மூலம் மனித நாகரிகம், கலை மற்றும் சிந்தனைப் பரிணாமம் எங்கு, எப்படித் தொடங்கியது என்பதைப் பற்றிய தெளிவான உலகளாவிய பார்வையைப் பெறுவீர்கள். வரலாற்றுப் பக்கங்களில் ஆசியாவின் முதன்மையை உணர்ந்து, தொல்பொருள் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளும் அறிவார்ந்த மாற்றத்தை அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com