Yasuke
Yasuke

Yasuke: வரலாற்றின் ஒரே ஆஃப்ரிக்கன் சாமுராய்… அடிமையிலிருந்து சாமுராயான கதை!

ஜப்பான் ராஜாக்களின் ராணுவ படையில் இருக்கும் வீரம் மிகுந்த அதிகாரிகளை சாமுராய் என்று அழைப்பார்கள். அத்தகைய சாமுராய்களில் ஜப்பான் வரலாற்றிலேயே ஒரே ஒருவர் மட்டுமே ஆஃப்ரிக்கன் (கருப்பு சாமுராய் என்றும் சொல்வார்கள்) சாமுராயாக இருந்திருக்கிறார். ஜப்பானின் வரலாற்று வெற்றிகளில் பெரும் பங்காற்றிய இவருடைய கதை, இப்போது அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அது ஏன் என்றும், அவரின் கதைப் பற்றியும் பார்ப்போம்.

யசுகே (Yasuke) என்றழைக்கப்படும் இந்த சாமுராயின் கதைகள் வரலாற்றுப் புத்தகங்களில் கூட ஆங்காங்கே தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையாலே, ஜப்பான் மக்கள் அந்த குறிப்புகளை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்தனர். ஆனால், சமீபக்காலமாக யசுகேவின் புகழ் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது.

அதாவது, யசுகேவின் கதாப்பாத்திரத்தைக் கொண்டு சமீபத்தில் ஜப்பானில் ஒரு வீடியோ கேம் உருவாக்கப்பட்டது. அதேபோல் 2019ம் ஆண்டு நடிகர் சாட்விக் போஸ்மேன் இறப்பிற்கு முன்னர் அவர் ஒரு படத்தில் கம்மிட்டானதாகக் கூறப்பட்டது. ஆம்! அது யசுகேவின் வாழ்க்கை வரலாற்றுக் கதைதான். அதேபோல் அனிமேஷன் தொடராக நெட்ஃப்லிக்ஸில், யசுகேவின் வாழ்க்கை வரலாறு சீரிஸாக வெளியிடப்பட்டது. ஆகையால்தான், யசுகே பற்றி உலக மக்கள் அறிந்துக்கொள்ள விரும்புகின்றனர்.

முந்தய காலங்களில், ராஜாக்களின் படைகளில் கோழைகள் இருந்தாலும் கூட அண்டை நாட்டவர்களை படைக்குள் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அது யசுகே கதையில் நேர்மாறாக அமைந்தது. ஒரு அண்டை நாட்டவர், ஜப்பானின் பல போர்களில் வீரம் மிக்க செயல்களைச் செய்து ஜப்பானையும் ஜப்பான் மக்களையும் காத்தவராக விளங்கினார், யசுகே. அதனாலயேதான் அவர் இந்தளவு ஜப்பான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

Yasuke Fighting Creative Art
Yasuke Fighting Creative art

16வது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஃப்ரிக்காவின் மொசாம்பிக் பகுதியில் பிறந்தவராகக் கருதப்படும் யசுகே, இத்தாலியில் இருந்த அலெஸாண்ட்ரோ என்ற ஒருவருக்கு அடிமையாக  விற்கப்பட்டார். பின்னர் 1579ம் ஆண்டு அலெஸாண்ட்ரோ ஜப்பானுக்கு செல்லும்போது அவருடன் யசுகேவையும் அழைத்துச் சென்றார். அந்த வருகையே அடிமையாக இருந்த அவர், சாமுராயாக மாற வழி வகுத்தது.

ஜப்பானின் மிகவும் திறமைவாய்ந்த போர்வீரனாக இருந்த ஓடா நொபுனாகா, யசுகேவின் கம்பீரமான தோற்றத்தையும், நிறத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உயரத்தில் ஜப்பானியர்களைவிட மிகவும் உயரமாக இருந்த அவரிடம் ஒரு ஆற்றல் உள்ளது என்பதை உணர்ந்த ஓடா, அவரை அடிமையிலிருந்து மீட்டு ஆயுதப் பயிற்சியளித்தார். பின்னர் ஓடா, தான் சென்ற அனைத்துப் போர்களுக்கும் அவரையும் அழைத்துச் சென்றார்.

அவர் எண்ணியதைவிடவும் போரில் சிறப்பாக பங்காற்றினார், யசுகே. அவர்கள் இணைந்துப் போரிடும் அனைத்து எதிரணிகளும் தவிடுபொடியாகின. ஆகையால், விரைவிலேயே ஓடா அவருக்கு சாமுராய் பட்டத்தை வழங்கினார். வெளிநாட்டவராக இருந்தாலும், அவரின் வீரத்திற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே ஓடாவின் எண்ணமாகும்.

ஆனால், வெகுவிரைவில் ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தது. ஓடா தன்னுடைய நண்பனாக நினைத்த ஒருவரின் சூழ்ச்சியினால், தற்கொலை செய்துக்கொண்டார். அதன்பின்னர், யசுகே அந்தப் படையிலிருந்து வெளியேறும் நேரமும் வந்தது. ஓடா படையிலிருந்து வெளியேறிய யசுகே, மற்றொரு போர்வீரன் டொயொடோமி படையில் சேர்ந்தார்.

இதையும் படியுங்கள்:
Derinku: உலகின் மிகப்பெரிய பாதாள நகரத்தின் சுவாரசிய உண்மைகள்!
Yasuke

அவர் ஜப்பானில் இருந்து பிரிந்த அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு படையை உருவாக்கினார். அந்தப் படையில் சேர்ந்த யசுகே, சில காலங்களில் பல போர்களில் பங்கேற்று வெற்றியும் பெற்றுக்கொடுத்தார். ஆனால், டொயொடோமி இறந்தப் பின்னர் யசுகே எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று எதுவுமே தெரியவில்லை.

அவருடைய கடல் போன்ற பயணத்தின் கரையை அவர் மட்டுமே அறிவார். ஆனால் தற்போது உலக மக்கள், அவரின் அந்தக் கடல் போன்ற பயணத்தை மட்டுமே அறிந்துக்கொண்டு வியப்படைகின்றனர். அவரைப் பற்றி நிறைய தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஜப்பான் மக்கள் பல வரலாற்றுப் புத்தகங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com