கிரேக்க கடவுள்களின் தலைவனாக சியுஸ் (Zeus) எப்படி மாறினார்... இதோ அந்த பிரம்மாண்டமான வரலாறு!

Zeus History
Zeus History
Published on

கிரேக்க புராணங்கள் என்றாலே பிரம்மாண்டமான அரக்கர்கள், மாயாஜாலங்கள் மற்றும் கடவுள்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள் போன்றவை என்பது நம்மில் பெரும்பாலானோருக்குக் தெரியும். அந்த வகையில் ஒரு மிகப்பெரிய இருண்ட காலத்தில் இருந்து வெளிச்சத்திற்கு வந்து, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்தான் சியுஸ் (Zeus). 

அவர் ஏதோ அதிர்ஷ்டத்தாலோ அல்லது தற்செயலாகவோ ஒலிம்பஸ் (Olympus) மலையின் சிம்மாசனத்தில் அமரவில்லை. தனது அபாரமான தைரியம், சாதுரியம், ஒரு சிறந்த தலைமைப் பண்பால் அந்த மாபெரும் பதவியை அவர் அடைந்தார். சியுஸ் எப்படி மற்ற அனைத்து சக்திவாய்ந்த கடவுள்களையும் தாண்டி ராஜாவாக முடிசூட்டப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அப்பாவை எதிர்த்த மாபெரும் போர்!

சியுஸ் ஆட்சிக்கு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த உலகம் டைட்டன்கள் (Titans) எனப்படும் அரக்கர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவர்களின் தலைவனான குரோனஸ் என்பவர்தான் சியுஸின் தந்தை. தனக்கு பிறக்கும் குழந்தைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அதீத பயத்தில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் குரோனஸ் ஈவு இரக்கமின்றி அப்படியே முழுங்கத் தொடங்கினார். 

இதைப் பார்த்து பதறிப்போன சியுஸின் அம்மா ரியா, ஒரு பாறையை துணியில் சுற்றி தன் கணவனை ஏமாற்றிவிட்டு, குழந்தை சியுஸை ஒரு ரகசிய குகையில் வைத்து வளர்த்தார். கொஞ்சம் பெரியவனானதும் இந்த அநியாயங்களை தட்டிக்கேட்க நினைத்த சியுஸ், ஒரு சூப்பர் தந்திரம் செய்து தன் தந்தை முழுங்கிய தனது அண்ணன் தம்பிகளை பத்திரமாக மீட்டு எடுத்தார். அதன் பிறகு டைட்டன்களுக்கு எதிராக அவர் நடத்திய அந்த வரலாற்றுப் போர் சுமார் பத்து வருடங்கள் நீடித்தது.

வெறும் பலம் மட்டும் போதாது!

இந்தப் போரில் சியுஸ் தனது உடல் பலத்தை மட்டும் நம்பி களத்தில் இறங்கவில்லை. தனது மூளையையும் அவர் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார். சைக்ளோப்ஸ் (Cyclops) எனப்படும் ஒருக்கண் அரக்கர்களை விடுவித்து, அதற்கு பரிசாக அவர்களிடம் இருந்துதான் அந்தப் புகழ்பெற்ற இடி மற்றும் மின்னல் ஆயுதங்களை அவர் பெற்றார். ஒரு வழியாகப் போர் முடிந்து டைட்டன்கள் பாதாள உலகத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
'சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு...'
Zeus History

அதன் பிறகு கடலை ஆளும் பொறுப்பு போஸைடனுக்கும் (Poseidon), பாதாள உலகத்தின் பொறுப்பு ஹேடஸுக்கும் (Hades) பிரிக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் வானத்தையும் அடக்கியாளும் அந்த உச்சபட்ச அதிகாரம் சியுஸின் கைக்கே வந்தது. அதற்கு முக்கிய காரணம், எப்பேர்ப்பட்ட குழப்பமான சூழ்நிலையையும் மிக லாவகமாக கையாண்டு ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் அவரது அபாரமான திறமைதான்.

நீதி தவறாதவன்!

சியுஸ் வெறும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு மட்டும் எல்லோரையும் மிரட்டி ஆளவில்லை. தேவர்களுக்கு இடையே ஏதாவது பெரிய சண்டை வந்தாலோ, மனிதர்கள் வரம்பு மீறி நடந்தாலோ, அதைத் தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த நீதிபதியாக அவர் மாறினார். பொய் சொல்பவர் களையும், சத்தியத்தை மீறுபவர்களையும் ஈவு இரக்கமின்றி தண்டித்த அதே வேளையில், கஷ்டப்படும் பயணிகளுக்கும் சாதாரண குடும்பங்களுக்கும் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக அவர் விளங்கினார். அவரிடம் சில நேரங்களில் அதீத கோபமும் எதிர்பாராத சில மாற்றங்களும் இருந்தாலும், நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதில் அவர் எப்போதுமே ஒரு படி மேல்தான் நின்றார்.

இதையும் படியுங்கள்:
கலோரிகள் எரிக்க 'நீண்ட நேரம்' தேவையில்லை! 10 நிமிட HIIT பயிற்சியின் பலன்கள்!
Zeus History

சியுஸின் இந்த நீண்ட கால ஆட்சிக்கு மிக முக்கிய காரணம், அவர் அமைதியையும் அதிரடியையும் ஒரே தராசில் வைத்து சரியாக பேலன்ஸ் செய்ததுதான். ஒரு பக்கம் பிரபஞ்சத்தை அமைதியாக வைத்திருப்பார், மறுபக்கம் கோபம் வந்தால் ஒட்டுமொத்த உலகத்தையும் தலைகீழாக மாற்றிவிடுவார். 

வானத்தில் இடி சத்தம் கேட்கிறது என்றால், அது வெறும் இயற்கையின் சீற்றம் கிடையாது, அது சியுஸ் என்ற அந்த மாபெரும் சக்திவாய்ந்த ராஜாவின் அதிகாரத்தின் குரல் என்றுதான் கிரேக்கர்கள் நம்பினார்கள். இந்த ஒரு தனித்துவமான குணம்தான் அவரை ஒலிம்பஸ் மலையின் நிரந்தர ராஜாவாக இன்றுவரை சிம்மாசனத்தில் அமர வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com